சினிமா
பேட்டிகள்
கட்டுரைகள்
Published:Updated:

வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட சுதந்திர வீரன்! - வாண்டாயத்தேவன்

வாண்டாயத்தேவன்
பிரீமியம் ஸ்டோரி
News
வாண்டாயத்தேவன்

ஓவியம்: ஜீவா

விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!

வெள்ளையர்களோடு வீரத்துடனும் தீரத்துடனும் போரிட்டு உயிர்துறந்த தமிழக பாளையக்காரர் பெயர் கேட்டால் எல்லோரும் உச்சரிக்கும் பெயர், வீரபாண்டிய கட்டபொம்மன். அவர் ஆட்சியில் அமர்வதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பே, வெள்ளைக்காரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மாவீரன், வாண்டாயத்தேவன்.

மிகச்சிறிய ஒரு களிமண் கோட்டைக்குள் இருந்துகொண்டு, துப்பாக்கிகளும் பீரங்கிகளும் தரித்த ஆங்கிலேயர் படையை புறமுதுகிட்டு ஓடச் செய்த வாண்டாயத்தேவன் பற்றிய சிலிர்ப்பூட்டும் வரலாறு எங்கும் பதிவாகவேயில்லை. வாண்டாயத்தேவனின் வாரிசுகள், சிதிலமடைந்த ஓர் அரண்மனையில் இன்று சத்தமில்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

1857-ம் ஆண்டு மீரட் நகரில் இந்திய சிப்பாய்கள் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக நடத்திய போராட்டத்தையே, `இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம்’ என்று வரலாறு கூவிக்கொண்டிருக்கிறது. அதற்கு நூறாண்டுகளுக்கு முன்பே வெள்ளையர்களை ஓட ஓட விரட்டினார்கள் தமிழகத்தை ஆண்ட மன்னர்கள்.

கணேச.பாலமுருகன்
கணேச.பாலமுருகன்

தம் தேசத்தை எளிதாக நிர்வகிக்கவும், எல்லைகளைக் கண்காணிக்கவும் யுத்தங்களில் முன்களத்தில் நின்று சண்டையிடவும் குறுநில மன்னர்களை நியமித்தார்கள் அரசர்கள். அப்படி பாண்டிய மன்னன் உருவாக்கிய சிற்றரசு ஒன்றை ஆட்சி செய்தவர்தான் வாண்டாயத்தேவன்.

வாண்டாயத்தேவன் வீரத்துக்குப் பேர் போனவர். மேற்குத் தொடர்ச்சி மலையின் இந்தப்புறம் பாண்டியர்களுக்கு சொந்தமானதாகவும், அந்தப்புறம் சேரர்களுக்குச் சொந்தமானதாகவும் இருந்தது. மலை தாண்டி அவ்வப்போது உள்நுழைந்து சேர மன்னர்கள் பாண்டியர்களை அச்சுறுத்திவந்தார்கள்.

எல்லையில் இருந்த வாண்டாயத்தேவன், பெரும்படையோடு மேற்குத் தொடர்ச்சி மலையைக் கடந்து சென்று கொல்லத்தை தலைநகராகக்கொண்டு ஆட்சிசெய்த சேர மன்னனை வென்று அச்சுறுத்தலைக் களைந்தார். அதனால் மகிழ்ந்த பாண்டியன், வாண்டாயத்தேவனுக்கு `கொல்லங்கொண்டான்' என்ற பட்டத்தைச் சூட்டி மகிழ்ந்திருக்கிறான். பிற்காலத்தில், நாயக்க மன்னர்களின் நிர்வாகத்தின்கீழ் 72 பாளையங்களில் ஒன்றாக இருந்தது கொல்லம்கொண்டான்.

1750-ல் ராபர்ட் கிளைவ், `தென்பகுதியை நிர்வகிக்கும் பாளையக்காரர்கள் அனைவரும் பிரிட்டிஷ் நிர்வாகத்துக்கு கப்பம் கட்ட வேண்டும்’ என்று அறிவித்தார். இதை பூலித்தேவர் உறுதியாக மறுத்தார். பாளையக்காரர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, 'வெள்ளையனுக்கு வரி கொடுக்க மாட்டோம்' என்று அறிவித்தார். படைகொண்டு தாக்கி இவர்களை ஒடுக்க முடியாது என்று உணர்ந்த பிரிட்டிஷ் நிர்வாகம், யூசுப்கான் தலைமையில் படையை உருவாக்கி அதன் மூலம் பாளையக்காரர்களை அச்சுறுத்தியும், ஆசைகாட்டியும் தங்கள் பக்கம் இழுத்தது. பல பாளையக்காரர்கள் ஆட்சி மிஞ்சினால் போதும் என்று அடிபணிந்தார்கள்.

