திரைப்படம் என்பது ஒரு கலை என்ற புரிதலுக்கு அப்பால் திரையில் ஒளிர்வதெல்லாம் நிஜம் என்று நம்பிச் செயல்பட்ட இளைஞர்கள் மதுரையில் கணிசமாக இருந்தனர். அறுபதுகளில் தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் எம்.ஜி.ஆர். x சிவாஜி என்ற முரணில் வேறுபட்டனர்; மோதிக்கொண்டனர். மதுரை நகரில் முக்கியமான தெருக்களில் ரசிகர் மன்றங்கள் இருந்தன. மாலைவேளையில் தேநீர்க்கடையின் முன்னர் நின்று அரட்டையடிக்கும் ஒத்த கருத்துடையவர்கள், தங்கள் அபிமான நடிகரின் பெயரால் மன்றம் அமைத்துக் குழுவாகச் செயற்பட்டனர். எம்.ஜி.ஆர், சிவாஜி பெயரில் நிறைய ரசிகர் மன்றங்கள் இருந்தன. ரசிக மன்றத் தலைவர், செயலர், பொருளாளர், உறுப்பினர் போன்ற பதவிகள், வேலைவெட்டி எதுவுமற்ற இளைஞர்களுக்கு கௌரவத்தைத் தந்தன; அடையாளத்தைத் தந்தன.
தங்களுடைய அபிமான நடிகரின் திரைப்படம் வெளியிடப்படும்போது, திரையரங்க வாயிலில் அந்த நடிகரின் வண்ணப்படத்துடன் தங்கள் பெயர்களையும் எழுதி வைக்கும் தட்டிகள் மூலம் உற்சாகமடைந்தனர். திரையரங்க முன் வராண்டாவில் தொங்கவிடப்பட்ட கண்ணாடி பிரேமுக்குள் அபிமான நடிகரின் படமும், கீழே மன்ற நிர்வாகிகளின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. சில போட்டோக்களில் நடிகர் புன்னகைத்துக்கொண்டிருக்க, அருகில் மன்ற நிர்வாகிகள் அடக்க ஒடுக்கத்துடன் நிற்பார்கள். மதுரை மாவட்ட எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம், மாவட்ட தலைமை ரசிகர் மன்றம், எம்.ஜி.ஆர். பாதுகாப்புப்படை ரசிகர் மன்றம், அவன்தான் மனிதன் சிவாஜி ரசிகர் மன்றம்... இவை போன்ற பெயர்களின் மூலம், ஒவ்வொரு ரசிகர் மன்றமும் தனித்தியங்க முயன்றன.

ஆங்கிலத் திரைப்படக் கதாநாயகர்களுக்கும் மதுரையில் ரசிகர் மன்றங்கள் இருந்தன. சீன் கானரி, யூல்பிரினர், கிரிகிரிபெக், மார்லன் பிராண்டோ போன்றவர்கள் நடித்த ஆங்கிலத் திரைப்படங்கள் திரையிடப்படும்போது, திரையரங்குகளில் அந்த நடிகர்களின் நிழற்படங்களுடன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் அடங்கிய போட்டோக்கள் தொங்கவிடப்பட்டன; இந்தி நடிகை மும்தாஜ், ஜீனத் அமன் பெயரிலும் மதுரையில் ரசிகர் மன்றங்கள் இருந்தன. திரைப்படத்தின் இடைவேளையில், ரசிகர் மன்றத்தினரின் போட்டோக்களை மேய்ந்திடும் கூட்டம் எப்பவும் இருக்கும். அழகாகத் தோன்றும் நடிகையின் பக்கத்தில் ஒடுங்கி நிற்கும் ரசிகரைப் பொறாமையுடன் பார்ப்பவர்கள் கூட்டத்தில் இருப்பார்கள். சிலருக்கு அது ஏதோ 'தந்திரவேலை' எனச் சந்தேகம் தோன்றும். அபிநய சரஸ்வதி சரோஜா தேவி, நாட்டியப் பேரொளி பத்மினி போன்ற நட்சத்திரங்களுக்கும் ரசிகர் மன்றங்கள் இருந்தன.
நடிகைகளில் ராதாவிற்கு மதுரை நகரில் மட்டும் ஐம்பதுக்கும் கூடுதலான ரசிகர் மன்றங்கள் இருந்தன. 'அலைகள் ஓய்வதில்லை' திரைப்படம் வெளியானபோது, அபிராமி திரையரங்க முன் முற்றம் முழுக்கப் பல்வேறு போட்டோக்களில் நடிகை ராதா சிரித்துக்கொண்டிருந்தார். நடிகை நதியாவிற்கு ரசிகர் மன்றங்கள் கணிசமாக இருந்தன. அப்புறம் திரைப்படத்தில் யார் தலையைக் காட்டினாலும், அவர் பெயரில் மாவட்டத் தலைமை ரசிகர் மன்றம் தொடங்குவது மதுரை ரசிகர்களிடையே மோஸ்தரானது.

தமிழகத்தில் மதுரையில்தான் ரசிகர் மன்றங்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தன. ரசிகர் மன்ற மாவட்டத் தலைவர், முட்டுச் சந்துக்குள் பெயர்ப் பலகையில் செயல்படும் மன்றத்தின் பெயர்ப் பலகையைத் திறந்துவைக்க வரும்போது, மைக்செட் முழங்க உற்சாக வரவேற்பு கிடைக்கும். அவர் ஏதோ குட்டி 'தாதா' போல கம்பீரமாக வருவார். லயன்ஸ் கிளப், ரோட்டரி சங்கம் போன்று அன்றைய ரசிகர் மன்றங்களில் சில செயல்பட்டன.
சில ரசிகர் மன்ற உறுப்பினர்கள் பள்ளிக்கூட மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் வழங்குதல், ரத்ததான முகாம் நடத்துதல் என சமூக சேவையிலும் ஈடுபட்டனர் என்றாலும், ரசிகர் மன்றத்தினரை 'விசிலடிச்சான் குஞ்சுகள்', 'வீணாய்ப் போனவர்கள்' எனக் கீழ்த்தரமாக விமர்சிப்பது பெரிய அளவில் நடைபெற்றது. எதிரணி ரசிகர் மன்றத்தினர் கொண்டாடும் அபிமான நடிகரின் வால்போஸ்டர் மீது சாணி தடவுதல், கிழித்தெறிதல் காரணமாக ஏற்படும் அடிதடி, வில்லங்கமான செயல்களினால் ரசிகர் மன்றங்களை மக்கள் வெறுப்புடன் பார்த்தனர். ரசிகர் மன்றங்கள் கௌரவமான பிம்பத்தைப் பொதுமக்களிடம் ஏற்படுத்தவில்லை.

தெருக்களில் சுவர்கள்மீது ஒட்டப்பெறும் திரைப்படப் போஸ்டர்கள், வெகுசனப் பண்பாட்டில் முக்கியமான இடம் வகிக்கின்றன. திரைப்படக் காட்சிகள் இடம்பெற்றுள்ள போஸ்டர் முன் நின்று உற்றுப்பார்த்துக் கிளுகிளுப்பு அடைகின்ற ஆட்கள் இருந்தனர். ஒவ்வொரு வாரமும், இரண்டாவது வாரம், மூன்றாவது வாரம் என ஒட்டப்படும் போஸ்டர்கள் ரசிகர்களின் நாடி நரம்புகளை முறுக்கேற்றின. அதிலும் 25 நாட்கள், 50 நாட்கள், 100 நாட்கள், வெள்ளி விழா என அச்சடிக்கப்பட்ட போஸ்டர்கள் ரசிகர்களுக்கு போதையைத் தந்தன. திரைப்படப் போஸ்டர்கள் உருவாக்கிய ரசிகர் மனநிலை பற்றிச் சொல்வதற்கு நிரம்ப விஷயங்கள் உள்ளன.
’படத் தயாரிப்பு இன்று தொடங்குகிறது’ என்று தினத்தந்தியில் முழுப்பக்க விளம்பரத்துடன் வெளியாகும் அறிவிப்பு, குறிப்பிட்ட நடிகரின் ரசிகர்களுக்குக் கொண்டாட்டத்தைத் தரும். திரைப்படத்தைத் தயாரிப்பது எந்த நிறுவனம் என்பதில் தொடங்கி மதுரையில் எந்த விநியோகஸ்தரின் நிறுவனம் திரைப்படத்தை விநியோகிக்கப் போகிறது என்பது வரையிலான தகவல்களை விளம்பரத்தின்மூலம் அறிந்த ரசிகர்கள் தங்களுக்குள் பரிமாறிக் கொள்வார்கள். எம்.ஜி.ஆர் நடிக்கிற திரைப்படத்தைச் சேது பிலிம்ஸ் மதுரை, இராமநாதபுரம் பகுதியில் வெளியிடப் போகிறது எனில் நிச்சயம் அந்தப் படம் சிந்தாமணி தியேட்டரில்தான் வெளியாகும் என்று பேசுவதில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி. நியூ சினிமா, சென்ட்ரல் தியேட்டரில் சிவாஜி நடித்த படமும் மீனாட்சி, சிந்தாமணி தியேட்டரில் எம்.ஜி.ஆர் நடித்த படங்கள் வெளியானால் நிச்சயம் வெற்றியடையும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் நிலவியது.


