அரசியல்
அலசல்
Published:Updated:

இலவச வேட்டி, சேலை உற்பத்தி தாமதம்... என்ன சொல்கிறார் அமைச்சர் காந்தி?

இலவச வேட்டி, சேலை உற்பத்தி
பிரீமியம் ஸ்டோரி
News
இலவச வேட்டி, சேலை உற்பத்தி

இலவச வேட்டி, சேலை உற்பத்தியை, கடந்த ஜூன் மாதத்திலேயே தொடங்கியிருந்தால் தற்போது 80% பணிகளை முடித்திருக்கலாம்.

இலவச வேட்டி, சேலை உற்பத்தி தாமதம் குறித்து அ.தி.மு.க அறிக்கை வெளியிட்டிருப்பதைத் தொடர்ந்து ‘பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை கிடைக்குமா?’ என்ற கேள்வி எழுந்திருக்கிறது!

கள நிலவரம் குறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில செய்தித் தொடர்பாளர் கந்தவேலிடம் கேட்டோம். ‘‘இந்த ஆண்டு 99,56,683 சேலைகளும், 1,26,19,004 வேட்டிகளும் விசைத்தறியில் நெய்வதற்கு அரசு உத்தரவிட்டிருந்தது. வேட்டி, சேலை நெய்வதற்காகத் துணிநூல்துறை மூலம் வழங்கப்பட்ட பாவு நூல் தரமின்றி இருந்ததால் ஒட்டுமொத்த நெசவாளர்களும் புகார் தெரிவித்துவிட்டு இலவச வேட்டி, சேலை நெய்யும் பணியை நிறுத்திவிட்டனர். அதன் பிறகே தரமான பாவு நூல் வழங்கப்பட்டது. இதனால் தற்போது வரை 45% சேலைகளும், 30% வேட்டிகளும் மட்டுமே உற்பத்தியாகியிருக்கின்றன’’ என்றார்.

இலவச வேட்டி, சேலை உற்பத்தி தாமதம்... என்ன சொல்கிறார் அமைச்சர் காந்தி?

ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் வி.கே.மோகனசுந்தரம், ‘‘இலவச வேட்டி, சேலை உற்பத்தியை, கடந்த ஜூன் மாதத்திலேயே தொடங்கியிருந்தால் தற்போது 80% பணிகளை முடித்திருக்கலாம். ஆனால், மிகத் தாமதமாக அக்டோபரில்தான் அதற்கான அரசாணையை அரசு பிறப்பித்தது. நூல் டெண்டர் விடுவதில் ஏற்பட்ட தாமதம், தரமில்லாத பாவு நூல் கொள்முதல் போன்ற காரணங்களால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணிகளை முடிக்க முடியாமல் போனது’’ என்றார் வருத்தத்துடன்.

பெயர் கூற விரும்பாத அதிகாரி ஒருவர் இந்த விவகாரத்தின் பின்னணி குறித்து நம்மிடம் பேசியபோது, ‘‘இந்த ஆட்சியில் கைத்தறி, துணிநூல் என தனித்தனியே இரண்டு துறைகளாக பிரித்து இரண்டு ஆணையாளர்களை நியமித்ததால், நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டு உற்பத்திப் பணியில் தாமதம் ஏற்பட்டுவிட்டது. அதோடு, வழக்கமான டிசைன்களுக்கு பதிலாக 15 வித வண்ணங்களில் சேலைகளை உற்பத்தி செய்ய முடிவு செய்ததோடு, அந்த டிசைன்களை இறுதி செய்வதிலும் தாமதம் ஏற்பட்டுவிட்டது. எனவே, அதிகபட்சமாக ஜனவரி இறுதிக்குள் வேட்டி உற்பத்தியும், பிப்ரவரி 10-ம் தேதிக்குள் சேலைகளின் உற்பத்தியும் 100% பூர்த்தியடைந்துவிடும்’’ என்றார்.

காந்தி, கந்தவேல், வி.கே.மோகனசுந்தரம்
காந்தி, கந்தவேல், வி.கே.மோகனசுந்தரம்

இதையடுத்து, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தியிடம் விளக்கம் கேட்டோம். ‘‘கடந்த 1-1-2023 வரையிலும் 63.54% சேலைகளும், 51.81% வேட்டிகளும் உற்பத்தியாகியுள்ளன. வரும் 10-ம் தேதிக்குள் 80% வேட்டி, சேலைகளை உற்பத்திசெய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பி விடுவோம். மீதமுள்ளவற்றை பொங்கல் பண்டிகைக்குள் உற்பத்தி செய்துவிட முடியும் என்று நம்புகிறோம். மற்றபடி பாவு நூலில் தரமில்லை என்பதெல்லாம் எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரசாரம்’’ என்றார்.

ஏழை மக்களின் தேவை மட்டுமல்ல... நெசவாளர்களின் வாழ்வாதாரமும் நம் கையில் என்ற பொறுப்போடு அரசு செயல்பட வேண்டும்!