பசிக்கிறதா?
விரல்நுனியில் இருக்கின்றன, உணவு 'ஆப்'கள். ஆர்டர் செய்துவிட்டு, சிறிது நேரம் காத்திருந்தால், நாம் இருக்கும் இடத்திற்கே வந்துசேர்கிறது, நாம் கேட்ட உணவு. 21-ம் நூற்றாண்டின் தொழில்நுட்பப் புரட்சியால், எவ்வளவோ மாற்றங்கள் நாள்தோறும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அதேவேளையில், இன்னும் பசியால் செத்துக்கொண்டிருக்கிறான் ஏழை இந்தியன்.

இன்று உலக உணவு தினம். உத்தரப்பிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்திலுள்ள சியுர் கிராமத்தின் அரசுப் பள்ளியில் நடந்த துயரத்தை, இந்த நாளில் மீண்டும் நினைவுகூரப்பட வேண்டும்.
கடந்த ஆகஸ்ட் மாதம் சியுர் அரசுப் பள்ளிக்குச் சென்ற பத்திரிகையாளர் பவன் ஜெய்ஸ்வால், அங்கு மதிய உணவாக, குழந்தைகளுக்கு ரொட்டியும், உப்பும் வழங்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ந்துபோனார். அதைச் செய்தியாகப் பதிவு செய்தார், ஜெய்ஸ்வால். இதனால் உத்தரப்பிரதேச அரசு ஜெய்ஸ்வால் மீது குற்றச்சதி செய்தது; அரசுப் பணியாளரைப் பணி செய்யவிடாமல் தடுத்தது முதலான பிரிவுகளில் வழக்குகள் பதிவுசெய்தது.

சியுர் பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர், தங்கள் குழந்தைகள் தினமும் ரொட்டியும், உப்பும் அல்லது அரிசிச்சோறும் உப்பும் மட்டுமே பள்ளியில் உண்பதாகக் கூறினர். சியுர் பள்ளியின் சத்துணவு ஊழியர், ``உணவு தயாரிக்க அரிசி, ரொட்டி, உப்பு ஆகியவற்றைத் தவிர எதுவும் அரசால் அளிக்கப்படுவதில்லை" என்றார். பல்வேறு அரசியல் அழுத்தங்களுக்குப் பிறகு, ஜெய்ஸ்வால் விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, ஜார்க்கண்ட் மாநிலத்தில் பசியால் மக்கள் செத்து மடிவது பெரும் பிரச்னையாகக் கருதப்பட்டது. உலகப் புகழ்பெற்ற பொருளாதார அறிஞரான ஜீன் ட்ரீஸ் ஜார்க்கண்ட் மாநிலத்தில், ஒரு நிகழ்ச்சியை நடத்த, அதற்காக அவர் கைதுசெய்யப்பட்டார். சிறிது நேரம் கழித்து, ஜீன் ட்ரீஸ் விடுதலை செய்யப்பட்டாலும், பொருளாதார நிபுணர் ஒருவர், அரசின் கொள்கை தோல்வியை வெளிப்படுத்தியதற்காகக் கைதுசெய்யப்பட்டது பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

உணவில்லாமல் குடிமக்கள் தவிப்பது, தற்போதைய பி.ஜே.பி ஆட்சியில் மட்டும் நிகழும் பிரச்னையல்ல. இந்தியாவின் பிரதமராக மன்மோகன் சிங் இருந்தபோது, உணவு தானியங்களைச் சேமிக்க இடமில்லாமல், திறந்தவெளியில் கொட்டிவைக்கப்பட்டு, பல லட்சக்கணக்கான டன் தானியங்கள் வீணாகின. மழைக்காலத்தில், 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 6.6 மில்லியன் டன் கோதுமை சேதமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகின.
உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் வீணாகும் உணவை மக்களுக்கு இலவசமாக அளிக்க முடியுமா என்று கேட்டபோது, அப்போதைய மன்மோகன் அரசு, ``உணவுப் பொருட்களை இலவசமாகக் கொடுக்க முடியாது" என்று கூறியது.
ஆட்சி மாறினாலும், ஏழை இந்தியன் பசியோடு இருப்பது மாறவில்லை. சந்தையில் விற்பனைப் பொருளாக, உணவும் நீரும் மாற்றப்பட்ட பிறகு, எந்த ஆட்சி தொடர்ந்தாலும், ஏழை இந்தியன் பட்டினி கிடப்பதே தலைவிதி என மாற்றப்பட்டது.

ஆண்டுதோறும், `சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு மையம்' என்ற நிறுவனம், `உலகப் பட்டினி குறியீடு' என்னும் தரவரிசைப் பட்டியலை வெளியிடுகிறது. கடந்த 2018-ஆம் ஆண்டில், உலக அளவில், 119 நாடுகளுள், இந்தியா 103-வது இடத்தைப் பெற்றிருந்தது. இந்தியாவில் வாழும் மக்களுள், 15 சதவிகிதம் பேர், தீவிர ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக வாழ்வதையும் இந்த அறிக்கை குறிப்பிட்டது.
சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்டிருந்த, `உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு ஆய்வறிக்கை 2019'-இல், இந்தியாவின் பெரும்பான்மைப் பகுதிகளில் பசியால் வாடும் குழந்தைகள் பற்றியும், அவர்களிடம் பரவியிருந்த ஊட்டச்சத்துக் குறைபாடு பற்றியும் கூறியிருந்தது.
இந்தியா முழுவதும் 38.4 சதவிகிதம் குழந்தைகள் வயதுக்கேற்ற உயரத்தில் இல்லை; 21சதவிகிதம் குழந்தைகள் உயரத்திற்கேற்ற எடையில் இல்லை; 35.7 சதவிகிதம் குழந்தைகள் எடைக்குறைவாகவும் உள்ளனர். இந்தியா முழுவதும் 21 சதவிகிதம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டாலும், 38.4 சதவிகிதம் குழந்தைகள் தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு ஆய்வறிக்கை 2019

