Election bannerElection banner
Published:Updated:

கனிமொழி முதல் மஹுவா வரை: நாடாளுமன்றத்தில் விதைக்கப்பட்ட நம்பிக்கை!

கனிமொழி
கனிமொழி

அமெரிக்காவில் ஹோலோகாஸ்ட் நினைவு அருங்காட்சியகத்தில் பாசிசத்தின் குறியீடுகள் குறித்த போஸ்டர் உள்ளது. அதில் சொல்லப்பட்ட அனைத்து அறிகுறிகளும் இப்போது இந்தியாவில் காணப்படுகிறது" என்று கன்னிப்பேச்சிலேயே மஹுவா மொய்த்ரா பட்டாசாக வெடித்தார்.

மோடி 2.0 அரசில், 78 பெண்கள் எம்.பி-க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். தேர்தலுக்குப் பிறகான முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பெண் எம்.பி-க்களின் பேச்சு நாடு முழுவதும் கவனம் ஈர்த்திருக்கிறது. தமிழக பெண் எம்.பி-க்கள் மக்களவையில் இடம்பிடித்தது மட்டுமல்ல... தங்கள் செயல்பாடுகள் மூலம் மக்கள் மனத்திலும் இடம்பிடித்து நாடாளுமன்ற வரலாற்றில் புது ரத்தம் பாய்ச்சிக் கொண்டிருக்கிறார்கள்.

"மகளிர் பாதுகாப்புக்காகவே முத்தலாக் தடைச் சட்டம் என்றுகூறும் மத்திய அரசு, 33 சதவிகித மகளிர் இட ஒதுக்கீடுச் சட்டத்தை ஏன் நிறைவேற்றவில்லை?" என்று மக்களவையில் முத்தலாக் தொடர்பான விவாதத்தில் கேள்வி எழுப்பினார் தி.மு.க எம்.பி கனிமொழி.

"பெண்களுக்கான சட்டங்களை அவர்கள் அனுமதி இல்லாமல் - அதாவது அவைக்குள் பெண் பிரதிநிதிகள் இல்லாமல் எப்படி நிறைவேற்றுவீர்கள்? முதலில் இந்த அவைக்குள் பெண்களை கொண்டுவாருங்கள். பிறகு, அவர்களே அவர்களுக்குத் தேவையான சட்டத்தை இயற்றுவார்கள்" என்ற கனிமொழியின் பேச்சு மிகவும் கவனிக்கப்பட்டது.

கனிமொழி முதல் மஹுவா வரை: நாடாளுமன்றத்தில் விதைக்கப்பட்ட நம்பிக்கை!

தி.மு.க-வின் மற்றொரு எம்.பி தமிழச்சி தங்கப் பாண்டியன், பட்ஜெட் மீதான விவாதத்தில் தன் கன்னிப் பேச்சிலேயே கவனம் ஈர்த்தார். "இது பட்ஜெட் அல்ல... fudget" என்று ஆரம்பித்து, அடுத்தடுத்து நிர்மலா சீதாராமனின் பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்தார்.

தமிழகத்தின் மற்றொரு பெண் எம்.பி-யான காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணி, விமான நிலையத்தில் எம்.பி-க்களுக்கான சிறப்பு வழிகளை உபயோகிக்கவில்லை. நீண்ட வரிசையில் நின்று பரிசோதனைகளுக்கு உட்படுத்திக்கொண்ட இவரின் புகைப்படம் இணையத்தில் பேசுபொருளானது. இதுகுறித்து ட்விட் செய்த ஜோதிமணி, 'அரசியல்வாதிகள் மக்களோடு மக்களாக இருப்பதுதான் இயல்பானது!' என்று குறிப்பிட்டிருந்தார். மாநிலங்களவையில் அ.தி.மு.க பெண் எம்.பி-யான விஜிலா சத்யானந்த் தபால்துறைத் தேர்வு தொடர்பாக தமிழகத்தின் எதிர்ப்பை பதிவுசெய்தது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

தமிழக எம்.பி-க்களை போன்று திரிணாமூல் காங்கிரஸின் புதிய நாடாளுமன்ற உறுப்பினரான மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையினால் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார். ட்விட்டரில் டிரெண்டிங், ஆங்கில ஊடகங்களில் தொடர் பேட்டி என அவரது முதல் கன்னிப் பேச்சு, இந்தியாவில் பரபரப்பை அதிகரிக்கவைத்ததோடு, யாரிந்த மஹுவா மொய்த்ரா என்று கூகுள் செய்து படிக்க வைத்தது. நாடாளுமன்றத்துக்குச் சென்ற முதல்நாளே தமிழ்நாட்டு பெண் எம்.பி-க்கள் கனிமொழி, தமிழச்சி தங்கப்பாண்டியன், ஜோதிமணி... கூடவே தேசியவாத காங்கிரஸ் எம்.பி சுப்ரியா சூலே அனைவருடனும் இணைந்து மஹுவா எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

"அமெரிக்காவில் ஹோலோகாஸ்ட் நினைவு அருங்காட்சியகத்தில் பாசிசத்தின் குறியீடுகள் குறித்த போஸ்டர் உள்ளது. அதில் சொல்லப்பட்ட அனைத்து அறிகுறிகளும் இப்போது இந்தியாவில் காணப்படுகிறது" என்று கன்னிப்பேச்சிலேயே மஹுவா மொய்த்ரா பட்டாசாக வெடித்தார். "2014 முதல் 2019 வரை வெறுப்பு அரசியல் கும்பல்கள் நடத்தும் குற்றங்கள் 10 மடங்கு அதிகரித்துள்ளன" என்று சுட்டிக்காட்டிய மஹுவா, நாட்டின் பன்முகத்தன்மை பற்றி மவுலானா ஆசாத்தின் வார்த்தைகளையும் மேற்கோள் காட்டினார்.

கனிமொழி முதல் மஹுவா வரை: நாடாளுமன்றத்தில் விதைக்கப்பட்ட நம்பிக்கை!

இந்த முறை நாடாளுமன்றம் சென்றுள்ள பெண் எம்.பி-க்கள் நிச்சயமாகப் பெண்கள் இடஒதுக்கீடு மசோதவை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பைத் தவறவிட மாட்டார்கள் என்கிற நம்பிக்கையையும் தங்களது கன்னிப்பேச்சிலேயே விதைத்திருக்கிறார்கள். நம்பிக்கையோடு காத்திருப்போம்!

> 'பெண்களே சட்டம் இயற்றுவார்கள்!' எனும் விரிவான அலசல் பார்வையை அவள் விகடன் இதழில் வாசிக்கலாம்.

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு