Published:Updated:

``பாஜக ஆதரவு யாருக்கு... இரட்டை இலை யாருக்கு... யார் வேட்பாளர்?” - செங்கோட்டையன் பதிலென்ன?

செங்கோட்டையன்
News
செங்கோட்டையன்

``இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட முடியுமா... அதிமுக வேட்பாளர் யார்... பாஜக ஆதரவு அளிக்குமா?” போன்ற கேள்விகளுக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார்.

Published:Updated:

``பாஜக ஆதரவு யாருக்கு... இரட்டை இலை யாருக்கு... யார் வேட்பாளர்?” - செங்கோட்டையன் பதிலென்ன?

``இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட முடியுமா... அதிமுக வேட்பாளர் யார்... பாஜக ஆதரவு அளிக்குமா?” போன்ற கேள்விகளுக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார்.

செங்கோட்டையன்
News
செங்கோட்டையன்

ஈரோடு கிழக்குத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் தேர்தல் பணிமனை அமைப்பதற்கான பந்தக்கால் நடும் நிகழ்வு இன்று காலை ஈரோட்டில் நடைபெற்றது. முன்னாள் ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ தென்னரசு, முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், பகுதிச் செயலாளர்கள் மனோகரன், சூரம்பட்டி ஜெகதீசன், த.மா.கா இளைஞரணி மாநிலச் செயலாளர் யுவராஜா, மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் பந்தல் அமைக்கும் பணியைத் தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.ஏ.செங்கோட்டையன், ``ஈரோடு கிழக்குத் தொகுதியைப் பொறுத்தவரை, எப்போதும் அ.தி.மு.க-வின் கோட்டையாக இருந்திருக்கிறது. எங்களைப் பொறுத்தவரையிலும் இந்தத் தேர்தலில் அமைதியான முறையில் பிரசாரம் செய்தும் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களிடம் வாக்குகளைச் சேகரித்தும் நாங்கள் வெற்றி பெறுவோம். மற்றவர்கள் கூறுவதைப்போல ஆளுங்கட்சியினர் இந்தத் தேர்தலில் எளிதாக வெற்றி பெற்றுவிட முடியாது. எங்களது கூட்டணிக் கட்சியினருடன் கலந்து பேசி யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதைக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார். அ.தி.மு.க-வைப் பொறுத்தவரையிலும் முதன்முதலாக 1972 ஆம் ஆண்டு திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு எப்படி வெற்றி பெற்றோமோ அதே போன்ற ஒரு வெற்றியை ஈரோடு கிழக்குத் தொகுதியில் நாங்கள் பெறுவோம்.

பந்தக்கால் நடும் நிகழ்வு
பந்தக்கால் நடும் நிகழ்வு

தற்போதைய சூழ்நிலையில் மக்கள் மனம் மாறியிருக்கிறார்கள். ஆளுங்கட்சி மீதான வெறுப்பு அதிகரித்திருக்கிறது. நாங்கள் வாக்கு சேகரிக்கச் செல்லும் இடங்களிலெல்லாம், `எங்களது ஆதரவு உங்களுக்குத்தான்’ என்று மக்கள் ஆர்வத்தோடு கூறுகிறார்கள். ஆகவே, வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்டே அ.தி.மு.க இந்தத் தேர்தலில் பணியாற்றும். அ.தி.மு.க-வைப் பொறுத்தவரையிலும் இந்தத் தொகுதியில் போட்டியிட  விருப்பம் தெரிவிப்பவர்களிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு அதைப் பரிசீலனை செய்த பிறகு வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.

இரட்டை இலைச் சின்னத்தில் நாங்கள் போட்டியிடுவோமா... யார் வேட்பாளர்... பாஜக எங்களுக்கு ஆதரவு அளிக்குமா... என்பது போன்ற கேள்விகள் அனைத்துக்கும் ஒரே பதில், "பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்பதாகத்தான் இருக்கும். தேர்தல் களத்தில் எப்படி போட்டிகள் இருக்கிறது என்பதைப் பொறுத்தே எதையும் கூற முடியும்.

நிர்வாகிகளுடன் ஆலோசனை
நிர்வாகிகளுடன் ஆலோசனை

தேர்தல் பிரசாரம் ஏன் இன்னும் தொடங்கவில்லை என்று கேட்கிறீர்கள். அதற்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. இப்போது எங்கள் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுத்து வருகிறோம். தொகுதி முழுவதும் காங்கிரஸுக்கு ஆதரவாக அனுதாப அலை வீசுவதாகக் கூறுவதை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது. தேர்தல் களம் என்பது வேறு. இங்கு மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது என்பதை பொறுத்துதான் வெற்றி, தோல்வி அமையும். இந்தத் தேர்தலை வெற்றிகரமான முறையில் எதிர்கொண்டு நாங்கள் அமைதியான முறையில் வெற்றி பெறுவோம்” என்றார்.