கொல்லங்கொண்டான் அரண்மனை
கொல்லங்கொண்டான் அரண்மனை

பூலித்தேவரின் தலைநகரிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் கொல்லங்கொண்டான் பாளையம் இருந்தது. இதை அந்தக் காலகட்டத்தில் ஆட்சிசெய்தவர் பெரியசாமி வாண்டாயத்தேவன். இவரும் பூலித்தேவரும் நெருங்கிய நண்பர்கள். வெள்ளையர்களின் அழுத்தத்துக்கு அஞ்சி பிற பாளையக்காரர்கள் அடிபணிந்துவிட்ட சூழலில், பூலித்தேவருக்கு தோளுக்கு தோள் நின்றார் வாண்டாயத்தேவன்.

``யூசுப்கான் பூலித்தேவரை அடிபணிய வைக்க நிறைய முயற்சி செய்தான். ஆனால், அவரை நெருங்கவிடாமல் வாண்டாயத்தேவன் அரணாக நின்றார். அதனால், யூசுப்கானின் கோபம் வாண்டாயத்தேவன் பக்கம் திரும்பியது. வாண்டாயத்தேவன் குறித்து யூசுப்கான் எழுதிய குறிப்புகள் பிரிட்டிஷ் ஆவணக் காப்பகங்களில் இப்போதும் இருக்கின்றன. ஆனால், வரலாறு எழுதியவர்களின் பார்வையில் அதெல்லாம் படவேயில்லை'' என்கிறார் வரலாற்றாய்வாளரும், ஓய்வு பெற்ற வட்டாட்சியருமான கணேச.பாலமுருகன்.

தற்போது கொல்லங்கொண்டான் இரண்டாக இருக்கிறது. அயன் கொல்லங்கொண்டான்; ஜமீன் கொல்லங்கொண்டான். அந்தக் காலத்தில் அயன் கொல்லங்கொண்டானில்தான் வாண்டாயத்தேவனின் அரண்மனை இருந்திருக்கிறது. ஒரு பெரிய பெருமாள் கோயில், அதையொட்டி பரந்து விரிந்த திடல் உள்ளது. அதற்கு மேலே ஒரு அழகிய மண்டபம் இருக்கிறது. அந்த மண்டபத்துக்கு முன்னால்தான் கோட்டைச்சுவர் தொடங்குகிறது. கோட்டை இருந்ததற்கான தடம் இருக்கிறது; கோட்டை இல்லை. மண்டபம் சிதைவுற்று இருக்கிறது.

``வாண்டாயத்தேவன் கோட்டை களிமண்ணால் கட்டப்பட்டது. கொல்லங்கொண்டான் படைக்குத் தளபதியா இருந்தவர் பேரு வந்தியத்தேவன். பூலித்தேவர் அடங்காம இருக்க வாண்டாயத்தேவன் உடனிருக்கிறதுதான் காரணம்னு யூசுப்கான் வெள்ளைக்காரங்களுக்குச் சொல்ல, `முதல்ல வாண்டாயத்தேவனுக்கு முடிவு கட்டுங்க'ன்னு தகவல் வந்திருக்கு. யூசுப்கான் `என்னோட படைக்கு உன்னை தலைவனாக்குறேன்... பிரிட்டிஷ் அதிகாரிகளை அனுசரிச்சுப் போனா நிறைய பலனுண்டு'ன்னு சொல்லி தூதரை அனுப்ப, `தூதனா வந்ததால மன்னிச்சு அனுப்புறேன்... ஓடிப்போயிரு'ன்னு தூதனை விரட்டி அடிச்சுட்டார் வாண்டாயத்தேவன். இதனால யூசுப்கானுக்கு கடுமையான கோபம்... பெரும்படையோட கொல்லங்கொண்டானுக்கு வந்துட்டான்'' என்று வரலாற்றை உயிர்ப்பிக்கிறார் வாண்டாயத்தேவன் வழிவந்த தற்போதைய கொல்லங்கொண்டான் ஜமீன் லிங்க சுந்தரராஜா.

பாளையக்காரர்களை இலக்குவைத்து கர்நாடக நவாப்பின் 2,000 சிப்பாய்கள், 500 ஐரோப்பிய சிப்பாய்கள் இணைந்த கூட்டுப்படையை நவீன ஆயுதங்களுடன் வழிநடத்தினான் யூசுப்கான். யூசுப்கான் படை வரும் தகவல் பாளையக்காரர்களுக்குப் பரவியது. யூசுப்கானை எதிர்த்து விரட்ட பாளையக்காரர்கள் கூட்டுப்படை ஒன்று உருவாக்கப்பட்டது. ஸ்ரீவில்லிப்புத்தூர் கோட்டையின் பொறுப்பை வாண்டாயத்தேவன் ஏற்றார். 1756, மே 6-ம் தேதி யூசுப்கானை ஸ்ரீவில்லிபுத்தூரில் வாண்டாயத்தேவன் நேருக்கு நேராக எதிர்த்து சண்டையிட்டார். மூன்று மாதங்கள் தொடர்ந்த போரில் யூசுப்கான் ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டையைக் கைப்பற்றினான்.

ஆனால், வாண்டாயத்தேவனின் தாக்குதலில் பிரிட்டிஷ் மற்றும் நவாபின் பெரும்பாலான வீரர்கள் படுகாயம் அடைந்தார்கள். ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டையைக் கைப்பற்றியதோடு பின்வாங்கியது யூசுப்கான் படை. ஆனாலும் வாண்டாயத்தேவன் மீது யூசுப்கானுக்கு தனிப்பட்ட வன்மம் ஏற்பட்டது. மூன்றே மாதங்களில் 1756, ஆகஸ்ட் 10-ம் தேதியன்று மேலும் படைகளை சேர்த்துக்கொண்டு கொல்லங்கொண்டானை முற்றுகையிட்டான். கொல்லங்கொண்டான் கோட்டைக்கு மேற்கே இரண்டு மலைகள் உண்டு. அந்த மலைகளுக்கு நடுவில் பெரிய பீரங்கிகள் நிறுவப்பட்டன.

``வாண்டாயத்தேவனும், தளபதி வந்தியத்தேவரும் தீரமுடன் யூசுப்கானை எதிர்கொண்டார்கள். களிமண்ணால் கட்டப்பட்டிருந்த கோட்டை பீரங்கிகளின் முன்னால் நொறுங்கிக்கொட்டியது. இரு தரப்பிலும் ஏராளமானோர் இறந்தார்கள். ஆனாலும் வாண்டாயத்தேவனும் வந்தியத்தேவனும் யூசுப்கானைக் குறிவைத்து முன்னேறினார்கள். யூசுப்கானுக்கு வைத்த குறியில் யூசுப்கானின் குதிரை இறந்துவிட்டது. இதனால் கடும்கோபம் கொண்ட யூசுப்கான் மேலும் படைகளைத் தருவித்துத் தாக்கினார். இறுதியில் வாண்டாயத்தேவனும் வந்தியத்தேவரும் கொல்லங்கொண்டானில் இருந்து தப்பி பூலித்தேவரின் நெற்கட்டும் செவல் கோட்டையில் தஞ்சமடைந்தார்கள். வாண்டாயத்தேவனைப் பிடிக்கும் யூசுப்கானின் முயற்சி தோற்றது.

இந்தப் போர் பற்றி தன் மேலிடத்துக்குக் கடிதம் எழுதிய யூசுப்கான், `கொல்லங்கொண்டான் போரில், என் உயிருக்குயிரான குதிரையை வெட்டிக் கொன்றுவிட்டார்கள் வாண்டாயத்தேவரின் வீரர்கள்' என்று குறிப்பிட்டுள்ளார். (Country Correspondence 1756, Letter No; 113, Page-1113) கால்டுவெல்லும்கூட `History of Tinnevelly' நூலில் இதுபற்றிக் குறிப்பிட்டுள்ளார்'' என்கிறார் கணேச.பாலமுருகன்.

பல யுத்தங்களுக்குத் தலைமையேற்றுச் சென்று வெற்றிவாகை சூடியிருந்தாலும் வாண்டாயத்தேவனைப் பிடிக்க முடியாதது யூசுப்கானுக்கு அவமானமாக இருந்தது. வாண்டாயத்தேவனை ஒழிக்க நாள் பார்த்துக்கொண்டிருந்தான். வாண்டாயத்தேவனும் வெள்ளையர்களுக்கு எதிராக தீவிரமாகப் படைதிரட்டத் தொடங்கினார். முற்றிலும் அழிந்துபோன தன் கோட்டையை வெள்ளையர்களின் பீரங்கிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில், களிமண், தேங்காய் நார், கருப்பட்டி, சுண்ணாம்பு ஆகியவற்றைக் கலந்து மீட்டுருவாக்கம் செய்தார்.

ஜமீன் கோயில் - லிங்க சுந்தரராஜா
ஜமீன் கோயில் - லிங்க சுந்தரராஜா

மூன்றாண்டுகள் கழித்து 1759, ஜூலை 2-ம் தேதி 6,400 சிப்பாய்கள், 600 குதிரை வீரர்கள் அடங்கிய பெரும் படையுடன் கொல்லங்கொண்டானைச் சூழ்ந்தான் யூசுப்கான். தீரத்தோடு எதிர்கொண்டார் வாண்டாயத்தேவன். யுத்தம் தொடங்குவதற்கு முன்பாக கோட்டைச் சுவர் முழுவதும் தண்ணீர் தெளித்து ஊறவைத்தார்கள் வாண்டயத்தேவனின் வீரர்கள். தென்புற மலையிடுக்கிலிருந்து பீரங்கிகள் தெறித்தன. ஆனால் களிமண், தேங்காய் நார் கோட்டையை ஊடுருவ முடியாமல் சுவர்களிலேயே தேங்கின குண்டுகள். கடும் தாக்குதலுக்குப் பிறகு கான்சாகிப் கொல்லங்கொண்டான் கோட்டைக்குள் நுழைந்தான். வீரர்கள் வாண்டாயத்தேவனை பாதுகாத்து நெற்கட்டும் செவலுக்கு அனுப்பி வைத்தார்கள். இந்த முறையும் வாண்டயத்தேவனைப் பிடிக்க முடியாமல் வெறுங்கையோடு திரும்பினான் யூசுப்கான்.

இனி யுத்தத்தால் வாண்டாயத்தேவனைப் பணியவைக்க முடியாது என்பதை உணர்ந்த பிரிட்டிஷ் நிர்வாகம், தங்களுக்கு இணக்கமான பாளையக்காரர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தியது. அனைவரையும் அன்போடு உபசரித்து, ``எங்கிருந்தோ வந்த வெள்ளையர்களுக்கு அடிபணிந்து வரி செலுத்த முடியாது. அவர்களை இங்கிருந்து வெளியேறச் சொல்லுங்கள்'' என்று பதில் கூறி அனுப்பினார் வாண்டாயத்தேவன்.

``வாண்டாயத்தேவனுடனான போரில் மிகப்பெரும் சேதத்தைச் சந்தித்ததால், பிரிட்டிஷ் நிர்வாகம் மீண்டும் போர் செய்ய விரும்பவில்லை. தூதுவர்களை அனுப்புவதும், பேச்சுவார்த்தை நடத்துவதுமாக இருந்தது. வெள்ளையர்களின் அமைதியும் சமாதானமும் ஆபத்தானவை என்பதை வாண்டாயத்தேவன் உணர்ந்தேயிருந்தார். வெள்ளையர் கொட்டடிக்குள் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள விரும்பினார். கொல்லங்கொண்டானில் இருக்கும் இடர்தீர்த்த பெருமாள் கோயிலில் சதிராடும் கலைஞர்களாக இருந்த மயிலாள், குயிலாள் எனப்படும் இரண்டு பெண்களை உளவு பார்க்க அனுப்பினார். அந்தப் பெண்கள், ஆங்கிலேயர்களோடு உறவோடு இருக்கும் பாளையக்காரர்களின் அரண்மனைகள்,ஆங்கிலேய கொட்டடிகளுக்குள் சென்று உளவு பார்த்தார்கள். கொல்லங்கொண்டான் பாளையத்தை அழிக்க வெள்ளைக்கார அதிகாரிகள் தலைமையில் மிகப்பெரும் படை தயாராகிவருவதை அறிந்து வாண்டாயத்தேவனுக்கு தகவல் தந்தார்கள். உடனடியாக பூலித்தேவர் மற்றும் இணக்கமான பாளையக்காரர்களுடன் ஆலோசனை நடத்திய வாண்டாயத்தேவர், ஒரு கூட்டுப்படையை உருவாக்கினார். தகுந்த நேரத்தில் தகவல் கொடுத்து முன்னெச்சரிக்கை செய்த மயிலாள், குயிலாள் இருவரையும் காலம் முழுவதும் நினைவுகூரும் வகையில் இரண்டு பெரும் குளத்துப்பரவுகளுக்கு (வாய்க்கால்களுக்கு) அவர்களின் பெயர்களைச் சூட்டினார்'' என்கிறார் கணேச.பாலமுருகன்.

