Published:Updated:

`கோழி பிரியாணி சாப்பிட மாட்டேன்!'- மாணவர்களிடையே வீகன் பிரசாரம்... கல்வித் துறை நடவடிக்கை!?

Veganism
Veganism

ஒரு மாணவர் தன்னுடைய குடும்பத்தில் பாரம்பர்யமாக நடக்கும் குலதெய்வ வழிபாட்டில் பங்கேற்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

கோவையில் `வீகனிசம்' என்ற பெயரில் அசைவ உணவைச் சாப்பிடக் கூடாது என்று மாணவர்களிடம் சிலர் செய்த பிரசாரம் செய்த விவகாரம் தற்போது விஸ்ரூபம் எடுத்துள்ளது.

கோயம்புத்தூரில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 'சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு அமர்வுகள்' என்ற பெயரில் மாணவர்களிடம் 'அசைவ உணவுகளைச் சாப்பிடக் கூடாது' என்று மூளைச் சலவை செய்வதாகப் புகார் எழுந்தது. குறிப்பாக, தனியார் ஸ்வீட் கடையின் உரிமையாளர் அரவிந்தன் மற்றும் விலங்குகள் உரிமை ஆர்வலர் ஹீனா ஆச்சார்யாவும் மாணவர்கள் மத்தியில் அசைவ உணவு சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து பிரசாரம் செய்வதாகக் கூறப்பட்டது. அசைவ உணவைச் சாப்பிடுவதால் வரும் பிரச்னைகள் குறித்த வீடியோக்களை மாணவர்கள் மத்தியில் ஒளிபரப்பியதாகச் சொல்லப்படுகிறது.

வீகனிசம் குறித்து வகுப்பு
வீகனிசம் குறித்து வகுப்பு

இந்தப் புகாரை உறுதிப்படுத்தும் விதமாக அரவிந்தன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகளால் 1,38,000 பேரைச் சென்றடைந்திருக்கிறோம் என்று பெருமையுடன் பகிர்ந்திருக்கிறார். மேலும், அந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் அசைவ உணவு சாப்பிட மாட்டோம் என்று தாங்கள் கைப்பட எழுதி அவர்கள் கையொப்பமிட்ட கடிதங்களையும் போட்டோ எடுத்து பதிந்திருந்தார்.

அதில் ஒரு மாணவர், 'இனி கோழி பிரியாணி சாப்பிட மாட்டேன்' என்று எழுதியிருந்தார். இந்தப் பிரசாரத்தின் எதிரொலியாக, சில மாணவர்கள் தங்களுடைய வீடுகளில் அசைவ உணவைத் தவிர்த்துள்ளனர். குறிப்பாக, ஒரு மாணவர் தன்னுடைய குடும்பத்தில் பாரம்பர்யமாக நடக்கும் குலதெய்வ வழிபாட்டில் பங்கேற்க மறுப்பு தெரிவித்துள்ளார். அதற்குக் காரணமாக, அந்த நிகழ்ச்சியில் உயிர்களைப் பலியிடுவதை தாம் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவர், சத்துணவில் வழங்குகிற முட்டையைத் தவிர்த்துள்ளார். திடீரென குழந்தைகளின் மனமாற்றத்தால் குழம்பிய பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளிடம் காரணத்தைக் கேட்டுள்ளனர்.

`மதிய உணவில் எலி... ஒரு பாக்கெட் பாலுக்கு ஒரு வாளி தண்ணீர்!’ - உத்தரப்பிரதேச மதிய உணவு அவலம்

அப்போது மாணவர்கள் பள்ளியில் நடந்த நிகழ்வுகளை தெரிவித்துள்ளனர். இதனால், அதிர்ந்துபோன பெற்றோர்கள் பள்ளியில் புகார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்துக்கு குழந்தைகள் உரிமைச் செயற்பாட்டாளர்கள் கடும் கண்டனங்களை வெளியிட்டிருந்தனர்.

இதுகுறித்துப் பேசிய குழந்தைகள் உரிமைச் செயற்பாட்டாளர் தேவநேயன், "நமது வாழ்வியல் முறை என்பது, ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பதே. அதாவது, ஓர் உயிரை அழித்து மற்றோர் உயிர் உண்டு வாழ்வது. இது இயற்கை. அந்த அடிப்படையில் நமது வாழ்வியல் முறை கட்டமைக்கப்பட்டுள்ளது.

தேவநேயன்  `தோழமை அமைப்பு'
தேவநேயன் `தோழமை அமைப்பு'

இயற்கைக்கு மாறாக இதைத்தான் சாப்பிட வேண்டும்; இதைச் சாப்பிட்டக் கூடாது என்று தனிப்பட்ட விருப்பங்களை மாணவர்கள் மத்தியில் திணிப்பது சட்டப்படிக் குற்றமாகும். முதலில் உணர்வுபூர்வமான கருத்துக்களை திணிப்பதைத் தவிர்த்துவிட்டு, பகுத்தறிவான விஷயங்களை மாணவர்களிடத்தில் பேச வேண்டும். சைவ உணவைத்தான் சாப்பிட வேண்டும் என்று கூறுவது மாணவர்கள் மத்தியில் ஒற்றுமையைச் சீர்குலைத்துவிடும்.

மாணவர்கள் மத்தியில் இப்படியான கருத்துகளைத் தனிநபர் ஒருவர் திணிப்பதை வேடிக்கை பார்த்த ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை கொடுக்க வேண்டும். மேலும், மாணவர்களை மூளைச்சலவை செய்யும் இப்படியான நபர்களை அனுமதித்தது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாகப் பள்ளிக் கல்வித்துறையில் விரிவான புகார் ஒன்றையும் அளிக்க உள்ளேன்" என்றார்.

பள்ளிக் கல்வித்துறை
பள்ளிக் கல்வித்துறை
விகடன்
``மானிய விலை உணவு வேண்டாம்!” எம்.பி-க்கள் முடிவால் அரசுக்கு ஆண்டுக்கு 17 கோடி மிச்சம்!

இந்த விவகாரத்தில் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதையறிய, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பனிடம் பேசியபோது "விசாரிக்கிறேன்" என்று நிறுத்திக் கொண்டார்.

அவரைத் தொடர்ந்து மெட்ரிக் பள்ளிக் கல்வி இயக்குநர் கருப்பசாமியிடம் பேசியபோது, "மாணவர்களிடத்தில் அசைவ உணவை சாப்பிடக் கூடாது என்று தனி நபர் தெரிவித்த அந்த விவகாரம் குறித்த புகார் எதுவும் என்னிடம் வரவில்லை. அவ்வாறு வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தனிப்பட்ட நபர்கள் யாரும் தங்களுடைய தனிப்பட்ட விருப்பங்களை மாணவர்களிடத்தில் திணிப்பதற்கு பள்ளிகள் அனுமதிக்கக் கூடாது என்று அறிவுறுத்தி பொதுவான ஒரு சுற்றறிக்கை ஒன்றை அனுப்ப உள்ளேன்" என்றார்.

அரவிந்தன்
அரவிந்தன்

இந்தப் புகார் குறித்து, இதில் தொடர்புடைய ஸ்வீட் கடை உரிமையாளர் அரவிந்தனைத் தொடர்புகொண்டு பேசியபோது, "நான் ஒரு விலங்குகள் உரிமை ஆர்வலர். வீகனிசம் என்பது உணவு முறைப் பற்றியதோ, இந்துத்துவா கொள்கைகள் பற்றியதோ அல்ல. அது ஒரு வாழ்வியல் முறை. குறிப்பாக, சூற்றுச்சூழல் மற்றும் விலங்குகளைப் பாதுகாப்பது குறித்த ஒரு வாழ்வியல். 'குதிரை சவாரி போகாதீர்கள்' என்று மாணவர்களிடத்தில் பேசுவது, எந்த வகையில் உணவுமுறையைத் தொடர்புடையதாக இருக்கும்? நாட்டு நாய் ஏன் தெரு நாய் ஆனது?நாட்டு நாய்களை எவ்வாறு பராமரிக்க வேண்டும் போன்று விலங்குகளை, சுற்றுச்சூழலை உள்ளடக்கியதே வீகனிசம்.

தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், விலங்குகளை வதைக்கக் கூடாது என்ற அடிப்படையில்தான் எனது விழிப்புணர்வு நிகழ்ச்சி இருக்கிறது. இதை மாணவர்கள் மத்தியில் மட்டுமே நான் பரப்பிவருவதாகத் திரித்து கூறப்பட்டுள்ளன. கடந்த ஐந்தாண்டுகளில் கார்ப்பரேட் கம்பெனிகள், பொது இடங்கள், கல்லூரிகள், பள்ளிகள் போன்ற இடங்களில் நிகழ்ச்சியை நடத்தி வருகிறேன். இந்த நிகழ்ச்சி நடக்கும் ஒவ்வொரு வகுப்பிலும் ஆசிரியர்களும் உடன் இருப்பார்கள். அப்படி அசைவம் சாப்பிடக் கூடாது என்று நான் பேசியிருந்தால், அவர்கள் என்னை அங்கு அனுமதித்திருப்பார்களா? எனவே அசைவம் சாப்பிடக் கூடாது என்று நான் எந்த இடத்திலும் பேசவில்லை. என்னுடைய பயிற்சி வகுப்பையே தவறாகப் புரிந்துகொண்டு பேசுகிறார்கள் என்பதே உண்மை" என்றார்.

பேலியோ, கீடோ, வீகன், பேலன்ஸ்டு டயட்...எது பெஸ்ட்? 5 பளிச் கேள்வி – பதில்கள் #NationalNutritionMonth

எது எப்படியிருந்தாலும் இவ்வகையான கோட்பாடுகளை தனிமனிதர்கள் பள்ளிக்கே வந்து மாணவர்களிடையே திணிப்பது தேவையில்லாத குழப்பத்தை மட்டுமே உருவாக்கும். பெற்றோரையும் ஆசிரியர்களையும் நம்பியே ஒரு குழந்தையின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. அப்படிப்பட்டவர்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதை உணர்ந்து சிந்தித்து பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு