அரசியல்
அலசல்
Published:Updated:

“செருப்பை திருடினா போலீஸ்கிட்ட போக மாட்டாங்க!” - ‘அரை டிரவுசர்’ திருடர்களின் குபீர் வாக்குமூலம்

“செருப்பை திருடினா போலீஸ்கிட்ட போக மாட்டாங்க!”
பிரீமியம் ஸ்டோரி
News
“செருப்பை திருடினா போலீஸ்கிட்ட போக மாட்டாங்க!”

சென்னை சேலையூர் போலீஸ் லிமிட்டுக்குள் வரும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து செருப்புகள் மட்டும் காணாமல்போகத் தொடங்கின.

அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் ஆமைபோலப் புகுந்து, செருப்புகளைத் திருடும் அரை டிரவுசர் திருடனின் வீடியோ ஒன்று வெளியாக, போலீஸ் அவனைக் கைதுசெய்தது. ‘இதற்கெல்லாமா போலீஸ் கைதுசெய்யும்?’ என்று கேட்டால், “அஞ்சு பைசா திருடுனா தப்பில்ல... அதையே அஞ்சு கோடி தடவை திருடுனா?” என்ற `அந்நியன்’ பட வசனமே பதிலாக வருகிறது. ஆம், ஆயிரத்துக்கும் மேற்பட்ட செருப்புகளைத் திருடியதோடு, அதையே தொழிலாகவும் வைத்திருந்திருக்கிறது ஒரு கும்பல்!

சென்னை சேலையூர் போலீஸ் லிமிட்டுக்குள் வரும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து செருப்புகள் மட்டும் காணாமல்போகத் தொடங்கின. “என்னடா இது..?” என அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகள் தங்கள் சிசிடிவி காட்சிகளைச் சோதனையிட்டிருக்கிறார்கள். அதில், ஷார்ட்ஸ் மட்டும் அணிந்த இளைஞர் ஒருவர், நகையைக் கொள்ளையடிப்பது போல படு ஜாக்கிரதையாகத் தவழ்ந்து வந்து செருப்புகளை அபேஸ் செய்யும் காட்சி பதிவாகியிருந்தது. இது குறித்து குடியிருப்புவாசிகள் வாய்மொழியாகப் புகாரளிக்க, வாய்விட்டுச் சிரித்துவிட்டார்கள் போலீஸார். ஆனாலும், ரோந்து போலீஸார் உஷாராக, மீண்டும் வந்த செருப்புத் திருடர்கள் வசமாகச் சிக்கிக்கொண்டார்கள்.

“செருப்பை திருடினா போலீஸ்கிட்ட போக மாட்டாங்க!” - ‘அரை டிரவுசர்’ திருடர்களின் குபீர் வாக்குமூலம்

இது குறித்து சேலையூர் போலீஸாரிடம் பேசினோம். “அடுக்குமாடிக் குடியிருப்புகளில் செருப்புகளைத் திருடிய இளைஞர் விகாஸ்குமாரையும், அவரின் நண்பனான ரோகித்குமாரையும் கைதுசெய்திருக்கிறோம். தாம்பரம் கேம்ப் ரோடு பகுதியில் அறை எடுத்துத் தங்கியிருந்த அவர்கள் அந்தப் பகுதியிலுள்ள பேக்கரி ஒன்றில் வேலை பார்த்தனர். நள்ளிரவு நேரங்களில் செக்யூரிட்டி இல்லாத அடுக்குமாடிக் குடியிருப்புகளில் செருப்புகளைத் திருடி, பல்லாவரம் வெள்ளிக்கிழமைச் சந்தையில் குறைந்த விலைக்கு விற்பதை ‘பார்ட் டைம் ஜாப்’பாகச் செய்திருக்கிறார்கள். ‘செருப்புகளைத் திருடினால் யாரும் போலீஸுக்குப் போக மாட்டார்கள் என இந்தத் தொழிலைத் தேர்ந்தெடுத்தோம். இதன் மூலம் மாதம்தோறும் 5,000 முதல் 10,000 வரை சம்பாதித்தோம்’ என்றார்கள். அவர்களின் அறையிலிருந்து 50 ஜோடி திருட்டுச் செருப்புகளைக் கைப்பற்றியிருக்கிறோம். இவர்களின் கூட்டாளியான சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்த அருள் என்பவனையும் கைதுசெய்திருக்கிறோம்” என்றனர்.

“செருப்பை திருடினா போலீஸ்கிட்ட போக மாட்டாங்க!” - ‘அரை டிரவுசர்’ திருடர்களின் குபீர் வாக்குமூலம்

`சட்டை ஏதும் அணியாமல், ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து திருடியது ஏன்?’ என்று போலீஸார் கேட்டதற்கு, “சட்டையோ, டி-ஷர்ட்டோ போட்டால் அதன் கலர் அல்லது எழுத்துகளை வைத்து போலீஸ் எங்களைப் பிடித்துவிடும் என்பதால்தான் புத்திசாலித்தனமாக அப்படி வந்தோம்” என்றிருக்கிறார்கள்.

செருப்புக்கெல்லாம் செக்யூரிட்டி போட வைத்துவிடுவார்கள்போல!