அரசியல்
அலசல்
Published:Updated:

மோசடி புகாரில் தி.மு.க நிர்வாகி... பரபரக்கும் மதுரை அரசியல்!

ஒச்சுபாலு
பிரீமியம் ஸ்டோரி
News
ஒச்சுபாலு

தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்யக் கடன் கேட்டுத்தான் ஒச்சுபாலுவை நாடினேன். மேற்கொண்டு 5 லட்ச ரூபாய்க்குக் கடனாளியாக்கி விட்டார்

“குறைந்த வட்டியில் கடன் தருவதாகக் கூறி என்னையும், எனக்குத் தெரிந்தவர்களையும் ஏமாற்றிப் பண மோசடி செய்ததோடு, கொடுத்த பணத்தைக் கேட்டதற்கு கொலை மிரட்டலும் விடுக்கிறார் மதுரை மாநகர தி.மு.க அவைத்தலைவர் ஒச்சுபாலு’’ என்று ஜூ.வி-க்குப் புகார் அனுப்பியிருந்தார் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த முனீஸ்வரன்!

தி.மு.க-வில் தொண்டரணி நிர்வாகியாக இருந்து, பகுதி கழகச் செயலாளராக வளர்ந்த ஒச்சுபாலு, தற்போது மாநகர அவைத்தலைவராக இருக்கிறார். இவர், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மூன்று பேரிடம் 27 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக 2011-ல் கைதுசெய்யப்பட்டார். அதன் பிறகு வங்கி ஊழியரிடம் பணம் கேட்டு மிரட்டிய புகாரிலும், நகைப்பட்டறை ஊழியரின் நிலத்தை அபகரிக்க முயன்ற வழக்கிலும் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்மீது அப்போது குண்டர் சட்டமும் பாய்ந்தது. பின்பு அதிலிருந்து விடுவிக்கப்பட்டார். 2021-ல் ஆரப்பாளையம் 13-வது வார்டில், ‘தூக்குமேடை பாலு நினைவு படிப்பக’த்தை இடித்ததாக ஒச்சுபாலு மீது சி.பி.எம் தோழர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

ஒச்சுபாலு
ஒச்சுபாலு

இந்த நிலையில், தற்போது பண மோசடிப் புகார் கூறியிருக்கும் முனீஸ்வரனிடம் பேசினோம், “நான் ஸ்ரீவில்லிபுத்தூரில் எலெக்ட்ரானிக் சர்வீஸ் கடை நடத்தியபடி, ரியல் எஸ்டேட் தொழிலும் செய்துவருகிறேன். ‘பெரிய அளவிலான வரவு செலவுகளுக்கு கோடிக்கணக்கில் ஃபைனான்ஸ் தேவைப்பட்டால் சொல், கைவசம் ஆள் இருக்கிறது’ என என் நண்பர் மூலமாக அறிமுகமானவர்தான் ஒச்சுபாலு. தி.மு.க ஆட்சியிலிருந்த 2006-2011 காலகட்டத்தில் மாவட்ட வேளாண்மை விற்பனைக்குழுத் தலைவராக இருந்ததோடு, ஃபைனான்ஸ் தொழிலும் செய்துவந்தார்.

அந்த சமயம் தொழில் விரிவாக்கத்துக்காக ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் 3 கோடி ரூபாயும், ஸ்பின்னிங் மில் உரிமையாளர் 10 கோடி ரூபாயும், தென்காசியைச் சேர்ந்த ரைஸ் மில் உரிமையாளர் ஒரு கோடி ரூபாயும் ஃபைனான்ஸ் வாங்கித்தரக் கேட்டு என்னை அணுகினார்கள். உடனே, கடன் கேட்ட நபர்களுடன் மதுரை கரிமேடு பகுதியில் வசிக்கும் ஒச்சுபாலுவின் வீட்டுக்கு நேரில் சென்றேன். ஃபைனான்ஸுக்கு அடமானமாக, சொத்துப் பத்திரம் தரச்சொல்லி ஒச்சுபாலு எங்களிடம் கேட்டார். பார்ட்டிகளும் தாங்கள் கொண்டு வந்திருந்த சொத்துப் பத்திர நகல்களைக் கொடுக்கவும் சொத்து மீதான வில்லங்கம், சொத்தை நேரில் கள ஆய்வு செய்வதற்கான‌ ஏற்பாடு, போக்குவரத்து செலவு, டாக்குமென்ட் சார்ஜ் என டாக்டரிடமிருந்து ரூ.1.3 லட்சம், ஸ்பின்னிங் மில் உரிமையாளரிடமிருந்து ரூ.6.81 லட்சம், ரைஸ் மில் உரிமையாளரிடமிருந்து ரூ.1.48 லட்சம், என்னிடம் ரூ.40,000 எனப் பெற்றுக்கொண்டார் ஒச்சுபாலு.

