Published:Updated:

உணவு யுத்தம்!

உணவு யுத்தம்!

உணவு யுத்தம்!

உணவு குறித்து ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக அறிவுரைகள், ஆலோசனைகள், பயமுறுத்தும் எச்சரிக்கைகளை மக்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதில் எது உண்மை, எது பொய் என அவர்களால் வேறுபடுத்திக் காண முடியவில்லை.

'காலை எழுந்தவுடன் காபி குடிக்கக் கூடாது, வேண்டுமானால் க்ரீன் டீ குடியுங்கள்’ என ஒருவர் ஆலோசனை சொல்கிறார். மற்றவர், 'க்ரீன் டீயை விடவும் 'சாமோமிலா’ அல்லது 'கிரான்பெரி டீ’ குடியுங்கள், அதுதான் நல்லது’ என்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'இரண்டும் விலை அதிகம். ஆகவே, வெந்நீரில் தேன் கலந்து எலுமிச்சை சாறுவிட்டுக் குடியுங்கள், அதுதான் உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது’ என்கிறார் மூன்றாம் நபர்.

'இவற்றைவிடவும் அருகம்புல் சாறு, கேரட் சாறு குடியுங்கள், அது உடல் நலத்தை மேம்படுத்தும்’ என்கிறார் மற்றவர். இவை எல்லாவற்றையும்விட 'நீராகாரம்தான் உடல் சூட்டை தணிக்கும்’ என்கிறார்கள் கிராமவாசிகள். 'இளநீர் குடிப்பதுதான் எல்லாவற்றிலும் சிறந்தது’ என்கிறது ஒரு கூட்டம். 'அதிகாலை ஒரு லிட்டர் தண்ணீர் குடியுங்கள் அதுவே சிறந்தது’ என்கிறது இன்னொரு தரப்பு.

இவை எல்லாம் பழைய பழக்கங்கள்... காலை எழுந்தவுடன் 'ஐஸ் காபி அல்லது கூல் ட்ரிங்ஸ்’ குடிப்பதுதான் புத்துணர்வு தருகிறது என்கிறார்கள் இளைஞர்கள். இந்தக் குழப்பத்துக்குள் என்ன குடிப்பது என முடிவு செய்ய முடியாமல் கிடைப்பதைக் குடித்துக்கொண்டு அன்றைய நாளை சந்திக்கத் தயாராகிறார்கள் பெருமளவு மக்கள்.

இப்படியாக விடிந்தது முதல் இரவு உறங்குவது வரை நாள் முழுவதும் உணவு சார்ந்த பயமுறுத்துதல்கள் நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன. போன தலைமுறையில் இவ்வளவு உணவுச் சிக்கல்கள் உருவாகவில்லை.

உணவு குறித்து மட்டும் ஏன் இத்தனை இலவச ஆலோசனைகள், அறிவுரைகள், பொய்கள்... ஏன் இவற்றைக் கண்டு மக்கள் பயப்படுகிறார்கள்?

உணவு யுத்தம்!

வீட்டு உணவைவிட ஹோட்டல் உணவுதான் ருசியானது என்ற எண்ணம் ஆழமாக வேரூன்றிவிட்டது. ஒரு நடுத்தர வர்க்க குடும்பம் முன்பு, வாரம் ஒருமுறை வெளியே சாப்பிடுவார்கள். இன்று சராசரியாக வாரம் நான்கு முறை வெளியே சென்று சாப்பிடுகிறார்கள். இதில் பன்னாட்டு உணவு நிறுவனங்கள் 'நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை ஆகவே வீட்டில் சமைக்க வேண்டாம், எங்கள் பீட்சாவை சாப்பிடுங்கள்’ என்று குறுஞ்செய்தி வேறு அனுப்புகிறார்கள்.

முன்பு வீடுகளில் வயதானவர்கள் தங்கள் அனுபவத்திலிருந்து எதை எப்போது எப்படிச் சாப்பிட வேண்டும் என ஆலோசனை சொல்வார்கள். சில நேரம் மருத்துவர்கள் என்ன சாப்பிடலாம், எதைச் சாப்பிடக்கூடாது என அறிவுரை கூறுவார்கள்.