திரைப்படத் தயாரிப்புப் பணிகள் நிறைவடைந்து எப்பொழுது படம் வெளியாகுமோ என்ற மனத்தவிப்புடன் ரசிகர்கள் இருப்பார்கள். எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படம் வெளியாகும் தேதி தள்ளிப்போகும்போது, ரசிகர்கள் ஒருபுறம் ஏமாற்றமடைந்தாலும் இன்னொருபுறம் எதிர்பார்ப்புடன் காத்திருப்பார்கள். பெரும்பாலும் பொங்கல், தீபாவளி நாளில் புதுப்படங்கள் வெளியாகும். அவற்றில் எந்த நடிகரின் படம் வெற்றியடையும் என்று பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

மதுரை நகரத் தெருக்களில் நீக்கமற ஒட்டப்பட்டிருக்கிற சினிமா போஸ்டர்கள் இப்பவும் ரசிகர்களைத் தியேட்டருக்கு அழைக்கிற கருவியாக இருக்கின்றன. எழுபதுகளில் வெளியான பாரதிராஜாவின் ’16 வயதினிலே’, டி.ராஜேந்தரின் ’ஒரு தலை ராகம்’, பாலு மகேந்திராவின் ’அழியாத கோலங்கள்’, மகேந்திராவின் ’உதிரிப் பூக்கள்’ போன்ற படங்களின் போஸ்டர்கள் வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்டு வண்ணத்தில் மிளிர்ந்தன. அந்தப் போஸ்டர்களினால் ஈர்க்கப்பட்டுக் கல்லூரி மாணவர்கள் தியேட்டருக்குச் சென்றனர்.
திரைப்படம் வெளியாவதற்குச் சில நாள்களுக்கு முன்னர் பகலிலும் இரவிலும் பட விநியோகஸ்தர் விளம்பரம் மூலம் தூள் கிளப்புவார். சுமார் 10x8 அளவிலான திரைப்பட விளம்பரம் தட்டிகள் இரண்டினைக் கூம்பு வடிவில் இணைத்து கீழே இரு சக்கரங்களில் நகரும் வண்டியில் வைத்து, ஏழெட்டு வண்டிகளை ஒன்றின் பின்னால் ஒன்றாகத் தள்ளிக்கொண்டு வருவார்கள். ஊர்வலத்தின் முன்னர் ஒலிக்கிற பேண்டு வாத்தியம் அல்லது கொட்டு போர்ப் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும். இதே ஊர்வலம் இரவு வேளையெனில் தட்டிகளின் இருபுறமும் பெட்ரோமாக்ஸ் விளக்குகளைத் தலையில் சுமந்துகொண்டு சிலர் நடந்து வருவார்கள். வழியெங்கும் திரைப்படம் பற்றிய துண்டுப்பிரசுரம் தெருவோரத்தில் வேடிக்கை பார்ப்போருக்கு வழங்கப்படும். பெரிய நடிகரின் திரைப்பட வெளியீடு எனில், ஊர்வலத்தின் முன்னால் கரகாட்டக் கலைஞர்கள் அல்லது குறவன் குறத்தி ஆட்டக் கலைஞர்கள் ஆடிக்கொண்டு நடந்து போவார்கள்.