பிரிட்டிஷ் நிர்வாகம் கொல்லங்கொண்டானைத் தாக்க நாள் குறித்தது. மேஜர் பிளின்ட், கேப்டன் பெயிண்டர் இருவரும் படைக்குத் தலைமை தாங்கினார்கள். 1766, டிசம்பர் 26-ம் தேதி பிரிட்டிஷ் படையை கோட்டைக்கு வெளியே எதிர்கொண்டார் வாண்டாயத்தேவன். மிகக்கடுமையான யுத்த நுட்பங்களைக் கையாண்டது வாண்டாயத்தேவன் படை. அந்தத் தாக்குதலுக்கு முன்பு பிரிட்டிஷ் ஆயுதங்கள் நிலைகுலைந்தன. கேப்டன் பெயிண்டர் உட்பட முன்களத்தில் நின்ற ஐந்து தளபதிகள் கொல்லப்பட்டார்கள். பிரிட்டிஷ் படை திருநெல்வேலி பாசறைக்குப் பின்வாங்கியது.

வெள்ளைக்காரர்களுக்கு இது கௌரவப் பிரச்னையானது. கர்னல் டொனால்டு கேம்பல் என்ற தளபதிக்கு வாண்டாயத்தேவனை அழிக்கும் பணி தரப்பட்டது. வாண்டாயத்தேவனின் பலம், பலவீனங்கள் குறித்து தீவிரமாக ஆராய்ந்தான் கேம்பல். மெட்ராஸிலிருந்து கெரில்லா யுத்தங்கள் பழகிய ஒரு படைப்பிரிவை வரவழைத்தான். 1767, ஏப்ரல் 29-ம் தேதி கொல்லங்கொண்டானை நெருங்கியது பிரிட்டிஷ் படை. அந்நேரத்தில் வாண்டாயத்தேவனின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

போர் கடுமையாக இருந்தது. பிரிட்டிஷ் படை எல்லா யுக்திகளையும் பயன்படுத்தி கோட்டையைத் தகர்த்து உள்ளே நுழைந்தது. நிலைமை கைமீறிப்போவதை உணர்ந்த வாண்டாயத்தேவன், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தன் மனைவியை பட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த மக்களிடம் ஒப்படைத்தார். அந்த மக்கள் சுரங்கப்பாதை வழியாக ராணியைக் காப்பாற்றி வெளியில் அழைத்துச் சென்று பாதுகாத்தார்கள். கடுமையான அந்த யுத்தத்தில் பெரியசாமி வாண்டாயத்தேவன் வீரமரணமடைந்தார். இந்த யுத்தம் குறித்து தன் நிர்வாகத்துக்கு எழுதியனுப்பிய ஆவணத்தில் `Heavy Rude War' என்று குறிப்பிடுகிறான் கேம்பல்.

ராஜபாளையம் நீர்காத்த அய்யனார் கோயிலில் உள்ள வாண்டாயத்தேவன் சிலைகள்
ராஜபாளையம் நீர்காத்த அய்யனார் கோயிலில் உள்ள வாண்டாயத்தேவன் சிலைகள்

``வாண்டாயத்தேவன் பற்றிய எல்லாச் செய்திகளுக்கும் பிரிட்டிஷ் அதிகாரிகள் பதிவுசெய்து வைத்திருக்கும் ஆவணங்கள் சான்றாக உள்ளன. கோட்டை, பிடிக்குள் வந்ததும் தப்பித்த ராணியை கேம்பல் படை தேடியது. ஆனாலும் மக்கள் அவரை மேற்குத் தொடர்ச்சி மலை வனத்துக்குள் வைத்துப் பாதுகாத்தார்கள். அவருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு `திருமலை வாண்டாயத்தேவன்’ என்று பெயரிட்டார்கள். வனத்துக்குள்ளேயே அவன் வளர்ந்தான். ராணி, பொலிவிழந்து சாதாரண மக்களில் ஒருவராக மாறிப்போனார். அக்காலகட்டத்தில் பெரும் பஞ்சம் வேறு வந்தது. அவர் குறித்து நிறைய கதைகள் அந்தப் பகுதியில் பேசப்படுகின்றன. அவர் வாழ்ந்த ஊர் `பஞ்சப்பட்டி’ என்று இப்போது அழைக்கப்படுகிறது'' என்கிறார் கணேச.பாலமுருகன்.

