Election bannerElection banner
Published:Updated:

தொடர்ந்து உயரும் முட்டை விலை... என்ன காரணம்?

முட்டை
முட்டை ( எம். விஜயகுமார் )

பரவலாக உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் முட்டையின் விலையானது தற்போது ஏறத் தொடங்கியுள்ளது. முட்டையின் இந்த விலை ஏற்றத்துக்குக் காரணம் என்ன என்பதை அறிந்துகொள்ள சம்பந்தப்பட்ட நபர்களிடம் பேசினோம்.

காலம் காலமாக ஊட்டச்சத்து நிறைந்த சிறந்த உணவாக முட்டை திகழ்கிறது. ஆரோக்கியத்திற்காக பலரும் தினந்தோறும் ஒரு முட்டை சாப்பிடுவதை நாம் காண்கிறோம். இப்படி பரவலாக உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் முட்டையின் விலையானது தற்போது ஏறத் தொடங்கியுள்ளது. முட்டையின் இந்த விலை ஏற்றத்துக்குக் காரணம் என்ன என்பதை அறிந்துகொள்ள சம்பந்தப்பட்ட நபர்களிடம் பேசினோம்.

நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் செல்வராஜ் பேசியபோது, ``இந்தியா முழுவதும் முட்டை உற்பத்தியைப் பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. முட்டை உற்பத்தி அதிகரிக்கும்போது விலை குறையும். முட்டை உற்பத்தி குறையும்போது விலை அதிகரிக்கும். இந்த சீஸனில் தமிழகத்தில் மட்டும் 3.25 கோடி முட்டை உற்பத்தியாகும். ஆனால், தற்போது 2.75 கோடி முட்டைகள்தான் வருகிறது. முட்டை உற்பத்தி குறைந்துள்ளது.

செல்வராஜ்
செல்வராஜ்

தற்போதைய நிலவரப்படி தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் ஒரு முட்டையின் விலை ரூ. 4.35 ஆக இருக்கிறது. நாமக்கல் கோழிப் பண்ணையில் ஒரு முட்டை ரூ. 4.05-க்கு விற்பனை செய்யப்படுகிறது. முட்டைகளின் விலை போக்குவரத்து செலவு, முட்டை அளவு மற்றும் கடைகளைப் பொறுத்து அதாவது முட்டை மட்டுமே விற்பனை செய்யும் கடைகளுக்கும், மற்ற பொருள்களோடு சேர்த்து முட்டையை விற்பனையாகச் செய்யும் மளிகைக் கடைகளுக்கும் விலை மாறுபடும். இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு கடைகளிலும் முட்டையின் விலை மாறுபட்டு இருக்கும்'' என்றார்.

இதுபற்றி சேலம் ஒருங்கிணைந்த பண்ணையாளர் அருள், ``ஒரு நாட்டுக்கோழி முட்டை மொத்த விற்பனையாளர்களிடம் ரூ.10-க்கும், சில்லறை வியாபாரிகளிடம் ரூ.15-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நாட்டுக்கோழி முட்டை புரோட்டின் சத்து நிறைந்தது. அதன் மஞ்சள் கரு சாப்பிட்டாலும் எந்தப் பாதிப்பும் இல்லை. முன்பெல்லாம் ஒரு மாதத்துக்கு 5 முதல் 7 முட்டைகள் சாப்பிட்டார்கள். ஆனால், தற்போது 20 முதல் 25 முட்டைகள் சாப்பிடுகிறார்கள்.

அருள்
அருள்

பிராய்லர் கோழி முட்டைகளைவிட நாட்டுக்கோழி முட்டைகளை மக்கள் விரும்பி சாப்பிடுவதால் அவற்றின் தேவை அதிகமாக உள்ளது. ஆனால், நாட்டுக்கோழி முட்டை உற்பத்தி மிகக் குறைவாக இருப்பதால் பிராய்லர் கோழிகளின் சிறிய முட்டைகளை எடுத்துக் கொள்ளு தண்ணீரில் அல்லது டீ தூள் தண்ணீரில் சாயம் ஏற்றி நாட்டுக்கோழி முட்டை என்று ஏமாற்றி விற்பனை செய்யக்கூடியவர்களும் இருக்கிறார்கள்'' என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு