Published:Updated:

``கேரளாவால முடியுது... நம்மால முடியாதா?'' - பால் விலைக்கு எதிராகக் கொதிக்கும் பெண்கள்

Aavin Milk
Aavin Milk

தமிழக அரசின் பால் விலை உயர்வு குறித்து பெண்களின் கருத்துகள்!

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு, பால் கொள்முதல் விலையை உயர்த்துவது உள்ளிட்ட பல காரணங்களைக் கூறி, ஆவின் பால் லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்துவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பு குறித்து தமிழகத்தின் பல்வேறு தரப்பினரும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துவருகின்றனர். பால் விலை உயர்வு குறித்து திருச்சியில் உள்ள சில பெண்களிடம் கருத்துக் கேட்டோம்.

Leema, Trichy
Leema, Trichy

திருச்சி கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த லீமா ஆசீர்வாதம், "பெட்ரோல், டீசல், காய்கறி உள்ளிட்ட பொருள்கள் என எதை எதையோ விலை ஏற்றினார்கள். அப்போதெல்லாம் மக்கள் அமைதியாக இருந்தார்கள் என்பதற்காக அரசு, அத்தியாவசியப் பொருள்களில் ஒன்றான பால் விலையை ஒரேயடியாக ஆறு ரூபாய் உயர்த்தியிருப்பது துளியும் நியாயமில்லை. எங்கள் வீட்டின் குடும்ப வருவாயில் சுமார் 1,300 ரூபாய் வரை மாதம் பாலுக்காகச் செலவிடுகிறோம். ஆனால், தற்போதைய விலை ஏற்றத்தால் செலவு அப்படியே இரு மடங்கு கூடும். இது பாலுக்காக மட்டும் விலை ஏறிவிட்டது என்று பார்க்காமல், பால் சார்ந்த பொருள்களான தயிர், மோர், வெண்ணெய் மற்றும் நெய் போன்ற அனைத்தும் விலை ஏற வாய்ப்புள்ளது. ஏன் விலைவாசி ஏற்றத்தால் தயிர் சாதம் சாப்பிடலாம் என்றால், அதற்கும் வழியில்லாமல் போய்விடும் போலிருக்கிறது. பால் விலை ஏற்றத்தால், டீக்கடையில் டீ, காபி விலை ஏறியுள்ளது. அதனால் பால் கலக்காத `வரகாபி'க்கு மாறிவிடலாம் என இருக்கிறோம். ஆவின் நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டுமானால், அதற்கு அரசு விலையை ஏற்றாமல் மாற்றுவகையில் ஈடுகட்ட அரசு முயற்சி செய்ய வேண்டும்" என்றார்.

திருச்சி செந்தண்ணீர் புரம் ஆனந்தபவன் தெருவைச் சேர்ந்த ராஜலட்சுமியோ, "எனது கணவர் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார். அவருக்கு மாதம் 15,000 ரூபாய் சம்பளம். அந்த வருமானத்தில்தான் குடும்பம் நகர்கிறது. இந்த நிலையில், கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு, ஒரே பிரசவத்தில் எனக்கு மூன்று பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. குழந்தைகளுக்குத் தாய்ப் பாலுக்குப் பதிலாக புட்டிப்பால்தான் கொடுக்கிறோம். வருமானத்தில் முக்கால்வாசியை அப்படியே பாலுக்குச் செலவிடும் நிலை உள்ளது. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள பால் விலையேற்றத்தால், பால் டப்பா மற்றும் பால் சார்ந்த பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளது. அதனால் அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை.

``இப்படியே போனால் ஆவின் பால் விற்பனையைப் புறக்கணிக்க வேண்டிவரும்'' - பால் முகவர்கள் சங்கம்

பால் விலையேற்றம் வந்ததிலிருந்து மிகவும் பயமாக உள்ளது. பொதுவாக, பால் விலை உயர்வு என்பது, ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வில் பெருத்த வலியை ஏற்படுத்தியிருக்கிறது. பால் விலையை ஒரேயடியாக லிட்டருக்கு ஆறு ரூபாய் உயர்த்தியிருப்பது எந்த விதத்தில் சரி? எங்களைப் போன்ற நடுத்தர குடும்பங்களுக்கும் பட்ஜெட் போட்டு வாழ்க்கை நடத்துபவர்களுக்கும் இந்தப் பால் விலை ஏற்றத்தால் பெரும் பாதிப்புதான். இந்த விலையேற்றத்தால் துண்டு விழும் மாத பட்ஜெட்டை எப்படிச் சரி செய்வது என்று தெரியவில்லை" என்று புலம்பினார்.