திரைப்படம் வெளியாகும் திரையரங்கின் முன்னர் வண்ணக் காகிதக் கொடிகள் குறுக்கிலும் நெடுக்கிலும் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும். முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் அரங்கின் முன்னர் கூடி நின்று கூட்டம்கூட்டமாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். அதிலும் ஏற்கெனவே படத்தின் பாடல்கள் இசைத்தட்டுகள் மூலம் பிரபலமாகியிருந்தால் எல்லோருக்கும் எதிர்பார்ப்பு கூடிவிடும். ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகரின் திரைப்படத்தின் பாடல்கள் வேறு பிரபலமாகி எங்கும் ஒலித்துக்கொண்டிருந்தால், மனப்பதற்றம் அளவற்றுப் பெருகிவிடும். திரைப்படக் காட்சியைப் பெரிய அளவில் வரைந்து திரையரங்க வாயிலில் வைக்கப்படும் காட்சியானது ரசிகர்களுக்கு மகிழ்வை ஏற்படுத்தும். நடிகரின் உயரமான கட் - அவுட்டிற்கு பெரிய மலர் மாலை, எலுமிச்சைகளைச் சேர்த்து மாலை அணிவித்தலைப் பெரும் சாதனையாகச் சில ரசிகர்கள் செய்தனர். இன்னும் சிலர் கட் - அவுட்டின்மீது குடம்குடமாகப் பாலை ஊற்றிப் பாலபிஷேகம் செய்து தங்களுடைய வெறியைத் தீர்த்துக்கொண்டனர்.
காலையில் 10.30 மணிக்கு முதல் காட்சியாகப் பிரபல நடிகரின் புதுத் திரைப்படம் வெளியிடப்பட உள்ளது என்பதை அறியும் ரசிகர்கள் முதல்நாள் மாலையிலிருந்தே திரையரங்கு வாயிலில் இருக்கும் கவுன்ட்டர் முன்னர் காத்துக்கிடப்பார்கள். இரவு முழுக்கத் தூங்காமல், அல்லது அரைகுறையாகத் தூங்கி நுழைவுச் சீட்டுக்காகக் காத்திருப்போரில் திருமணமானவர்களும் கலந்திருப்பார்கள். சென்ட்ரல் திரையரங்கில் 0.90 காசு நுழைவுச் சீட்டு வாங்குவதற்காகக் காத்திருக்கும் கல் பாவிய சின்னச் சந்தில் மூத்திர வீச்சமடிக்கும். அந்த வீச்சத்தைச் சகித்துக்கொண்டு பன்னிரண்டு மணிநேரம்கூடக் காத்திருக்கும் ரசிகர்கள் இருந்தனர்.
இரவில் பனி கொட்டினாலும் அல்லது மழை தூறினாலும் வரிசையில் காத்துக் கிடப்பது தவமிருப்பது போலிருக்கும். காலையில் முதல் காட்சி தொடங்குவதற்கு முன்னர் திரையரங்கு வாயில், போர்க்களம் போலக் காட்சியளிக்கும். சீருடை அணிந்த காவலர்கள் கையில் கம்புடன் வரிசையை ஒழுங்குபடுத்திக் கொண்டிருப்பார்கள். எம்.ஜி.ஆர் படத்திற்குத்தான் நீளமான வரிசை இருக்கும்; தள்ளுமுள்ளு இருக்கும். எம்.ஜி.ஆர் படம் திரையிடப்படும்போது கையில் கம்புடன் குட்டையான ஆள் ஒருவர், வரிசையில் ஒழுங்கு மீறும்போது, சகட்டுமேனிக்கு வன்முறையைப் பிரயோகித்து ஒழுங்கை நிலைநாட்டுவார்.

காவல்துறையினரைவிட கூட்டத்தினரை ஒழுங்குபடுத்தும் திறமை வாய்ந்த குட்டையானவருக்குத் தியேட்டர் உரிமையாளர்கள் பணம் கொடுத்தனர். எப்படியோ இடித்துத் தள்ளி கவுன்ட்டருக்குள் நுழைந்து நுழைவுச்சீட்டு வாங்கியவர்கள், ஏதோ சாகசம் புரிந்தவர்கள் போலத் திரையரங்கினுள் நுழைவார்கள். திரைப்படம் திரையில் தோன்றியது முதலாக 'விசில்' ஒலி காதைப் பிளக்கும். ஒரே கைத்தட்டல் வேறு கேட்கும். முதல் காட்சியில் அபிமான நடிகர் தோன்றும்போது, காகிதம் அல்லது பூக்களை ஒளிக்கற்றை மீது எறிந்துவிட்டு, பெஞ்சின்மீது ஏறி நின்று கூச்சலிடுவார்கள்.
சில ரசிகர்கள் தங்களுடைய அபிமான நடிகர் திரையில் தோன்றுகின்ற முதல் காட்சியின்போது சூடமேற்றி ஆராதனை செய்வார்கள். முதல் நாள் முதல் காட்சியில் படம் பார்த்தேன் என்ற பெருமையுடன் திரையரங்கினை விட்டு வெளியேறுகிறவர்களின் முகத்தில் பெருமை பொங்கும். திரையரங்க வாயிலில் அடுத்த காட்சிக்காகக் காத்திருக்கும் கும்பலில் சிலர், 'படம் எப்படி?' என்று ஆவலுடன் விசாரிப்பார்கள். 'படம் வெள்ளிவிழாதான்’, 'பாட்டு, சண்டை தூள்' என்று சொல்வதைக் கேட்டவுடன், வரிசையில் காத்திருப்போர் மிகவும் சந்தோஷமடைவார்கள்.
பெரிய நடிகர்கள் நடித்த சில திரைப்படங்கள் ரசிகர்களுக்காக முதல் காட்சி காலை எட்டு மணியளவில் தொடங்கும். ரசிகர் மன்றங்களின்மூலம் ஏற்கெனவே ரசிகர்களிடம் நுழைவுச்சீட்டுகள் கூடுதல் விலையில் விற்கப்பட்டிருக்கும். எப்படியோ தங்களுடைய அபிமான நடிகரின் படத்தை முதல் நாள், முதல் காட்சியில் பார்ப்பதற்கு எவ்வளவு பணமும் தருவதற்கும் ரசிகர்கள் காத்திருந்தனர்.
இந்தப் பண்பாடு தற்போதும் இன்னமும் மெருகேறி, இன்னமும் ஆழமானதொரு பாசத்தைத் திரையில் தோன்றும் நடிகர்கள் மீது வைக்க வைத்திருக்கிறது இந்த சினிமா!