வனத்துக்குள் வளர்ந்த திருமலை வாண்டாயத்தேவன், போர்ப்பயிற்சி, கெரில்லா யுத்தப் பயிற்சிகளை வனத்துக்குள்ளேயே பெற்றான். சிவகிரி பாளையக்காரரின் மகளை சிறையெடுத்துச் சென்று பூலித்தேவர் முன்பு திருமணம் செய்துகொண்டான்.

``பூலித்தேவர் மறைந்த பிறகு பாளையக்காரர்கள் வலுவிழந்தார்கள். ஆங்கிலேயர்கள், பாளையக்காரர்களை தங்கள் ஆதிக்கத்துக்குக் கீழே கொண்டுவந்தார்கள். காட்டுக்குள் இருந்த திருமலை வாண்டாயத்தேவனை அழைத்துவந்து கொல்லங்கொண்டான் ஜமீனாக முடிசூட்டினார்கள். அவர், தன் தந்தை வாழ்ந்த கிராமத்தைவிட்டு வெளியே தனக்கு அரண்மனை கட்டிக்கொண்டார். பெரியசாமி வாண்டாயத்தேவன் அரண்மனை இருந்தது அயன் கொல்லங்கொண்டான் என்றும், திருமலை வாண்டாயத்தேவன் வாழ்ந்த ஊர் ஜமீன் கொல்லங்கொண்டான் என்றும் அழைக்கப்படுகிறது'' என்கிறார் கணேச.பாலமுருகன்.

ராஜபாளையத்திலிருந்து குற்றாலம் செல்லும் சாலையில் தளவாய்புரம் அருகே இடதுபுறம் பிரியும் சாலையில் திரும்பினால் 3-வது கிலோமீட்டரில் இருக்கிறது அயன் கொல்லங்கொண்டான். பிரதான சாலையிலிருந்து விலகி பள்ளிக்கூடச் சாலையில் பயணித்தால் வாண்டாயத்தேவன் கட்டிய பிரமாண்டமான பெருமாள் கோயில் வருகிறது. இங்கிருந்த சுரங்கப்பாதை இப்போது அடைக்கப்பட்டு பயனற்றுக் கிடக்கிறது என்கிறார்கள் அருகில் வசிப்போர். கோயிலை ஒட்டி முன்மண்டபம் சிதைவுகளற்று அப்படியே இருக்கிறது. அதற்கு எதிரில் பிரமாண்ட திடல். அதுதான் வாண்டாயத்தேவனின் கோட்டையிருந்த இடம். அகழி மற்றும் கோட்டைச்சுவரின் சுவடுகள் தெரிகின்றன. மற்றபடி எந்த அடையாளமும் இல்லை. அயன் கொல்லங் கொண்டானிலிருந்து இரண்டாவது கிலோமீட்டரில் இருக்கிறது ஜமீன் கொல்லங்கொண்டான். ஊருக்கு மத்தியில் பிரமாண்டமாக விரிந்துகிடக்கிறது அரண்மனை. சுற்றிலும் வலுவான கோட்டையும் இருக்கிறது.

செவ்வக வடிவிலான பெரிய பெரிய செங்கற்களை அடுக்கி சுண்ணாம்பு தோய்த்து கட்டப்பட்ட இந்த அரண்மனையின் முகப்புத் திண்ணையில் அமர்ந்திருக்கிறார் லிங்க சுந்தரராஜா. இவர்தான் இப்போதைய ஜமீன். இவரும், இவர் சகோதரரும் மட்டுமே இந்த அரண்மனையில் வசிக்கிறார்கள்.

