Published:Updated:

`தண்ணீர் தட்டுப்பாடு’ எச்சரிக்கை..`வீகன் உணவு’ பரிந்துரை..!- மோடிக்கு ஹாலிவுட் நடிகை கடிதம்

2030-க்குள் 40 சதவிகித இந்தியர்களுக்கு குடிப்பதற்குத் தண்ணீரே இருக்காது எனக் கூறப்படுகிறது.

மோடி
மோடி

பிரபல ஹாலிவுட் நடிகையான பமீலா ஆண்டர்சன் பிரதமர் மோடிக்கு சமீபத்தில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் இந்தியாவில் நடக்கும் அரசு சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளிலும் பரிமாறப்படும் உணவு சுத்த சைவமாகதான் இருக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கையை வைத்துள்ளார்.

பமீலா ஆண்டர்சன்
பமீலா ஆண்டர்சன்

பமீலா ஆண்டர்சன் கனடாவைச் சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகை மற்றும் மாடல். இவர் தீவிர விலங்குகள் நல ஆர்வலராகவும் செயல்பட்டு வருகிறார். இவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ``இறைச்சி, முட்டை, பால் போன்ற அசைவ உணவுகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் மூலம் ஐந்தில் ஒரு பங்கு பசுமை இல்ல வாயுக்கள் (கார்பன் டை ஆக்ஸைட், குளோரோ ப்ளூரோ கார்பன்) வெளியாகிறது. டெல்லியில் தற்போது நிலவும் காற்று மாசுபாட்டை நினைக்கும்போது வருத்தமாக உள்ளது. இந்தக் காற்று மாசுபாட்டால் குடியிருப்பு இல்லாதவர்களும், விலங்குகளும் பாதிக்கப்படுவதை நினைத்து வருந்துகிறேன்.

18 மாதக் குழந்தையின் உயிரைப் பறித்ததா பச்சைக் காய்கறிகள்?

சமீபத்திய அறிக்கைகளின்படி, 2050-ம் ஆண்டளவில் 3 கோடியே 60 லட்சம் இந்தியர்கள் வருடாந்திர கடலோர வெள்ள அபாயத்தை எதிர்கொள்ளக்கூடும். இந்தியாவில் உள்ள 21 நகரங்களில் நிலத்தடி நீர் மிகவும் குறைவாக உள்ளது. 2030-க்குள் 40 சதவிகித இந்தியர்களுக்கு குடிப்பதற்குத் தண்ணீரே இருக்காது எனக் கூறப்படுகிறது.

தண்ணீர் தட்டுப்பாடு
தண்ணீர் தட்டுப்பாடு

எனவே, நாம் தற்போது நிலவும் காலநிலை மாறுபாட்டை எதிர்த்துப் போராட வேண்டும். இந்தியாவில் நடக்கும் அரசு சம்பந்தப்பட்ட விழாக்களில் அசைவ உணவுகளுக்குப் பதிலாக விலங்குகளின் பொருள்கள் பயன்படுத்தப்படாத சுத்த சைவ உணவுகளை (வீகன் உணவுகள்) வழங்க வேண்டும்.

இறைச்சி மற்றும் பால் நிறுவனங்கள் உலகின் மிகப்பெரிய மாசுபடுத்திகளாக மாற உள்ளன. மேலும், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கு சைவ உணவுக்கு உலகளாவிய மாற்றம் அவசியம் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கிறது" என்று கூறியுள்ளார்.

பமீலா ஆண்டர்சன்
பமீலா ஆண்டர்சன்

``உண்மையில் இந்தியா சைவ உணவுகள் உண்பதற்கு ஏற்ற இடம். நான் இந்தியாவில் சாப்பிட்ட குங்குமப்பூ சாதத்தின் நிறத்தையும், வெஜிடபுள் பிரியாணியின் மணத்தையும் இப்போதுகூட நினைவில் வைத்திருக்கிறேன் என்று" தனது அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார்.

பமீலா கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவுக்கும் வீகன் உணவு முறையைப் பரிந்துரைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.