Published:Updated:

மல்லிப்பூ முதல் வாடகைத்தாய் வரை.. பெண்கள் தொடர்பான பரபர நிகழ்வுகளின் தொகுப்பு! #Rewind2022

2022
News
2022

2022 ம் ஆண்டு முடிவுக்கு வந்துவிட்டோம். இந்த ஆண்டில் பெண்கள் சார்ந்து நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு ஒரு ரீக்கேப்...

Published:Updated:

மல்லிப்பூ முதல் வாடகைத்தாய் வரை.. பெண்கள் தொடர்பான பரபர நிகழ்வுகளின் தொகுப்பு! #Rewind2022

2022 ம் ஆண்டு முடிவுக்கு வந்துவிட்டோம். இந்த ஆண்டில் பெண்கள் சார்ந்து நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு ஒரு ரீக்கேப்...

2022
News
2022

2022 -ம் ஆண்டின் இறுதியில் இருக்கிறோம். இந்த வருடத்தில் நிகழ்ந்த சுவாரஸ்யமான சில சம்பவங்களின் தொகுப்பு இங்கே உங்களுக்காக ....

நோ மேக்கப் லுக் 

திருமணம் என்றாலே ஆடை, அலங்காரத்துக்குதான் முக்கியத்துவம் தரப்படும். அதிலும் நட்சத்திர தம்பதிகள் என்றால் அந்த எதிர்பார்ப்பு எகிறும். பாலிவுட்டில் காதல் ஜோடியாக வலம் வந்த ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்டின் திருமணம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்றது.

நோ மேக்கப் லுக்!
நோ மேக்கப் லுக்!

திருமண அறிவிப்பு வந்ததில் இருந்தே ஆலியாவின் வெடிங் லுக் பற்றிய எதிர்பார்ப்பு கிளம்பியது. ஆனால், பாரம்பர்ய ஆடையில் நோ மேக்கப் லுக்கில் ஆலியா அசத்தினார். அதைத் தொடர்ந்து நோ மேக்கப் லுக், இந்த ஆண்டில் பிரபலமானது. 

உலக கோப்பை

`எங்க ஏரியா உள்ள வராதே' என காலம் காலமாக நாட்டாமை பதவியிலிருந்து, நடுவர் பதவி வரை ஆக்கிரமித்த ஆண்களை ஓரங்கட்டி, பிஃபா கத்தார் உலகக் கோப்பையில் நடுவர்களாக பெண்கள் குழு இடம் பெற்றது.

பெண் நடுவர்கள்!
பெண் நடுவர்கள்!
Twitter

இதில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்டெபானி, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யோஷிமி யமாஷிதா, ருவாண்டாவைச் சேர்ந்த சலிமா முகன்சங்கா ஆகிய மூன்று பெண்கள் இடம் பிடித்தனர். ஆண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் பெண் நடுவர்கள் குழு பங்கேற்று இருப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

விஸ்வரூபம் எடுத்த வாடகைத்தாய் விவகாரம்

நயன்தாரா - விக்னேஷ் சிவன் நட்சத்திர ஜோடி திருமணம் முடிந்த ஐந்தாவது மாதம், தங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்ததாக அறிவித்தனர். இவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றது சர்ச்சையாகி தமிழ்நாடு சுகாதாரத்துறை வரை சென்று, கடைசியில் அவா்கள் குழந்தை பெற்றது சட்டப்படியானது தான் என்று முற்றுப்புள்ளியும் வைக்கப்பட்டது.

நயன்தாரா - விக்னேஷ் சிவன்
நயன்தாரா - விக்னேஷ் சிவன்

இந்த நிகழ்வு மூலம், வாடகைத்தாயாக இருக்கும் பெண்கள் சந்திக்கும் சிக்கல்கள், அதற்கான தீர்வுகள், சட்டரீதியான விஷயங்கள் குறித்து பெரிய அளவில் விவாதம் கிளம்பியது.  மேலும் வாடகைத்தாய் குறித்த தெளிவு பெரும்பாலான மக்களுக்கு ஏற்பட இந்த நிகழ்வு முக்கியக் காரணமாக அமைந்தது. 

குழந்தை இறந்து பிறந்தாலும் மகப்பேறு விடுப்பு

மத்திய அரசு ஊழியர்களாகப் பணிபுரியும் பெண்களுக்கு பிரசவத்தின்போது குழந்தை இறந்தாலோ அல்லது பிறந்த சில நாள்களுக்குப் பிறகு குழந்தை இறந்தாலோ அவர்களுக்கு 60 நாள்கள் வரை சிறப்பு மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என மத்தியப் பணியாளர் நலன் பயிற்சித்துறை அறிவித்தது.

குழந்தை இறந்து பிறந்தாலும் மகப்பேறு விடுப்பு!
குழந்தை இறந்து பிறந்தாலும் மகப்பேறு விடுப்பு!

அதாவது குழந்தை இறந்து பிறந்தாலோ, பிறந்து 28 நாள்களுக்குள் இறந்தாலோ இந்தச் சிறப்பு மகப்பேறு விடுப்பு வழங்கப்படும். 

உணவுகள் தொடர்பான சர்ச்சைகள்

``இந்த பொறப்புதான் நல்லா ருசிச்சு சாப்பிட கிடைச்சது" என்று நம்மில் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த வருடம், ஷவர்மா, தந்தூரி சிக்கன், பிரியாணி போன்ற உணவுகளைச் சாப்பிட்டவர்கள் உயிரிழப்பு என்ற செய்திகளை அடிக்கடி கேள்விப்பட்டோம். 

பிரியாணி!
பிரியாணி!

அப்படியானால், இந்த உணவுகளை அறவே உண்ணக்கூடாதா என்ற கேள்வியும் எழுந்தது. சுத்தமாக தயாரிக்கப்பட்ட, நன்றாக சமைக்கப்பட்ட உணவுகளால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதே மருத்துவர்களின் பதில்.  இது `வைரம் பாய்ஞ்ச உடம்பு' என வடிவேலு வசனம் பேசாமல் ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும் என்பதே நமக்கான மெசேஜ்.

கலெக்டர் - 2K கிட்ஸ் கெமிஸ்ட்ரி

ஸ்கூலுக்கு லீவு விடுவாங்களா மாட்டாங்களானு வானத்தைப் பார்க்குறது, வானிலை அறிக்கையைப் பார்க்குறது எல்லாம் 90'ஸ் கிட்ஸ் ஸ்டைல். ஆனா, 'அதுக்கெல்லாம் யாருக்குப்பா நேரம் இருக்கு' என புதுப்புது பாணியை ஃபாலோ செய்து அலப்பறையைக் கூட்டுவது தான் 2k கிட்ஸ் அலும்பு.

கலெக்டர் மற்றும் 2K கிட்ஸின் கெமிஸ்ட்ரி!
கலெக்டர் மற்றும் 2K கிட்ஸின் கெமிஸ்ட்ரி!

2022-ல் அப்படிச் சில சம்பவங்களைப் பார்த்தோம். சோஷியல் மீடியாவில் நேரடியாக மாவட்ட ஆட்சியாளர்களை டேக் செய்து, லீவு இருக்கிறதா, இல்லையா என கேட்டு மாணவர்கள் அட்ராசிட்டி செய்ததும். `அட, போங்க தம்பி ஸ்கூல் இருக்கு' என்ற ரேஞ்சில் கலெக்டர்கள் பதில் சொன்னதும் வேற லெவல்!  

மல்லிப்பூ, வாத்தி... வைப்ஸ்!

எத்தனை நாளைக்குதான்ப்பா ஹீரோக்களே ஃபீல் பண்ணுவீங்க... ஹீரோயின்ஸும் ஃபீல் பண்ணட்டும் என கிரியேட்டர்ஸ் யோசிக்க, இரண்டு பாடல்கள் நேஷனல் லெவல் டிரெண்ட் ஆயின.

