கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால்..?

திருச்சி சிவா எம்.பி
பிரீமியம் ஸ்டோரி
News
திருச்சி சிவா எம்.பி

அரசியல்வாதிகளின் கனவுகளைக் காட்சிப்படுத்தியவர்: கே.செந்தில் குமார்

நடிக்க வரலைனா என்னவா ஆகியிருப்பீங்க?’ என்று நடிகர் நடிகைகளைப் பார்த்துக் கேட்டு சலித்துப் போய்விட்டதால் ஒரு மாறுதலுக்கு அரசியல்வாதிகளிடம் ‘நடிக்க வரவில்லை என்றால்... ஸாரி ஸாரி... அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால், நீங்கள் என்னவாக ஆகியிருப்பீர்கள்?’ என்று கேட்டோம்.

திருச்சி சிவா எம்.பி (கொள்கைபரப்புச் செயலாளர், தி.மு.க)

அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால், சிவில் சர்வீஸ் தேர்வெழுதி ஐ.ஏ.எஸ் அதிகாரியாகியிருப்பேன். ஒருமுறை தேர்வும் எழுதியிருக்கிறேன். சிறுவயதில் இருந்தே அதுதான் என் கனவாக இருந்தது.

திருச்சி சிவா எம்.பி
திருச்சி சிவா எம்.பி

என்னுடைய சிறுவயதிலேயே என் அப்பா இறந்துவிட்டார். அம்மாதான் என்னைக் கஷ்டப்பட்டு வளர்த்தார். அதன் காரணமாகவே, பள்ளியில் படிக்கும்போது நான் பலரின் பேச்சுக்கும் கேலிக்கும் ஆளாகியிருக்கிறேன். உன் லட்சியம் என்ன என வகுப்பில் ஒருமுறை ஆசிரியர் கேட்டபோது, ‘நான் கலெக்டர் ஆவேன்’ என்று சொன்னேன். அதற்கு, ‘நீ பில் கலெக்டர்கூட ஆக முடியாது’ என்று கேலி பேசினார்கள். இந்த விஷயத்தை அம்மாவிடம் சொன்னேன். அதெல்லாம் ஒன்றுமில்லை, நீ நன்றாகப் படித்தால் நிச்சயமாக ஒருநாள் கலெக்டர் ஆவாய் என என்னை ஊக்கப்படுத்தினார். அதனால்தான், பி.ஏ., எம்.ஏ என இரண்டுமே ஆங்கில இலக்கியம் எடுத்துப் படித்தேன். அதேநேரம், மிசாவில் சிறைக்குச் சென்றுவந்த பிறகு கட்சியில் மாவட்ட மாணவரணிப் பொறுப்பு கொடுத்தார்கள். அதற்குப் பிறகு கட்சிப்பணியில் தீவிரமாகிவிட்டேன். அரசியலுக்கு வந்ததற்காக, மிகவும் மகிழ்ச்சிதான் அடைகிறேன். காரணம், ஐ.ஏ.எஸ் தேர்வில் இப்போது என்னைப் பற்றிய கேள்வி கேட்கப்படுகிறது. அம்மா நினைத்ததைவிட உயர்ந்த லட்சியத்தைத்தான் நான் அடைந்திருக்கிறேன். இதைவிட வேறு என்ன வேண்டும்!

முத்தரசன்
முத்தரசன்

முத்தரசன் (பொதுச்செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)

அரசியலுக்கு வருவதற்கு முன்புவரை, தமிழ் படித்துத் தமிழாசிரியராக வேண்டும் என்பதே என் விருப்பமாக இருந்தது. ஆனால், எட்டாம் வகுப்பு படிக்கும்போதே அரசியல் சார்ந்த தொடர்பு ஏற்பட்டு என் பாதை அப்படியே மாறிவிட்டது. தமிழின் மீதான விருப்பம் என்பது 1965-ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் காரணமாகவே எனக்குள் ஏற்பட்டது. தூய தமிழில் பேசவேண்டும், தமிழிலேயே பெயர் வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற லட்சியமெல்லாம் அப்போதுதான் உருவானது. பள்ளிகளில், மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் தமிழ் குறித்த விவாதம், ஆர்வம் பல்கிப் பெருகிய காலகட்டமும் அது. அரசியலுக்கு வந்த பிறகு தவறான முடிவு எடுத்துவிட்டோமே என்கிற எண்ணம் எப்போதும் வந்தது இல்லை. மக்கள் பணி ஆற்றுவது மனநிறைவாகத்தான் இருக்கிறது.