முகப்பில் பழங்காலக் கட்டட அமைப்புடன் அரண்மனைக்குச் சொந்தமான பிள்ளையார் கோயில் இருக்கிறது. திண்ணையைக் கடந்து உள்ளே சென்றால், பரந்து விரிந்த நந்தவனம். அதைச் சுற்றிலும் பெரிய திண்ணைகள். பெரிய சிமென்ட் தொட்டியும் அந்த வளாகத்தில் இருக்கிறது.

``சினிமா டைரக்டர் முத்தையா நமக்கு குடும்ப நண்பர். அவர் எடுக்கிற படத்துல ரெண்டு சீன்லயாவது இந்த அரண்மனை வந்துடும். `மருது’ படத்துல கெழவியை ஐஸ்கட்டி தண்ணிக்குள்ள முக்குவாங்கல்ல... அதுக்காக கட்டின தண்ணித்தொட்டி இது. ஒரே நாள்ல கட்டி நாலஞ்சு காத்தாடிகளைவெச்சு காயவெச்சு மறு நாளே ஷூட்டிங் எடுத்தாங்க. இங்கே நிறைய படங்கள் எடுத்திருக்காங்க'' என்கிறார் லிங்க சுந்தரரஜா.

அந்த அறையில் இருக்கிற பெரிய திண்ணைகளில் கணக்கர்கள் அமர்ந்து வரி பரிபாலனம் செய்வார்களாம். திண்ணைகள் எல்லாம் பெயர்ந்துவிட்டன. செங்கற்கள் சிதறிக்கிடக்கின்றன. அதைக் கடந்து நுழைந்தால் நடுவில் பெரிய சிமென்ட் திட்டு இருக்கிறது. ஜமீன் பெண்கள் அதில் அமர்ந்து நிலாச்சோறு சாப்பிடுவார்களாம்.

வலதுபுறம் பிரமாண்டமான தூண்களோடு தர்பார் ஹால் கம்பீரமாக இருக்கிறது. மேலே கட்டுகள் குலைந்திருக்கின்றன. தூண்கள் கரையான் அரித்து, சிதைந்திருக்கின்றன. ஜமீன்தாரி முறை நீக்கப்படுவதற்கு முன்பு இங்கு அமர்ந்துதான் ஜமீன்கள் தர்பார் நடத்தியிருக்கிறார்கள்.

தர்பார் ஹாலுக்கு வெளியே மிகப்பெரிய வெளி. அதற்குள்தான் போர்ப் பயிற்சிகள் நடக்குமாம். அதையொட்டி மிகப்பெரிய சமையலறை. தினமும் பல நூறு பேருக்குச் சமையல் நடந்த இடம். தரை பெயர்ந்து அடையாளம் இழந்து கிடக்கிறது. பெண்கள் நிலாச்சோறு சாப்பிடும் இடத்துக்கு முன்பு நீளமான வீடு.

குளுகுளுவென்றிருக்கிறது கட்டுமானம். குனிந்து நுழையும் வகையில் வீட்டுக்குள் இரண்டு பொக்கிஷ அறைகள். ஹால், பின்னறையைக் கடந்து உள்ளே சென்றால் அந்தப்புரம். அந்தப்புரத்தையொட்டி குளியல் அறை. உடை மாற்றும் அறை என விசாலமாக இருக்கிறது. எல்லாம் புதர்மண்டிக் கிடக்கின்றன.

ஜமீன் கொல்லங்கொண்டான் கிராமத்தின் எல்லையில் வடிவம் மாறிக்கிடக்கிறன, மயிலாள், குயிலாள் நினைவாக பெயர்சூட்டப்பட்ட குளத்துப்பரவுகள். இவற்றைத் தவிர ஒப்பற்ற ஒரு சுதந்திரப்போராட்ட வீரனை ஈன்றெடுத்த எந்தப் பெருமித அடையாளமும் இந்த கிராமத்தில் இல்லை.

``ராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்துல இருக்குற நீர்காத்த அய்யனார் கோயில்ல வெள்ளைக்காரர்களை எதிர்த்து வீரமரணம் அடைந்த வாண்டாயத்தேவனுக்கு சிலை இருக்கு. அதைத் தவிர அவரோட நினைவைப் போற்றும் அடையாளங்கள் ஏதுமில்லை. அவரைப் பற்றி ஒரு புத்தகமோ, குறிப்புகளோகூட இல்லை. அரசு வாண்டாயத்தேவனின் வரலாற்றை ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கைகூப்புகிறார் கணேச.பாலமுருகன்.