இந்த அறிக்கையின்படி, தமிழ்நாடு முழுவதும் 12.9 சதவிகிதம் குழந்தைகள் வயதுக்கேற்ற உயரத்தில் இல்லை; 8 சதவிகிதம் குழந்தைகள் உயரத்திற்கேற்ற எடையில் இல்லை; 1.9 சதவிகிதம் குழந்தைகள் எடைக்குறைவாகவும் உள்ளனர்.
இந்தக் குழந்தைகள் சமூகத்தின் விளிம்புநிலையில் வாழும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களுள் பெரும்பான்மையானோர் தாழ்த்தப்பட்டவர்களும், பழங்குடியினரும் ஆவர்.
ஊட்டச்சத்து குறைபாடுள்ள தாய்மார்களுக்குப் பிறக்கும் இந்தக் குழந்தைகள், பிற்காலத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டால் கல்வி கற்க முடியாமல் போகிறது. அதன் காரணமாக, வறுமை தொடர்கிறது. இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் ஊட்டச்சத்து குறைபாட்டோடு பிறக்கின்றன. வறுமை, பசி எனத் தொடரும் இந்தச் சுழற்சி, தலைமுறை தலைமுறையாகப் பரிமாறப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

``வறுமை என்பது உணவுத் தட்டுப்பாட்டால் உருவாவது அல்ல; வறுமை, உணவை அடைவதற்கு வழியில்லாமல் இருப்பதால் உருவாகிறது.''அமர்த்தியா சென், பொருளாதார அறிஞர்
நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென், "வறுமை என்பது உணவுத் தட்டுப்பாட்டால் உருவாவது அல்ல; வறுமை, உணவை அடைவதற்கு வழியில்லாமல் இருப்பதால் உருவாகிறது" என்றார். அதன்படி, பட்டினியால் வாடுபவர்கள் உணவை அடைவதற்குச் சமூகரீதியான, நிர்வாகரீதியான, பொருளாதாரரீதியான தடைகள் உள்ளன.
கடந்த 2017-ஆம் ஆண்டு, மத்திய அரசு தேசிய ஊட்டச்சத்து திட்டத்தைத் தொடங்கியது. 'போஷான் அபியான்' என்று அழைக்கப்படும் இந்தத் திட்டத்தின்படி, தீவிர ஊட்டச்சத்து குறைபாடு நாட்டின் மிகப்பெரிய பிரச்னையாகக் கருதப்படுகிறது. குழந்தைகளின் ஆயுட்காலத்தில் முதல் 1000 நாள்கள், அதாவது 3 ஆண்டுகள் முக்கியமானது. இதைக் கணக்கில்கொண்டு, மத்திய அரசு மாநில அரசோடு இணைந்து, திட்டங்களைச் செயலாற்றி வருகிறது.

2022-ஆம் ஆண்டுக்குள், எடை குறைவாகப் பிறக்கும் குழந்தைகள், எடை குறைவான குழந்தைகள் ஆகியவற்றின் எண்ணிக்கையில் ஆண்டுதோறும் 2 சதவிகிதம் குறைக்கவும், வயதிற்கேற்ற உயரமில்லாத குழந்தைகளின் எண்ணிக்கையை 25 சதவிகிதம் குறைக்கவும், ரத்தசோகை நோயாளிகளாக வாழும் பெண்கள், குழந்தைகள் ஆகியோரின் எண்ணிக்கையில் ஆண்டுதோறும் 3 சதவிகிதம் குறைக்கவும் திட்டமிட்டிருப்பதாகக் கூறியுள்ளது.
தற்போதைய வேகத்தில் இந்தத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டால், நிலைமை இன்னும் மோசமடையும் எனக் கூறுகிறது ஓர் ஆய்வறிக்கை. மத்திய, மாநில அரசுகள் இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கும் நிதித்தொகைமீது மிகவும் குறைவாக இருப்பதே இதன் காரணம்.

இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியைப் பாதிக்கும் சமூகப் பொருளாதாரப் பிரச்னையாக மாறியுள்ளது, பட்டினி. இந்தியா முழுவதும் பொருளாதார மந்தநிலை நீடிக்கிறது. பட்டினியாலும், ஊட்டச்சத்துக் குறைபாட்டாலும், ஏழை இந்தியன் அவதியுற்று வாழும் அதே நேரத்தில், அம்பானி, அதானி, உதய் கோடக் ஆகியோரின் சொத்து பெருகியுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த முரணில் அடங்கியிருக்கிறது பட்டினி ஒழிப்புக்கான பதில்!