துறையூரை அடுத்த பெருமாள்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சித்ரா நம்மிடம், "இரண்டு வருடங்களுக்கு முன்பு கணவர் உடல் நலக்குறைவால் இறந்து போனார். அதன் பிறகு, என் ஒரே பெண் பிள்ளையை படிக்க வைக்கவும், திருமணம் செய்துவைக்கவும் படாதபாடு பட்டுவிட்டேன். இந்த நிலையில், வீட்டில் இருந்த இரண்டு கறவை மாட்டை மேய்த்து பால் கறந்து விற்று குடும்பத்தைப் பார்த்துவருகிறேன். இந்த மாடுகளை நம்பிதான் மகளுக்கு வாங்கிய கடன்களை அடைக்க வேண்டும். அதை எப்படி அடைக்கப் போகிறேனு தெரியல.

chitra, thuraiyoor
chitra, thuraiyoor

மாட்டுத்தீவனம், புண்ணாக்கு உள்ளிட்ட அனைத்தும் முன்பைவிட இப்போது அதிக விலை ஏறிவிட்டதால், ஒரு மாட்டைப் பராமரிக்கவே, மாதம் 6,000 ரூபாய் வரை செலவிடும் சூழல் உள்ளது. மாடு வளர்ப்பது முன்பைப் போல் இல்லை. நீண்ட காலத்துக்குப் பிறகு தற்போது லிட்டருக்கு 4 ரூபாய் கொள்முதல் விலையை உயர்த்தி இருப்பதாகக் கூறுகிறார்கள். எல்லா விலையும் உயர்ந்துவிட்டது. வறட்சி, பசுந்தீவன தட்டுப்பாடு உள்ளிட்டவை காரணமாக மாடுகளைப் பராமரிக்க கஷ்டப்படுகிறோம். அதனால் கொள்முதல் விலையை இன்னும் கொஞ்சம் கூட்டித்தர வேண்டும்" என்ற கோரிக்கை வைத்தார்.

"பால் விலை.. மிகவும் சுடுவதாக மக்கள் கொதிக்கிறார்கள்."
கோவை மக்கள்

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில மகளிரணித் தலைவரும், கோவை, தடாகம் பகுதியைச் சேர்ந்த விவசாயியுமான மகாலட்சுமி. "கொள்முதல் விலை 32 ரூபாயாக உயரும் என்பது அப்பட்டமான பொய். 95 சதவிகிதம் ஆவின் சொசைட்டிகளில் லிட்டருக்கு 24 ரூபாய்தான் தருகிறார்கள். மலைப்பகுதிகளில் மேயும் மாடுகள் உள்ளிட்ட சிலவற்றுக்கு மட்டுமே 26 ரூபாய் தருகின்றனர். பால் கறந்து ஊற்றுபவர்களுக்கு லிட்டருக்கு நான்கு ரூபாயாவது கொடுக்க வேண்டும். எப்படிப் பார்த்ததாலும், லிட்டருக்கு எங்களுக்கு 20 ரூபாய்தான் நிற்கும். இப்போது அது 24 ரூபாயாக மாறும் அவ்வளவுதான். இது வெற்று கண்துடைப்பு அறிவிப்பு. இந்த அறிவிப்பால் இடைத்தரகர்களுக்கும், அரசுக்கும் வேண்டுமானால் லாபம் கிடைக்கலாம். இதனால், எங்களுக்கு எந்த லாபம் இல்லை. கேரளாவில் ஒரு லிட்டர் பாலை 36 ரூபாய்க்கு வாங்கி, 42 ரூபாய்க்கு விற்கின்றனர். கேரளாவில் முடியும்போது, தமிழகத்தில் மட்டும் ஏன் அது முடிவதில்லை? ஒருபக்கம் மாடுகளுக்கான தீவனங்களின் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது. ஆனால், மாட்டுப் பாலுக்கான உரிய விலை விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை. இப்படியே சென்றால், ஒருநாள் விவசாயியும், மாடுகளும் இல்லாத நிலை வரும். அப்போது, பாலின் விலை மேலும் அதிகரிக்கும்” என்று எச்சரித்தார்.

