தமிழகம் முழுவதும் பசுமைக் குழுக்களை அமைத்து இயற்கை வளங்களைப் பாதுகாக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருநெல்வேலியில் மாவட்ட அளவில் பசுமைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் சார்பாக ஏற்கெனவே மூன்று கட்டங்களாக நீர்நிலைகளைப் பாதுகாப்பது தொடர்பான பணிகள் நடைபெற்றன.

பசுமைக் குழுக்கள் சார்பாக ஏற்கெனவே மரங்கள் வெட்டப்படுவதை முறைப்படுத்துவது, தேவையான இடங்களில் மரங்களை நடுவதற்கு ஏற்பாடுகளைச் செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தன்னார்வலர்கள் பங்கேற்பில் நடக்கும் இந்தப் பணிகளால் பொது இடங்களில் உள்ள மரங்கள் வெட்டப்படுவது போன்றவை குறைந்துள்ளன.
இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் பொது இடங்களில் உள்ள மரங்கள் கணக்கெடுப்பு பணிகள், தமிழகத்திலேயே முதல் முறையாக நடைபெறவுள்ளன. நெல்லை மாவட்ட நிர்வாகம், வனத்துறை மற்றும் `ஏ ட்ரீ’ என்ற அகத்திய மலை மக்கள் சார் இயற்கைவள காப்பு மையம் ஆகியவை இணைந்து இந்தப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

மரங்களைக் கணக்கெடுக்கும் பணிகளைத் தொடங்கி வைத்த நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, ``பசுமைக்குழு சார்பாக நெல்லை மாவட்டத்தில் உள்ள நீர்வளங்களைப் பாதுகாக்கும் பணிகளும் அவற்றை டிஜிட்டலில் மேப்பிங் செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன. மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி நதியை சமவெளியில் தலைகாட்டும் பாபநாசம் முதல் கடலில் கலக்கும் புன்னக்காயல் வரை பசுமைக்குழுவினர் ஆய்வு செய்வார்கள்.
தாமிரபரணி தடத்தில் 57 இடங்கள் கண்டறியப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். தேவையான இடங்களில் நதிக்கரையில் சீரமைப்பு செய்யும் பணிகளும் நடக்கும். அத்துடன், நதிக்கரையில் மரக்கன்றுகளை நடவு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தன்னார்வலர்களுடன் உள்ளாட்சி அமைப்புகளும் இணைந்து இந்தப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது மரங்களைக் கணக்கெடுக்கும் பணிகள் நடக்கவுள்ளன. பொது இடங்கள், நீர் நிலைகள், கோயில் வளாகங்கள் ஆகிய இடங்களில் ஏராளமான மரங்கள் உள்ளன. முதல்கட்டமாக நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த 153 கோயில்கள் அடையாளம் காணப்பட்டும் அங்குள்ள மரங்களைக் கணக்கெடுக்கும் பணிகள் நடக்க உள்ளன.
கோயில் மரங்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்ட பின்னர், பொது இடங்களில் உள்ள மரங்களைக் கணக்கெடுக்க உள்ளோம். இந்த பணியில் 40 தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த கணக்கெடுப்பில் தன்னார்வலர்களுடன் நேரு யுவகேந்திரா உறுப்பினர்களும் பங்கேற்பார்கள்.
கணக்கெடுப்பின்போது மரங்களின் வகை என்ன என்பது பற்றியும் அவற்றின் வயது, உயரம், அகலம் போன்ற தகவல்களும் சேகரிக்கப்படும். அத்துடன், அந்த மரங்களால் கிடைக்கும் பயன்கள் பற்றிய தகவல்களையும் சேகரிப்பார்கள். அந்த மரத்தில் வாழும் பறவை இனங்கள் பற்றியும் மரத்தைச் சுற்றிலும் உள்ள வாழ்வியல் நிலை பற்றிய தகவல்களும் சேகரிக்கப்படும். கணக்கெடுப்பின்போது, நிறைய புதிய தகவல்கள் கிடைக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது. சில மரங்களுக்கு விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு தேவைப்படுமானால் அதற்கு வழிவகை செய்யப்படும்” என்றார்.
இந்தக் கணக்கெடுப்பு மூலம் இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையேயான பாரம்பர்ய உறவு குறித்த முக்கியத் தகவல்கள் தெரியவரும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

மரங்கள் கணக்கெடுப்பு பணியில், மாவட்ட வன அலுவலர் முருகன், அகத்திய மலை மக்கள் சார் இயற்கைவள காப்பு மையத்தின் (ஏ ட்ரீ) ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். திருநெல்வேலி குறித்த நூல்களில் மரங்கள் பற்றிய தகவல்கள் அதிகம் இடம்பெற்றுள்ள நிலையில் தற்போதைய கணக்கெடுப்பு மூலம் சமகால தகவல்கள் கிடைக்கும் என இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.