இது வழக்கமான உணவுத்திருவிழா அல்ல..! அதற்கும் மேலே என்றுதான் சொல்ல வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தின் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும், உணவு பாதுகாப்புத் துறையும் இணைந்து உணவுத் திருவிழா 2022-வை நடத்தவிருக்கிறது. இது வரும் வெள்ளி, சனி, ஞாயிறு (10-06-22 முதல் 12-06-22 வரை) ஆகிய மூன்று நாள்களும் ஆவடி கனரக வாகன தொழிற்சாலையின் (HVF) மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. தமிழகத்தின் தலைசிறந்த உணவகங்களில் ஆரம்பித்து வெளிமாநில மற்றும் வெளிநாட்டு உணவகங்கள் வரை, இந்தத் திருவிழாவில் விருந்து படைக்கவிருக்கின்றன. தவிர, உணவை வீணாக்காமல் பகிர்வோம் (Save Food, Share Food) என்ற திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் பேருக்கு ஒரு வேளை உணவு வழங்குதல், ஒரு லட்சம் கிலோ லிட்டர் உபயோகித்த சமையல் எண்ணெயை சேகரித்து பயோ டீசல் தயாரிக்க வழங்குதல் , உலக ஐஸ்க்ரீம் நாளான ஜூன் 10 அன்று உலகின் உயரமான ஃபலூடா ஐஸ்க்ரீம் தயாரிக்கவிருப்பது என மூன்று நாள்களில் மூன்று உலக சாதனை நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இதில், ஒருவேளை உணவு வழங்குதலை, உணவுத்திருவிழாவில் சமைத்த உணவுகளை தேவைப்படும் மக்களைத் தேடிச் சென்று வழங்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். உணவுப்பிரியர்களுக்கு சாப்பாட்டுப் போட்டி, சமையலில் ஆர்வமுள்ள ஆண், பெண், குழந்தைகள் அனைவருக்கும் சமையல் போட்டி, வெற்றிபெறுபவர்களுக்குப் பரிசுகளோடு அறுசுவை அரசி, அரசன், இளவரசி மற்றும் இளவரசன் பட்டங்களும் வழங்கப்படவுள்ளது.

இந்த உணவுத்திருவிழாவை பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் தொடங்கி வைக்க, ‘உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி’யை ஆவடி மாநகராட்சி அலுவலக வளாகத்திலிருந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் இருவரும் தொடங்கி வைக்கவிருக்கின்றனர்.

சுதந்திர இந்தியாவின் 75-வது அமுதப் பெருவிழாவை முன்னிட்டு 7.5 கிலோ மீட்டர் நடக்கும் இப்பேரணியில் மக்களுடன், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர், உணவு பாதுகாப்புத்துறை ஆணையர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், ஆவடி மாநகராட்சி ஆணையர், திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், ஆவடி காவல்துறை ஆணையர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇந்த உணவுத்திருவிழா தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மருத்துவர். ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்களிடம் பேசியபோது, ''தமிழகம் முழுக்க உணவு பாதுகாப்புத்துறை சார்பாக 'Eat Right' (உகந்த உணவை உண்போம்) என்றொரு பிரச்சாரம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. திருவள்ளூரிலும் 'eatrightthiruvallur' பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறோம். இதில் சரிவிகித உணவு என்றால் என்ன; அதை எவ்வளவு சாப்பிட வேண்டும்; சமையல் எண்ணெயை இரண்டு முறைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது; ஆர்கானிக் உணவுகளின் முக்கியத்துவம் உள்ளிட்ட உணவுகள் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறோம். இவற்றில் ஒன்றாகத்தான் உணவுத் திருவிழா 2022-ஐ நடத்தவிருக்கிறோம். ஆரோக்கியமான உணவுகளின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகப் பிரபல நட்சத்திரங்கள் பங்கேற்கவுள்ள பட்டிமன்றம், பாட்டு மன்றங்களும் நடைபெற இருக்கிறது. விழிப்புணர்வு, கொண்டாட்டம் இரண்டும் சேர்ந்து நிகழவிருக்கிற இந்த உணவுத் திருவிழாவுக்கு அனைவரும் குடும்பத்துடன் வாருங்கள்'' என்று அழைப்பு விடுத்தார்.
திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் ஜெகதீஷ் சந்திரபோஸ் பேசுகையில், ''25 ஸ்டால்களில் பச்சைக் காய்கறிகள், மூலிகை சூப்கள்... அடையாறு ஆனந்த பவன் போன்ற தமிழகத்தின் புகழ்பெற்ற உணவகங்கள்... மக்களை ஈர்க்க ரோபோ சங்கர், மதுரை முத்து, அறந்தாங்கி நிஷா போன்ற செலிபிரெட்டிகளின் நிகழ்ச்சிகள்... என இந்த உணவுத்திருவிழா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் நிச்சயம் என்டெர்டெயின் செய்யும். 'சற்றே குறைப்போம் உப்பு, சர்க்கரை, எண்ணெய்'; 'உபரி உணவை வீணாக்காமல் பகிர்வோம் திட்டம்'; 'பயன்படுத்திய எண்ணெயின் மறுபயன்பாடு' ஆகிய மூன்று திட்டங்களை மாநில அளவில் சென்ற ஆண்டு திருவள்ளூரில்தான் ஆரம்பிக்கப்பட்டது. செயல்பாட்டில் இருக்கிற மூன்று திட்டங்களையும் உணவுத்திருவிழா அன்று சாதனையாகச் செய்யத் திட்டமிட்டுள்ளோம். பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் அனைவரும் இந்த உணவுத்திருவிழாவுக்கு அழைக்கிறோம். காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறவுள்ள இந்த உணவுத்திருவிழாவில் அனுமதி இலவசம். அனைவரும் வருக'' என்று அழைப்பு விடுத்தார்.