முனீஸ்வரன்
முனீஸ்வரன்

ஆனால், நான் அழைத்துவந்த பார்ட்டிகளுக்கு கடன் வழங்காமல் இழுத்தடித்தார். எனவே, ‘எங்களுக்குக் கடனே வேண்டாம், வாங்கிய பணத்தைத் திருப்பித் தந்துவிடுங்கள்’ எனக் கேட்டு, வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பினோம். பல மாதங்கள் இழுத்தடிப்புக்குப் பிறகு டாக்டருக்கு முழுத்தொகையையும், ஸ்பின்னிங் மில் உரிமையாளருக்குப் பல தவணைகளாக ரூ.1.75 லட்சமும், தென்காசி ரைஸ் மில் உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரமும் திருப்பிக் கொடுத்துவிட்டு மீதிப் பணத்தை தராமல் எங்களை ஏமாற்றிவருகிறார். இது தொடர்பாக, மதுரை கரிமேடு காவல் நிலையம் தொடங்கி, முதலமைச்சர் தனிப்பிரிவு வரை பல இடங்களுக்கும் புகார் அனுப்பியிருக்கிறேன். இப்படிச் சட்டரீதியாகச் செல்வதால் ஆட்களை ஏவி, எங்கள் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறார். எனது உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு ஒச்சுபாலுவே முழுப்பொறுப்பு” என்றார் கொதிப்பாக.

பணம் கொடுத்து ஏமாந்த ஸ்பின்னிங் மில் உரிமையாளரோ, “தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்யக் கடன் கேட்டுத்தான் ஒச்சுபாலுவை நாடினேன். மேற்கொண்டு 5 லட்ச ரூபாய்க்குக் கடனாளியாக்கி விட்டார். ஸ்பின்னிங் மில், இயந்திரம் உள்ளிட்ட அனைத்தையும் விற்றுத்தான் கடன்களை அடைத்திருக்கிறேன்” என்றார்.

இதையடுத்து குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு ஒச்சுபாலுவிடம் பேசினோம். “முனீஸ்வரன் சொல்வது அனைத்தும் பொய். அவர்தான் என்னை ஏமாற்றிப் பணம் பறித்தார். நான் லைசென்ஸ் பெற்று, முறையாக ஃபைனான்ஸ் தொழில் செய்துவருகிறேன். இன்னொரு ஃபைனான்ஸியரிடம் ரெகவரி ஏஜென்ட்டாக இருந்த முனீஸ்வரன், கடன் வழங்க வேண்டுமென்று சிலரை என்னிடம் அழைத்து வந்தார். அந்த அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு கடன் வழங்கினேன். சிலருக்குக் கடன் கொடுக்க மறுத்தேன். மற்றபடி யாரிடமும் முன்பணம் வாங்கவில்லை. பிறகு விசாரிக்கும்போதுதான் முனீஸ்வரன் ஃபிராடு என்று தெரியவந்தது. காவல்துறை அதிகாரிகளின் பெயரைச் சொல்லி மிரட்டி, என்னிடமும் பணம் பறித்தார். மேலும், அவர் கொடுத்த புகாரால் காவல்துறையினரிடம் சென்று அனைத்து ஆவணங்களையும் காட்டி என் விளக்கத்தைக் கூறினேன். ஆனால், அவரோ எந்த ஆவணமும் இல்லாமல், போலீஸிலும் ஆஜராகாமல் என்மீது தொடர்ந்து புகார் அனுப்பிவருகிறார். வங்கி மூலம் நான் பணம் கொடுத்ததற்கான அனைத்து ஆவணங்களையும் வைத்திருக்கிறேன்.

கோ.தளபதி
கோ.தளபதி

தி.மு.க-வில் நான் அவைத்தலைவர் பதவிக்கு வந்ததைப் பொறுக்க முடியாமல் சிலர் முனீஸ்வரன் மூலம் என்மீது அவதூறு கிளப்புகிறார்கள். கடந்தகாலத்தில், என்மீது போடப்பட்ட வழக்குகளெல்லாம் அ.தி.மு.க ஆட்சியில் பழிவாங்குவதற்காகப் போடப்பட்டவை. கம்யூனிஸ்ட் கட்சியினரை என் கட்சியிலுள்ள சிலரே தூண்டிவிட்டு, புகார் கொடுக்கவைத்தனர். எல்லாவற்றையும் நான் சட்டப்படியே அணுகிவருகிறேன்” என்றார்.

இதையடுத்து தி.மு.க மாநகரச் செயலாளர் கோ.தளபதியிடம் இந்த விவகாரம் குறித்துக் கேட்டபோது, ‘‘நீண்டகால கட்சி நிர்வாகி என்பதால்தான் ஒச்சுபாலுவுக்கு அவைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், கட்சியில் அவருக்குப் பிடிக்காத சிலரே இப்படி வதந்தியைக் கிளப்புகிறார்கள்’’ என்றார்.

இது போன்ற அவப் பெயர்களால்தான், கடந்த 2011 தேர்தலில் மதுரையிலுள்ள 10 தொகுதிகளையும் இழந்தது தி.மு.க. அதே நிலை மீண்டும் வராமலிருந்தால் சரி!