இன்று எல்லா ஊடகங்களிலும், விளம்பரங்களிலும் உணவு குறித்து விதவிதமான செய்திகள், எச்சரிக்கைகள், பொய்யான தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. ஏதேதோ விஷயங்களுக்குப் பொதுநல வழக்குகள் தொடுக்கப்படுவதுபோல உணவுப் பொய்களைப் பரப்பும் விளம்பரங்கள் குறித்துப் பொதுநல வழக்குகள் தொடுக்கப்படுகிறதா எனத் தெரியவில்லை.

இந்தப் பொய்களை உருவாக்குவதில் தொலைக்காட்சி விளம்பரங்களே முதலிடம் பெறுகின்றன. மக்கள் அறியாமையை முதலீடாக்கி பொய்களை விற்கிறார்கள். இப்படி ஏமாந்து போகிறவர்களில் பெருமளவு படித்தவர்கள் என்பதுதான் கசப்பான உண்மை.

பிரிட்டிஷ் பிரதமராக இருந்த பெஞ்சமின் டிஸ்ரேலி ஒரு முறை சொன்னார்: 'மூன்றுவிதப் பொய்கள் இருக்கின்றன. ஒன்று சாதாரணப் பொய். அடுத்தது அண்டப் புளுகு. மூன்றாவது புள்ளிவிவரம்.’

உணவுப் பொருட்களை விளம்பரப்படுத்தும்போது அவர்கள் தரும் புள்ளிவிவரங்கள்தான் பொய்களின் உச்சம். இந்தப் பொய்களை யாராவது என்றாவது ஆராய்ந்து சரி பார்த்திருக்கிறார்களா என்ன?

எங்கிருந்து இந்தப் பொய்கள் உற்பத்தியாகின்றன? பாரம்பர்யமாக நாம் உட்கொள்ளும் உணவுகளை இப்படிப் பொய் சொல்லி ஏமாற்ற முடியாது. ஆனால், வெளிநாட்டு உணவு வகைகளைப் பொறுத்தவரை அதன் விற்பனையை அதிகரிக்கப் பொய்களை அள்ளிவிடுகிறார்கள். அறிவியல் சொற்களைப் பயன்படுத்தி எதைச் சொன்னாலும் மக்கள் எளிதாக நம்பிவிடுவதுதான் இந்தப் பொய்களின் அடிப்படை.

'அமெரிக்காவின் பிரபலமான 10 உணவுப் பொய்கள்’ என்ற பட்டியல் ஒன்றை இணையத்தில் வாசித்தேன்.

அவை...

1) 'லோ கலோரி’ என்ற பெயரில் விற்கப்படுகிற உணவில் கொழுப்பு நீக்கப்படுகிறது. ஆனால் சுவைக்காக ரசாயனப் பொருட்கள், சுவையூட்டிகள், அதிக இனிப்புச் சேர்க்கப்படுகிறது. இது உடலுக்குக் கெடுதல் தரக்கூடியது.

2) மல்டி கிரைன் அல்லது ஹோல் கிரைன் என விளம்பரப்படுத்தப்படுவதில் உண்மை இல்லை.

3) 'ஃப்ரூட் ஃபிளேவர்டு’ எனக் கூறப்படுகிற குளிர்பானங்கள் நிஜமான பழச்சாறுகள் இல்லை. அவை சர்க்கரையும் பழத்தின் சுவையைப் போலவே ருசி தரும் ரசாயனங்களும் கொண்டவை.

4) 'ஜீரோ கலோரி’ எனப்படும் குளிர்பானங்களில் செயற்கை சுவையூட்டிகள், சர்க்கரை சேர்க்கப்படுகின்றன.

5) சாக்லெட் சாப்பிட்டால் பாலுணர்வு தூண்டப்படும் என்பது ஒரு கற்பிதம்.

6) இயற்கையான தேன் என விற்கப்படுவதில் பாதிக்கும் மேல் செயற்கையாகத் தயாரிக்கப்படுகிறது, ஆனால், விளம்பரங்களில் அது சுட்டிக்காட்டப்படுவது இல்லை.

7) 'ஊட்டசக்தி தரும் பானம் குடித்தால் ஞாபகசக்தி வளரும்’ என விளம்பரம் சொல்வது பொய்.

8) விட்டமின்கள் அதிகம் எனக் கூறி விளம்பரப்படுத்தப்படும் உணவுப்பொருட்களில் அவை செயற்கையான ரசாயனப் பொருட்கள் என்பது மறைக்கப்படுகிறது.

9) இதயத்துக்கு வலுவூட்டக்கூடியது என விளம்பரப்படுத்தும் எண்ணெய்கள் உடல்நலத்துக்கு உகந்தவை இல்லை.

10) மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது எனக் கூறப்படும் உணவு விளம்பரங்களில் எந்த மருத்துவர், என்ன காரணத்துக்காக அதைப் பரிந்துரை செய்தார்? அதைப் பற்றி உண்மைகள் வெளியிடப்படுவது இல்லை.

இவை எளிமையான விளம்பர தந்திரங்கள் என்கிறது அந்த அறிக்கை.

ஆனால், இந்தியாவில் இதுபோல நூறாயிரம் பொய்கள் உலவுகின்றன. அவற்றை யார் எப்படி அடையாளப்படுத்துவது, விழிப்பு உணர்வு ஏற்படுத்துவது?

இந்திய ஊடகங்களில் மூன்று வகையான உணவுப் பொய்கள் உலவுகின்றன. ஒன்று குழந்தைகளையும் இளைஞர்களையும் கவர்ந்து இழுப்பதற்காகச் சொல்லப்படும் பொய்கள். இவைதான் சாக்லெட் விளம்பரங்கள், நூடுல்ஸ், பீட்சா விளம்பரங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

சமீபமாக வெளியாகும் சாக்லெட் விளம்பரங்களைப் பாருங்கள். இதில் குழந்தைகளைவிடவும் இளம்பெண்கள் சாக்லெட் சாப்பிடுவதையே முதன்மைப்படுத்துகிறார்கள். ஏன் இளைஞர்களை நோக்கி சாக்லெட் நிறுவனங்கள் குறிவைக்கின்றன என்றால் பள்ளிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் தொடர்ச்சியாக மாணவர்கள் சாக்லெட் சாப்பிடக் கூடாது எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதும், குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து மருத்துவர்கள் கூறும் அறிவுரையாலும் சிறார்கள் சாக்லெட் சாப்பிடுவது குறைந்திருப்பதும்தான்.

சாக்லெட்டை அறிமுகம் செய்தவர்கள் மாயன் இனமக்கள். அவர்கள் கோகோ மரம் சொர்க்கத்திலிருந்து பூமிக்குக் கொண்டுவரப்பட்டது என நம்பினார்கள். கோகோ கொட்டைகளை வெந்நீரில் போட்டுக் காய்ச்சிக் குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அந்தப் பானத்துக்கு 'ஸோக்கால்டல்’ என்று பெயர். அதன் அர்த்தம் 'கசப்பான பானம்’ என்பதாகும். அதிலிருந்தே 'சாக்லெட்’ என்ற பெயர் உருவானது.

மாயன்கள் காலத்தில் கோகோ மிக முக்கியமான வணிகப் பண்டம். அதைப் பண்டமாற்றாகப் பயன்படுத்தினார்கள். 1502-ம்  ஆண்டு கொலம்பஸ் தனது கடல் பயணத்தின்போது மாயன்களிடமிருந்து கிடைத்த கோகோ கொட்டைகளை ஸ்பெயின் மன்னருக்குப் பரிசாகக் கொண்டு போய்த் தந்திருக்கிறார். ஆனால், 'ஹெர்னாந்தோ கோர்ட்டெஸ்’ என்ற கடலோடியே கோகோவை ஸ்பானிய உலகில் அறிமுகப்படுத்திப் புகழ்பெறச் செய்தவர்.