உ.வாசுகி
உ.வாசுகி

உ.வாசுகி (துணைத் தலைவர், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம்)

என் அம்மா, அப்பா இருவருமே கம்யூனிஸ்ட் கட்சியினுடைய முன்னணி ஊழியர்களாக இருந்தார்கள். எங்கள் வீட்டில்தான் கட்சிக்கூட்டம், மாதர் சங்கக் கூட்டமெல்லாம் நடக்கும். சிறுவயதில் இருந்தே அரசியல் கலந்த சூழலில்தான் நான் வளர்ந்தேன். அதேசமயம், சிறுவயதில் எனக்கு டீச்சர் ஆக வேண்டும் என்கிற ஒரு கனவு இருந்தது. ஆனால், நான் டிகிரி படித்து முடித்தவுடனே, வங்கிப் பணியில் கிளர்க்காக வேலைக்குச் சேரும்படி ஆகிவிட்டது. வங்கியில் கிளார்க்காக வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது ஒருநாள் அப்பா என்னிடம் வந்து, ‘`எல்லோரும் அவரவர் பார்க்கும் வேலையில் இருந்து ரிட்டையர்டு ஆன பிறகுதான் கட்சிப் பணிக்காக வருவீர்களானால், கம்யூனிஸ்ட் கட்சி வயதானவர்களின் கட்சியாக மாறிவிடும். சிறுவயதிலேயே கட்சிக்கு முழு நேர ஊழியராக வந்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக நீ ஏன் இருக்கக்கூடாது’’ என என்னிடம் கேட்டார். நானும் சரியெனச் சொல்லி என்னுடைய வங்கிப் பணிக்கு விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு, கட்சியின் முழு நேர ஊழியராக மாறினேன்.

மல்லை சத்யா
மல்லை சத்யா

மல்லை சத்யா (துணைப் பொதுச் செயலாளர், ம.தி.மு.க)

1991-ல் அப்போதைய முதல்வர், ஜெயலலிதா மாமல்லபுரத்தில் நடந்த நாட்டிய விழாவுக்கு வராமல் இருந்திருந்தால், அந்தக் கூட்டத்துக்காக என்னுடைய ரெஸ்டாரன்டை இடிக்காமல் இருந்திருந்தால், நான் அரசியலுக்கே வந்திருக் கமாட்டேன். இன்று, உணவகத் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் ஒரு பிசினஸ் மேனாகியிருப்பேன். நான் மகாபலிபுரத்தில், இரண்டு மிகப்பெரிய உணவகங்கள், ஒரு கைவினைப் பொருள்கள் விற்பனை நிலையம் ஆகிய தொழில்களில் மிகவும் பிஸியாக இருந்த காலகட்டம் அது. அப்போதுதான் ஜெயலலிதா தமிழகத்தில் முதன்முறையாக முதல்வர் ஆனார். அவர் கூட்டம் நடத்துவதற்காக என்னுடைய ரெஸ்டாரன்டை இடித்துத் தரைமட்டமாகிவிட்டனர். அந்தக் கோபத்தில்தான் நான் அரசியலுக்கு வந்தேன். அதேநேரத்தில் வைகோ தி.மு.க-விலிருந்து பிரிந்து தனிக்கட்சி ஆரம்பிக்கவும், அவருடன் இணைந்துவிட்டேன்.

தங்க தமிழ்ச்செல்வன்
தங்க தமிழ்ச்செல்வன்

தங்க தமிழ்ச்செல்வன் (கொள்கைபரப்புச் செயலாளர், தி.மு.க)

எஸ்.ஐ தேர்வெழுதி ஒரு கண்ணியமிக்க காவல்துறை அதிகாரியாக வலம் வந்திருப்பேன். உசிலம்பட்டியில் பி.ஏ படிக்கும் வரைக்கும்கூட அந்த எண்ணம்தான் இருந்தது. அப்பா எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே தீவிரமான அ.தி.மு.க காரர். எங்கள் ஒன்றியத்தின் செயலாளராகவும் இருந்தார். அப்பா மறைவுக்குப் பிறகுதான் அரசியலுக்கு வந்து ஏதாவது சாதிக்கவேண்டும் என முடிவெடுத்து, அரசியலில் இறங்கினேன். எஸ்.ஐ ஆகவேண்டும் என நினைக்கக் காரணம், சமூகத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவர, தவறான பாதையில் செல்லும் மக்களைக் கட்டுப்படுத்த, திருத்த காவல்துறை அதிகாரி களால் முடியும் என நம்பினேன். எஸ்.ஐ ஆகியிருந்தால் இந்நேரம் பல பதவி உயர்வுகளோடும் பதக்கங்களோடும் இந்த வருஷத்தில் ரிட்டையர்டு ஆகியிருப்பேன். ஆனால், அரசியலில் ஆர்வம் உண்டான பிறகு அதைப் பற்றி நான் எப்போதும் யோசித்ததில்லை. அரசியலில் அதைவிட பல நல்ல விஷயங்களைச் செய்திருக்கிறேன் என்கிற திருப்தி எனக்கு இருக்கிறது.

தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ
தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ

தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ (பொதுச்செயலாளர், மனிதநேய ஜனநாயகக் கட்சி)

ஏற்றுமதி இறக்குமதித் தொழிலில் கொடிகட்டிப் பறக்கவேண்டும். அதன் மூலம் குவியும் செல்வங்களில் இருந்து சமூகசேவை செய்யவேண்டும் என்பதே அரசியலுக்கு வருவதற்கு முன்புவரை என்னுடைய லட்சியமாக இருந்தது. ஆனால், பிசினஸ், சமூகசேவை இதையெல்லாம் தாண்டி இலக்கியத்தின் மீதான மோகம் என்பது எனக்கு அதிகமாக இருந்தது. மிகப்பெரிய இலக்கிய ஆய்வாளராக உருவாக வேண்டும் என்பதும் என்னுடைய லட்சியமாக இருந்தது. அதற்குக் காரணம், நான் படித்த புதுக்கல்லூரி ஊட்டிய தமிழார்வம் தான். பேராசிரியர் இன்குலாப்தான் என் தமிழ்ப் பேராசிரியராக இருந்தார். கல்லூரிக் காலங்களில் கவிதை, கட்டுரைப் போட்டிகளில் எல்லாம் அதிகமாகப் பங்குகொள்வேன். கவிஞர் வைரமுத்து, மு,மேத்தா, கவிக்கோ அப்துல் ரகுமான், இன்குலாப் ஆகியவர்களின் கவிதைகளின் மீது எனக்கு மிகப்பெரிய மோகம் இருந்தது. கண்ணதாசன், பட்டுக்கோட்டை, வாலியின் பாடல் வரிகளுக்கு நான் அடிமை. டி.ராஜேந்தரின் வசனத்தமிழுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார் என் நெருங்கிய நண்பர். அரசியலுக்கு வந்ததால், வாசிப்பு, எழுத்து போன்ற என்னுடைய இலக்கியப் பணிகளில் மிகப்பெரிய தொய்வு ஏற்பட்டுவிட்டது.

கோகுல இந்திரா
கோகுல இந்திரா

கோகுல இந்திரா (முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க)

என் பக்கம் நியாயம் இருந்தால், அதை எப்படியாவது நிரூபிக்கவேண்டும் என்கிற விடாப்பிடியான குணம் சிறுவயதிலேயே என்னிடம் இருந்தது. அந்தத் திறமையைக் கவனித்த என் அப்பாதான், என்னை எப்படியாவது வழக்கறிஞராக்க வேண்டும் என உறுதியாக இருந்தார். அப்பா ஆசிரியர் என்பதால், சிறுவயதில் இருந்தே, நீ லாயர்தான் ஆகவேண்டுமென்று என்னை ஊக்கப்படுத்தி வளர்த்தார். அதுவே, பிற்காலத்தில் என்னுடைய விருப்பமாகவும் மாறியது. சட்டம் படித்து வழக்கறிஞர் ஆனேன். 2001-ல் நான் எம்.பி ஆவதற்கு முன்புவரை எங்கள் ஊர் சிவகங்கையில் வக்கீலாக பிராக்டீஸ் செய்துகொண்டிருந்தேன். நீதிபதியாக வேண்டும் என்கிற கனவெல்லாம் இருந்தது கிடையாது. ஆனால், விரல் விட்டு எண்ணக்கூடிய நல்ல திறமையான சிவில் வழக்கறிஞர்களில் நானும் ஒருவராக வரவேண்டும் என்கிற லட்சியம் இருந்தது. அதிலும் பெண்கள் சார்ந்த வழக்குகளில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்கிற எண்ணம் கூடுதலாகவே இருந்தது. ஏன் வழக்கறிஞர் தொழிலை விட்டோம் என்கிற கவலை இப்போது அதிகமாக இருக்கிறது. என் வழக்கறிஞர் நண்பர்கள், பிராக்டீஸ் செய்வதைப் பார்க்கும்போது, நானும் அப்படியே இருந்திருக்கலாமே என்ற ஏக்கம் எனக்குள் அதிகமாக உருவாகிறது.