mahalakshmi, kovai
mahalakshmi, kovai

கிராமப் பகுதிகளில் ஆவின் பால் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைவு என்பதால், நகரப் பகுதிகளில்தான் விலை உயர்வு அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையைச் சேர்ந்த ராதா, "எங்கள் வீட்டில் இப்போது மொத்தம் மூன்று பேர் சராசரியாக ஒருநாளுக்கு ஒரு லிட்டர் பால் வாங்குவோம். அதற்காக மாதம் 1,300 ரூபாய் ஒதுக்குவோம். இந்த விலை உயர்வால் பாலுக்காக மாதம் 1,500 ரூபாய் ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது, விலை உயர்வால், பட்ஜெட்டில் பாலுக்காக 200 ரூபாய் அதிகம் ஒதுக்க வேண்டும். அந்த 200 ரூபாயில், நாங்கள் வாரத்தில் பாதி நாளுக்கான காய்கறிகளை வாங்கிவிடுவோம். அத்தியாவசியப் பொருள்களைக் குறைந்த விலையில் தரவேண்டிய அரசு, விலையை உயர்த்துவது என்பது நல்ல ஆட்சிக்கான அடையாளமில்லை” என்றார்.

பால் விலை உயர் குறித்து தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த பெண்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்கள்.

அம்மன்பேட்டை பகுதியைச் சேர்ந்த சீதாலெட்சுமி, "நான் 5 மாடுகள் வளர்த்துவருகிறேன். தினமும் அவற்றை மேய்ச்சலுக்குக் கொண்டுபோய் விட்டு அழைத்து வருவது தொடங்கி, தீவனம் வைத்துப் பாதுகாப்பது வரை மாடுகளுடனே பொழுது போய் விடும். வேறு எந்த நிகழ்ச்சிக்கும் போக முடியாது. இன்றைய சூழலில் மாடு வளர்ப்பது என்பதே ஒரு சவாலான விஷயம்தான். ஏனென்றால், விவசாயம் பொய்த்துப் போனதால் வைக்கோலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால், வைக்கோல் விலை கடுமையாக அதிகரித்துவிட்டது. இதுபோன்ற காரணங்களால் மாடுகளை வளர்ப்பதற்குரிய செலவுகள் கடுமையாக அதிகரித்து விட்டன. மேலும், ஒரு மாடு கன்று ஈன்றெடுத்து பால் கறக்கத் தொடங்கிய பிறகு நன்றாகத் தீவனம் வைத்தால் சுமார் பத்து மாதம் வரை மட்டுமே பால் கறக்கும். அதன் பிறகு, அடுத்த கன்றுக்குட்டி ஈன்றெடுப்பதற்கு பத்து மாதம் பிடிக்கும். அப்போது கை காசை செலவு செய்துதான் அந்த மாட்டைப் பராமரிக்க வேண்டும் இதற்கு ஒரு பெரிய தொகை செலவாகும். வீட்டில் ஒரு பிள்ளையாக நினைப்பதால் லாப நட்ட கணக்கைப் பார்ப்பதில்லை.

seethalakshmi, ammanpettai
seethalakshmi, ammanpettai

இவ்வளவு கஷ்டப்பட்டு பால் கறந்தால் பாலைக் கொள்முதல் செய்ய வரும் தனியார் இடைத்தரகர்கள் ஒரு லிட்டர் 23 ரூபாய்க்கு எடுத்து வெளியில் 35 ரூபாயிலிருந்து 40 ரூபாய் வரை விற்பனை செய்கிறார்கள். இதன்மூலம் அவர்கள் நன்றாக லாபம் பார்த்து விடுகிறார்கள். என்னைப் போன்றவர்கள் அப்படியேதான் இருக்கிறோம். ஆவினில் ஒரு லிட்டர் பாலுக்கு இதற்கு முன்பு சுமார் ரூ.28.50 பைசா வரை கொடுத்து கொள்முதல் செய்வார்கள் விலை உயர்வுக்குப் பிறகு எவ்வளவு எனச் சரியாக இன்னும் சொல்லவில்லை. ஆனால், ஒரு மாடு அல்லது என்னைப் போல் சில மாடுகள் வைத்திருப்பவர்களிடம், ஆவினில் பால் கொள்முதல் செய்யமாட்டார்கள் ஒரு பண்ணையாக இருந்தால் மட்டுமே கொள்முதல் செய்வார்கள். இதனால், நாங்கள் தனியார் இடைத்தரகரிடம்தான் பால் கொடுக்க வேண்டிய சூழல் உள்ளது. பாடுபட்டு மாடு வளர்த்து பால் கறந்து விற்கும் எங்கள் வயிற்றில் பால் வார்க்காமல் இடைத்தரகர்கள் உயரவும், தனியார்கள் வாழவும் வழி செய்துள்ளது இந்த அரசு. உழுதவன் கணக்கு பார்த்தால் உலக்கை கூட மிஞ்சாது என்பார்கள் கிராமத்தில். அதுபோல்தான் இன்று மாடு வளர்ப்பவர்களின் நிலை உள்ளது" என்றார்.