வாடிய மல்லிப்பூ; சொல்லித் தந்த வாத்தி!
வாடிய மல்லிப்பூ; சொல்லித் தந்த வாத்தி!

``மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே", ``காதலிக்க கைடு இல்ல"  என்ற இந்த இரண்டு பாடல்களை முணுமுணுக்காத ஆளே இல்லை என்று சொல்லலாம். 

இந்தியாவின் பணக்கார பெண்மணி

ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவரான ரோஷினி நாடார் மல்ஹோத்ரா ரூ. 84,330 கோடி சொத்துகளுடன் இந்தியாவின் பணக்கார பெண்மணி பட்டியலில் முதலிடம் பிடித்தார்.

இந்தியாவின் பணக்கார பெண்மணி!
இந்தியாவின் பணக்கார பெண்மணி!

2021-ல் கார்ப்பரேட் உலகத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொண்ட பெண்களை மையமாகக் கொண்டு, `கோட்டக் பிரைவேட் பேங்கிங் ஹுருன் (Kotak Private Banking Hurun)', 2021-க்கான இந்தியாவின் டாப் பணக்காரப் பெண்கள் (Richest self -made woman) பட்டியலை வெளியிட்டது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த இடத்தைத் தக்க வைத்துள்ளார் ரோஷினி.

கால்பந்து வீராங்கனை மரணம்

மாவட்ட, மாநில அளவிலான கால்பந்துப் போட்டிகளில் பங்கேற்றவர் சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா. மூட்டுவலி காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியாவுக்கு சிகிச்சைக்குப் பின் காலில் போடப்பட்ட கட்டினால் கூடுதல் பாதிப்பு நிகழ்ந்தது.

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா
கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா

அதனால் அவர் தனது வலது காலை இழந்தார். அதன் பின்பு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். மருத்துவ அலட்சியம் காரணமாக இந்த வருடத்தில் நாம் அடைந்த பேரிழப்பு இது.

`ஹிஜாப் எங்கள் உரிமை!’

ஹிஜாப் அணிய மாட்டோம் என்பதை போராட்டமாகக் கையில் எடுத்தனர் இரான் பெண்கள். அதற்கு நேரெதிராக இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் எங்கள் உரிமை என்று போராட்டம் நடத்தினர் பெண்கள். கர்நாடகாவில் மாணவி ஒருவர் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்தபோது, அதை எதிர்த்து மாணவர்கள் "ஜெய் ஸ்ரீராம்" என்று கூச்சலிட்டார்கள். இதற்கு பதிலடியாக அந்த மாணவி "அல்லாஹு அக்பர்" என கூச்சலிட்ட சம்பவம் வைரல் ஆனது.

ஹிஜாப் எங்கள் உரிமை!
ஹிஜாப் எங்கள் உரிமை!

இரான் நாட்டில் மாஷா ஆமினியின் கொலைக்குப் பிறகு, கட்டாய ஹிஜாப் அணிய வேண்டும் என்ற சட்டத்தை எதிர்த்து பெண்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டத்திற்கு உலகம் முழுவதும் உள்ள பெண்கள் ஆதரவு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ராணி எலிசபெத் மரணம்

தன்னுடைய 27 வயதில் இங்கிலாந்து ராணியாக அரியணை ஏறி 70 ஆண்டுகளுக்கு மேலாக இங்கிலாந்து நாட்டில் முடியாட்சி நடத்தியவர் ராணி எலிசபெத். இங்கிலாந்தின் மிகச்சிறந்த பெண் ஆளுமையாக இருந்தவர். 

ராணி எலிசபெத்
ராணி எலிசபெத்

தனது பதவிக்காலத்தில் 15 பிரதமர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தவர் என்ற பெருமைக்குரியவர். இவர் தன்னுடைய 96 வது வயதில் செப்டம்பர் 8-ம் தேதி காலமானார். உலகத்தையே சோகத்தில் ஆழ்த்திய இவரது இழப்பு, சர்வதேச பங்குச்சந்தையில் கூட தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.