இரானிய பெண்கள் மீதான அடக்குமுறைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது பலரையும் கவலையடையச் செய்துள்ளது. தெஹ்ரானில் உள்ள நினைவுச் சின்னமான ஆசாதி கோபுரத்தின் முன்பு நடனமாடிய இளம் ஜோடிக்கு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
அஸ்தியாஜ் ஹகிகி என்பவரும், அவர் விரைவில் கரம் பிடிக்கவுள்ள அமீர் முஹமத் அஹ்மதியும், இரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள நினைவுச் சின்னமான ஆசாதி கோபுரம் முன்பு ரொமான்டிக்காக நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

காற்றில் ஹகிகியின் தலைமுடி அலைபாய, அழகாக ஆஹ்மதி அவரை தூக்கியுள்ளார். இன்ஸ்டாவில் இவர்கள் பதிவிட்ட வீடியோ, நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் வைரலாக தொடங்கியது.
இரானில், பொது இடங்களில் பெண்கள் நடனமாடத் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், ஓர் ஆணோடு தனியாக நடனமாடி இருக்கிறார். தலையை மறைக்க ஹிஜாப் அணியாமல் இருந்திருக்கிறார். இதனால் அந்த நாட்டு விதிகள் மீறப்பட்டிருக்கின்றன என இவர்கள் மீது கடுமையாக குற்றம் சாட்டப்பட்டது.
அதைத் தொடர்ந்து, தெஹ்ரானில் உள்ள நீதிமன்றம், இவர்கள் ஒவ்வொருவருக்கும் 10 ஆண்டுகள் 6 மாத சிறைத்தண்டனை விதித்தது. சமூக வலைதளத்தைப் பயன்படுத்துவதற்கும், இரானை விட்டு வெளியேறவும் தடை விதித்தது.
பொது இடங்களிலும் ஹோட்டலிலும் ஹிஜாப் அணிய வேண்டும். காரில் அமர்ந்திருக்கும் போது கூட, ஹிஜாப்பை அகற்றக் கூடாது, ஹிஜாப் சட்டத்தை மீறிய பெண்கள் அபராதம் கட்ட வேண்டும், அவர்கள் வேலை செய்வதற்கும் தடை விதிக்கப்படும் என்று இரான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஹிஜாப் விதிகளை மீறியதாகக் கூறி, செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்ட மாஷா அமினியின் மரணம், இரானிய ஆட்சிக்கு எதிரான இயக்கமாக உருவெடுத்தது. பல பெண்கள் தங்கள் கூந்தலை வெட்டி , அடக்குமுறைக்கு எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். ஆண்கள், பெண்கள் என ஒருசேர பலர் தெருக்களில் இறங்கிப் போராடத் துவங்கினர்.
அப்படிப் போராடிய முக்கிய பிரபலங்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், பொது மக்கள் எனக் குறைந்தது 14,000 நபர்களை இரானிய அரசு கைது செய்தது.

அதன் பின் எழுந்த அனைத்து வகையான கருத்து வேறுபாடுகளையும் கடுமையாகக் கட்டுப்படுத்தி நசுக்கியது இரான் அரசு. இதன் தொடர்ச்சியாகத் தான் ஹிஜாப் அணியாமல் நடமாடும் இந்த இளம் ஜோடிகளின் வீடியோ, அரசியல் ரீதியாகப் பார்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ, ஹிஜாப் மீதான எதிர்ப்பைக் கோரும் சுதந்திரத்தின் அடையாளமாகப் பாராட்டப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரானிய பெண்கள் மீது தொடர்ந்து அரங்கேறும் அடக்குமுறைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இரானிய பெண்களுக்கு இல்லையா விடுதலை என்ற குரல்கள் வலுவாக ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.