அதன்பிறகே கோகோ வணிகப் பொருளாக மாறியது. 1674-ல்தான் கோகோ சாப்பிடும் விதமாக, சாக்லெட் வடிவமாக உருவாக்கப்பட்டது. 'ஜோசப் ரே’ என்ற ஆங்கிலேயர் சாக்லெட்டின் முதல் வடிவை உருவாக்கினார். கோகோ, சர்க்கரை, வெண்ணெய் மூன்றையும் சேர்த்து பல்வேறு வடிவங்களில் சாப்பிடும் சாக்லெட்டுகளாக மாற்றினார்.

1861-ல் ரிச்சர்ட் காட்பரி சாக்லெட் விற்கும் கடையைத் தொடங்கினார். அது மிகுந்த வரவேற்பு பெற்றது. அதைத் தொடர்ந்தே சாக்லெட் ஃபேக்டரிகள் உலகெங்கும் உருவாகின. 1879-ல் டேனியல் பீட்டர் பால் கலந்த சாக்லெட்டை உருவாக்கினார். அதுவே 'மில்க் சாக்லெட்’ எனப் புகழ்பெற்றது.

பெரும்பாலான நாடுகளில் செப்டம்பர் 4-ம் தேதி உலக சாக்லெட் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதிலும் 30 லட்சம் டன் சாக்லெட்டுகள் ஆண்டுதோறும் விற்பனையாகின்றன.

சாக்லெட் தயாரிப்புக்குத் தேவையான கோகோ உற்பத்தி செய்யும் தோட்டங்களில் ஆப்பிரிக்கக் குழந்தைகள் கடத்தப்பட்டு வேலையில் அமர்த்தப்படுகின்றனர்.

18 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் கோகோ தோட்டங்களில் உழைக்கிறார்கள். குறிப்பாக மேற்கு ஆப்பிரிக்காவின் ஐவரி கோஸ்ட்டுக்கு மாலியில் இருந்து குழந்தைகள் கடத்தப்பட்டுக் கொத்தடிமைகளாக வேலை பார்க்க அனுப்பி வைக்கப்படுவதை 'தி டார்க் சைடு ஆஃப் சாக்லெட்’ என்ற ஆவணப்படம் விவரிக்கிறது. இப்படி சாக்லெட்டின் பின்பாகக் கசக்கும் உண்மைகள் பல புதையுண்டு இருக்கின்றன.

இவ்வாறு விளம்பரங்களின் வழியே கூறப்படும் பொய்கள் ஒருவிதம் என்றால், மறுபக்கம் டாக்டர்களே பரிந்துரைப்பது என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும் உணவுப் பொருட்கள். இந்த டாக்டர் யார், எதன் அடிப்படையில் அவர் பரிந்துரை செய்கிறார், அவர் சொல்வது உண்மை என்பதற்கு என்ன ஆதாரம் என ஒருவரும் கேட்பதே இல்லை. உண்மையில் இவை 'மருத்துவத்தின் பெயரால் நடைபெறும் மோசடிகள்’ என்றே சொல்ல வேண்டும்.

மூன்றாவது விதமான பொய்கள், ஒமேகா3, லோ கலோரி, டயட் ஃப்ரீ, பேட் கொலஸ்ட்ரால் எனப் புதிய புதிய அறிவியல் சொற்களைக்கொண்டு புள்ளிவிவரங்களை அள்ளிவீசி சொல்லப்படும் உணவு நிறுவனங்களின் விளம்பரங்கள்.

உணவு மாற்றத்தால் மூன்று முக்கிய விளைவுகள் நம்மிடையே உருவாகியுள்ளன. ஒன்று, உடல் எடை அதிகரிப்பு, அதனால் உருவாகும் பாதிப்புகள். இரண்டு மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகப் பாதிப்பு, நீரிழிவு போன்ற நோய்கள் உருவாகக் காரணமாக உள்ள உணவுப் பழக்க வழக்கம். மூன்றாவது உணவு குறித்த குழப்பங்கள், பயங்கள் எச்சரிக்கை மூலமாக உருவாகும் மனப் பாதிப்புகள்.

உணவு யுத்தம்!