குடும்பத்தலைவி வள்ளி பேசுகையில், "என் மகன் டிரைவராகப் பணிபுரிந்து வருகிறான். அவனுக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது. நாங்கள் வாடகை வீட்டில்தான் வசித்துவருகிறோம். என் மகனுக்கு வரும் வருமானத்தைக் கொண்டு வீட்டு வாடகை, பால், மளிகை, மருத்துவம் என பட்ஜெட் போட்டுத்தான் குடும்பத்தை நகர்த்திவருகிறோம். இதற்கே பல நேரங்களில் பட்ஜெட்டில் துண்டு விழும். இப்போது ஆவின் பால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தி இன்னும் எங்கள் வேதனையை அதிகப்படுத்தியுள்ளனர். ஆவின் பால் உயர்ந்துவிட்டால் தனியார் பாலின் விலையும் தானாக உயர்ந்துவிடும். இதற்கு அரசு எந்த விதிமுறையும் வகுப்பது கிடையாது. நான்கு நபர்கள் மற்றும் ஒரு சின்னக் குழந்தை இருக்கிற வீட்டில் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லிட்டர் பால் தேவைப்படும். தற்போது நாங்க 40 ரூபாய்க்கு ஒரு லிட்டர் கொடுத்து பால் வாங்கிவருகிறோம். இந்த விலை உயர்வால் ஒரு லிட்டர் பால் 50 ரூபாய் எனக் கூறிவிட்டனர். இப்படி திடீரென பால் விலையை உயர்த்தினால் மாதம் 300 ரூபாய் எங்களுக்குச் செலவு அதிகரிக்கும். ஆனால், வருமானம் மட்டும் கூடப்போவதில்லை. முன்கூட்டியே திட்டமிட்டு கால அவகாசத்தைக் கொடுத்து பால் விலையை அரசு உயர்த்தாமல் எங்களைப் போன்றவர்களை அவதிக்குள்ளாகின்றனர் எனப் புலம்பினார்.

Valli, Thanjavur
Valli, Thanjavur

புதூரைச் சேர்ந்த ஜெயா, "ஏழை, நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருளாகப் பால் உள்ளது. குழந்தைகளுக்குச் சத்தான பொருளை வாங்கிக் கொடுக்க முடியாத வறுமைக் கோட்டுக்குள் உள்ள குடும்பத்தில் பால்தான் முக்கியமான சத்துப் பொருள். இன்றைக்குக் கிராமத்திலேயே மாடு வளர்ப்பு குறைந்துவிட்டதால் பால் கிடைப்பது தட்டுப்பாடாகிவிட்டது. இடைத்தரகர்கள் விற்கும் பாலைத்தான் பலரும் வாங்க வேண்டிய நிலை உள்ளது. எங்கள் ஊரில் 35 ரூபாய்க்குப் பால் விற்பனை செய்கின்றனர். இப்போது விலை உயர்த்தப்பட்டுள்ளதால் 45 ரூபாய் வரை விலை உயரலாம். இதனால், ஆறு பேர் கொண்ட எங்கள் குடும்பத்தில் மாதம் 1,000 ரூபாய் செலவு அதிகரிக்கும். இதற்கு என்ன செய்யப் போகிறோம் எனத் தெரியவில்லை" என்றார்.

பால் விலையேற்றத்தால் நடுத்தரக் குடும்பங்களுக்கு மேலும் கஷ்டம் - இது திண்டுக்கல் பகுதியின் குரல்!

திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பொன்னு, பால் உற்பத்தியாளர். அவரிடம் பேசினோம். "நாங்க முன்னாடி அஞ்சு மாடுங்க வெச்சிருந்தோம். இப்ப மூணுதான் இருக்கு. கள்ளிப்பட்டியிலிருந்து ஒருத்தர் வந்து பால் கறந்து ஆவினுக்கு ஊத்துவார். லிட்டருக்கு 22 ரூபாய் கொடுப்பாரு. ஆனா, ஆவினுக்கு ஊத்துறதுல பணம் உடனே வராது. பதினைஞ்சு நாளாகிடும். இப்ப வேற ஒருத்தர் பால் கறக்குறாரு. எங்களுக்கு தினமும் 10 லிட்டர் பால் கிடைக்கிது. இப்ப கறக்குறவர் லிட்டருக்கு 24 ரூபாய் கொடுக்குறாரு.

chinnaponnu, dindigul
chinnaponnu, dindigul

ஆனால், இந்த விலையும் கட்டுப்படியாகாது. பால் விலை ரெண்டு ரூபாய் கூடியிருக்கு. ஆனா, புண்ணாக்கு விலை கிலோவுக்கு 15 ரூபாய் கூடிடுச்சு. இப்ப கிலோ 50 ரூபாய். இதே மாதிரி தவிடு, வைக்கோல் விலையெல்லாம் தாறுமாறா எகிறிக்கிடக்கு. மழை தண்ணியில்லாம மேய்ச்சலுக்கும் வழியில்லை. தீவனத்தை விலைக்கு வாங்கி தான் மாடு வளர்க்க வேண்டியிருக்கு. பால் விலை கூடுனதால எங்களுக்கு எந்த வகையிலும் வருமானம் அதிகரிக்கலை. இருக்க பொழப்பு அப்படியேதான் இருக்கு’’ என்றார்.

புதிய பால் விலை ஏற்றத்தில் 50 பைசா தட்டுப்பாடு பெரிய பிரச்னையாகியிருக்கிறது. நிறைகொழுப்பு சத்துப்பால் அரை லிட்டர் 25 ரூபாய் 50 காசு என்கிறார்கள். 200 மில்லி 10.50 காசு என்கிறார்கள். ஒருநிலைப்படுத்தப்பட்ட கார்டு பால் 500 மில்லி 22 ரூபாய் 50 காசு, தயிர் 200 மி.லி. 11 ரூபாய் 50 பைசா என்கிறார்கள். 50 பைசா நாணயமே புழக்கத்தில் இல்லாத நிலையில் இதை சமாளிக்க முடியாமல் திணறுகிறார்கள் ஆவின் ஊழியர்கள். பல இடங்களில் 50 பைசா சில்லறை வாங்காமல் வாடிக்கையாளர்கள் செல்கிறார்கள். இதுவும் கூடுதல் இழப்பு என்கிறார்கள் குடும்பத் தலைவிகள்.

christy, dindigul
christy, dindigul

இது தொடர்பாக பேசிய திண்டுக்கல்லைச் சேர்ந்த குடும்பத்தலைவி கிறிஸ்டி, "தினமும் ஒரு லிட்டர் பால் என்ற கணக்கில் மாத பால் அட்டைக்கு 1,250 ரூபாய் இதுவரை கட்டுவோம். விலையேற்றத்துக்கு முன் 1,250 ரூபாய் கட்டியவங்ககிட்ட இப்ப மீண்டும் 128 ரூபாய் கேட்குறாங்க. பால் கொடுக்குறதுக்கு முன்னாடியே அட்வான்ஸாக பணம் வாங்கிவிட்டு, இப்ப விலையேறிடுச்சுனு கூடுதலாக கேட்பது நியாயமா?

தினமும் ஒரு லிட்டர் பால் வாங்குனா மாசம் 1,350 ரூபாய் ஆகிடுது. முதல்ல ஒன்றரை லிட்டர் வாங்குவோம். இப்ப அரை லிட்டர் குறைச்சுகிட்டு ஒரு லிட்டர்தான் வாங்கப்போறேன். எங்க சொந்தக்காரங்க வீட்டுல தினமும் ரெண்டு லிட்டர் பால் வாங்குவாங்க. அவங்களுக்கு இனிமே மாசம் ரெண்டாயிரத்து 2,700 ரூபாய் ஆகிடும். நடுத்தர குடும்பங்களுக்கு இந்தப் பால் விலை ஏற்றம் ரொம்ப சிரமத்தைக் கொடுக்கும். பட்ஜெட்ல பெரிய துண்டு விழும்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு