உழைத்து சம்பாதிப்பதே வாய்க்கு ருசியாக உண்பதற்குத்தான் என்று சொல்லப்படுவதுண்டு. அந்த வகையில் பணம் கொடுத்து சாப்பிடும் உணவு, தரமானதாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் உண்டு. ஆனால், பல நேரங்களில் நாம் சாப்பிடும் உணவு தரமாக இருப்பதில்லை. உணவு தரமற்றதாக இருந்தால் அந்த உணவகத்தின் ஊழியரிடமோ, உரிமையாளரிடமோ சண்டை போட்டு, அதோடு ஆறுதலடைந்து விடுகிறோம்.
ஆனால், உண்மையில் நாம் செய்ய வேண்டியது, தரமற்ற உணவு வழங்கப்படுவது குறித்து, உணவுப் பாதுகாப்புத்துறைக்கு தெரியப்படுத்துவதுதான். ஏனென்றால் அப்போதுதான் பலருக்கும் அந்த விஷயம் சென்று சேரும். சாப்பிடுபவர்களும் எச்சரிக்கையாவார்கள். உணவகங்களும் தரமான உணவை கொடுக்க முன்வரும். சரி... தரமற்ற உணவு என்றால் யாரிடம் புகாரளிப்பது என்ற கேள்வி எழுகிறது அல்லவா?
உணவு தொடர்பான புகாரை எங்கே அனுப்ப வேண்டும், எப்படி புகார் அளிக்க வேண்டும் என்பது குறித்து திருவள்ளூர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ஜெகதீஷ் சந்திரபோஸிடம் கேட்டோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
"தமிழ்நாடு அளவில் உணவு தொடர்பான புகார்கள் எதுவானாலும், 94440 42322 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். வாட்ஸ்அப் மூலம் புகார் தெரிவிக்கவும் இந்த எண்ணை 94440 42322 பயன்படுத்தலாம். தரமற்ற உணவு சாப்பிட்ட உணவகத்தின் புகைப்படம், சாப்பிட்ட உணவின் புகைப்படம், கட்டண ரசீது(பில்) ஆகியவற்றை அனுப்பி, புகார் அளிக்கலாம்.
செல்போன் எண்ணுக்கு வரும் புகார்களை, சென்னையில் உள்ள உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர் தொடர்ந்து கண்காணிக்கிறார். அந்த எண்ணுக்கு வந்த புகார் எந்த மாவட்டத்தைச் சேர்ந்ததோ சம்பந்தப்பட்ட அந்த மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலருக்கு அனுப்புவார். அவர் வட்டார அளவிலோ, நகராட்சி அளவிலோ இருக்கும் உணவுப் பாதுகாப்பு அதிகாரிக்கு, அந்தப் புகாரை அனுப்பி தரமற்ற உணவு வழங்கிய கடையில் என்ன தவறு நடந்திருக்கிறது என்பதை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட கடையின் மீது சட்டத்துக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுப்பார்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSமேலும், நடவடிக்கை எடுத்த உடனே, மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலருக்கு அந்தத் தகவல் பகிரப்படும். புகார் அளிக்கப்பட்ட மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர், மீண்டும் 94440 42322 எண்ணைத் தொடர்புகொண்டு தலைமை கட்டுப்பாட்டு மையத்துக்கு, புகாரளிக்கப்பட்ட கடையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தெரிவிப்பார்.
அதன் பின் தரமற்ற உணவு தொடர்பாகப் புகார் அளித்தவருக்கு, அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான ரசீது, 24 மணி நேரத்துக்குள் அனுப்பி வைக்கப்படும். தமிழ்நாட்டில் மட்டுமே தரமற்ற உணவு தொடர்பாக புகார் அளிப்பதற்கென்று இதுபோன்று சிறப்பு நடைமுறைகள் உள்ளன.

இணையதளத்தில் நேரடியாக உணவு தொடர்பான குறைகளை, https://foscos.fssai.gov.in என்ற இணையதளம் வாயிலாகப் புகார் அளிக்கலாம். இந்த இணையதளத்தில், இந்திய அளவில் உணவு தொடர்பான புகார்களை அனுப்பலாம். இதன் மூலம் அளிக்கும் புகார்கள், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்துக்குச் சென்றுவிடும். அதன் பிறகு FSSAI-ன் மூலம் அளிக்கப்பட்ட புகார்களுக்குத் தீர்வு காணப்படும்.
மேலும், Food Safety Connects என்ற செல்போன் செயலியின் மூலமாகவும் புகார்களைத் தெரிவிக்கலாம். இந்தச் செயலியில் அனுப்படும் புகார்கள், அந்தந்த மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கே சென்றுவிடும். உணவு தொடர்பான புகார்களை, unavupukar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உணவுப் பாதுகாப்பில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்:
உணவுப் பாதுகாப்பு மற்றும் தர சட்டம் 2006-ன்படி, தெருவில் கூவி விற்கும் உணவுப் பொருளாக இருந்தாலும், பெரிய உணவகங் களில் விற்கப்படும் உணவாக இருந்தாலும், உணவுப் பொருளை விற்பதற்கான உரிமத்தை உணவுப் பாதுகாப்பு துறையிடம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். அப்படி பெறாமல் விற்பனை செய்வது சட்டப்படி தவறு.

மக்கள் தாங்கள் வாங்கும் உணவுப் பொருள்களில், உணவுப் பாதுகாப்புத் துறையில் வழங்கப்படும் உரிமத்துக்கான எண் வழங்கப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். பாக்கெட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தால், காலாவதியாகும் தேதி கட்டாயம் அதில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
உணவின் பெயர், அந்த உணவில் சேர்த்துள்ள மூலப்பொருள்களின் விவரம், இந்த உணவில் உள்ள ஊட்டச்சத்துகளின் விவரங்கள் போன்றவை, அந்த பாக்கெட் உணவுகளில் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். அதுமட்டுமன்றி எம்.ஆர்.பி, உணவுப் பொருளின் எடை பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த பாக்கெட்டில் உள்ள FSSAI எண்ணை ஸ்கேன் செய்தால், அந்த பாக்கெட் எங்கு தயார் செய்தது, யார் சந்தைப்படுத்தியது போன்ற விவரங்கள் இருக்க வேண்டும்.
உணவகத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன?
உணவகங்களில் சூடான உணவு பரிமாறினால் மட்டுமே சாப்பிட வேண்டும். மேலும் உணவு வேகவைக்கப்பட்டுள்ள தன்மையையும் பார்க்க வேண்டும்.
குழம்பு, பொரியல் போன்றவற்றில் அதிக அளவு செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்டுள்ளது தெரியவந்தால், உடனடியாக 94440 42322 என்ற எண்ணுக்குத் தகவல் கொடுக்கலாம். 24 மணி நேரத்துக்குள், சம்பந்தப்பட்ட உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வுகள் நடத்தி, தொடர்ந்து சோதனைகள் செய்து, உணவின் தரத்தை உறுதி செய்துகொண்டே வருகின்றனர்.

உணவுப் பாதுகாப்பு தொடர்பாக, FOSTAC (food safety and training certification) உணவுப் பாதுகாப்பு பயிற்சி அளித்து, கடை உரிமையாளர்களுக்கு இரண்டு வருடங்களுக்கான சான்றிதழும் வழங்கப்படுகிறது.
தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள் மூலமும் மக்களுக்கு தொடர்ந்து உணவுப் பாதுகாப்புத் தொடர்பான விழிப்புணர்வு வழங்கப்படுகிறது. இதன் விளைவாக, 94440 42322 என்ற எண்ணுக்கு மாதம்தோறும் 30 முதல் 40 புகார்கள் வரை வருகின்றன. அவற்றின் மீதும் உடனடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்" என்றார் டாக்டர் ஜெகதீஷ் சந்திரபோஸ்.