Published:Updated:

`தினமும் ரூ. 8 லட்சம் மதிப்பிலான பொருள்கள் விற்பனை! -சென்னையில் ஆன்லைன் மூலம் அசத்தும் ஆவின்

ஆவின் பால் பாக்கெட்
ஆவின் பால் பாக்கெட்

பால் வாங்க இனி அலையத் தேவையில்லை. ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தாலே வீடு தேடி வரும் ஆவின் பால்.

ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. அத்தியாவசியப் பொருள்களில் முக்கியமானது பால். கொரோனா தொற்று காரணமாகப் பல்வேறு தனியார் பால் நிறுவனங்கள் தங்கள் பால் கொள்முதல், விநியோகம் ஆகியவற்றைக் குறைத்துக்கொண்டுள்ளன. இந்த இக்கட்டான நேரத்தில் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய துறைகளிலும் பெரும்பாலான தனியார்கள் ஒதுங்கிக்கொள்ள, அரசு நிறுவனங்களே சேவையாற்றி வருகின்றன. அந்த வகையில், பால் விநியோகத்தை அதிகப்படுத்தியுள்ளது ஆவின் நிர்வாகம்.

Aavin sales
Aavin sales

கிராம அளவில் தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம், மாவட்ட அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம், மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என்ற மூன்றடுக்கு கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் நாளொன்றுக்கு 4.60 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் தினமும் 31.50 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து 24.50 லட்சம் லிட்டர் பாலை தினசரி தமிழகம் முழுவதும் விநியோகம் செய்கிறது.

சென்னையில் அமைந்துள்ள 50 -க்கும் மேற்பட்ட ஆவின் பாலகங்கள் மூலம் நெய், வெண்ணெய், பால்கோவா, நறுமணப்பால், ஜஸ்கிரீம் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. இதில் 21 பாலகங்கள் குளிர்சாதன வசதியுடன், சிறுவர் விளையாட்டுப் பூங்கா, Wi-fi வசதிகளுடன் கூடிய அதிநவீன பாலகங்களாக இருக்கின்றன.

Aavin milk
Aavin milk

தற்போதைய ஊரடங்கு காலத்தில் இந்த அதிநவீன பாலகங்கள் மூலம் பால் மற்றும் பால் உபபொருள்கள் விநியோகம் செய்ய ஆவின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக Zomato, Dunzo மற்றும் swiggy நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது ஆவின் நிர்வாகம்.

இது தொடர்பாகப் பேசிய ஆவின் மேலாண் இயக்குநர் வள்ளலார், ''இக்கட்டான காலகட்டத்தில் பால் வாங்குவதற்காக மக்கள் சிரமப்படக் கூடாது என்பதற்காக இந்தச் சேவையைத் தொடங்கியுள்ளோம். தற்போது இந்தச் சேவை சென்னையில் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலமாகத் தினமும் 7 முதல் 8 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகிறது. இந்தச் சேவையை விரைவில் அனைத்து மாவட்ட ஒன்றியங்களிலும் விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறோம்.

Vallalar 
Managing Director
Vallalar Managing Director

அதே நேரத்தில் விவசாயிகளுக்கான சேவையையும் ஆவின் தொடர்ந்து செய்து வருகிறது. தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதலை நிறுத்திய நிலையில், 12,767 பால் உற்பத்தியாளர்களிடம் பாலை கொள்முதல் செய்கிறோம். தற்போது அவர்கள் ஆவினுடன் இணைந்துள்ளனர். இக்கட்டான காலகட்டத்தில் மக்களின் சிரமத்தைக் குறைப்பதற்காக ஆவின் பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள்''என்றார்.

அடுத்த கட்டுரைக்கு