சினிமா
தொடர்கள்
Published:Updated:

யூ டூ யுனிவர்ஸ்?

யூ டூ யுனிவர்ஸ்?
பிரீமியம் ஸ்டோரி
News
யூ டூ யுனிவர்ஸ்?

ரஜினி சிறு வயதில் இருக்கும்போதே, பெற்றோரை வில்லன்கள் கொன்றுவிட, ரஜினியும் அவரின் தம்பியும் ஆதரவற்றவர்கள் ஆகிறார்கள்

சமீபத்துல வெளியான ‘விக்ரம்’ படம் லோகேஷ் கனகராஜோட யுனிவர்ஸையே காட்டுச்சு. தில்லி, அடைக்கலம், ரோலக்ஸ்னு முழுக்க ‘கைதி’ படத்துல வந்த உலகமே திரும்ப நம்ம முன்னாடி விரிஞ்சுது. `எங்ககிட்டயும் சீப்பு இருக்கு. நாங்களும் சீவுவோம்'னு கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்கள், தங்களோட அடுத்த படங்கள்ல அவங்களோட யுனிவர்ஸை நம்ம கண் முன்ன கொண்டு வந்தா எப்படி இருக்கும்னு பாப்போம்.

நெல்சன்

ரஜினி சிறு வயதில் இருக்கும்போதே, பெற்றோரை வில்லன்கள் கொன்றுவிட, ரஜினியும் அவரின் தம்பியும் ஆதரவற்றவர்கள் ஆகிறார்கள். டீ கிளாஸ் கழுவுவது, டாக்ஸி ஓட்டுவது, மிலிட்டரி டாக்டர் ஆவது, பாகிஸ்தானுக்கு ஜெட் டிரைவர்னு பல வேலைகள் பார்க்கிற ஹீரோ டைட்டில் கார்டு முடியிறதுக்குள்ளயே முன்னேறி முடிச்சுடுறார். ரெடின் கிங்ஸ்லி, கிளி, மாகாளின்னு கர்ணன் கவச குண்டலத்தோட சுத்துற மாதிரி ஹீரோவும் இவுங்களோட சுத்தி சிரிக்க வைக்க முயற்சி பண்றாங்க. எதேச்சையாகத் தன் அப்பாவோட நண்பரான யோகி பாபுவ சந்திக்கிறார். ஆமா கரெக்ட்டாதான் வாசிச்சிருக்கீங்க, யோகி பாபுதான். இதுவே கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதைன்னா சிரஞ்சீவியவோ இல்ல சிவராஜ் குமாரையோ கூப்பிட்டிருக்கலாம்.

“உங்க அப்பா பெரிய கோல மாவு வியாபாரி. ஏழை மக்களுக்குக் கோல மாவ வாரி வழங்குற வள்ளல். அவர் தன்னோட ஜமீன் பங்களாவில பாதுகாத்து வச்சிருக்கும் 5,000 டன் கோல மாவ தன்னோட வாரிசான உனக்கு எழுதி வைக்கணுங்கிறதுதான் அவரோட கடைசி ஆசை. ஆனா, அதுக்கு ஒரு கண்டிஷன் இருக்கு. அந்த 5,000 டன் கோல மாவு உனக்கு வரணும்னா, 48 மணிநேரத்துக்குள்ள 50 டன் கோல மாவ நீ வித்துக்காட்டணும்’னு ஒரு மூட்ட கோல மாவத் தூக்கிப் போடுறார்.

என்னடா பாதிப் படம் முடிஞ்சது, இன்னும் ‘ஹாஹா ஹாசினி’ வகை ஹீரோயினையும் காணோம், டூரிஸ்ட் மாதிரி நடிச்ச அந்த டெரரிஸ்ட்டையும் காணோம்னு ஆடியன்ஸே தேட ஆரம்பிக்கும்போது, ரெண்டு பேரோட என்ட்ரியும் வருது. அவர்தான் செகப்பு டி-ஷர்ட் போட்ட வினய். ஹீரோகிட்ட சவால் விடுறாரா இல்ல ஜூஸ் கடைல சர்பத் ஆர்டர் பண்றாரான்னு டயலாக் டெலிவரிய பாத்து ஆடியன்ஸ் குழப்பத்துல இருக்கும்போதே, க்ளைமாக்ஸ் வந்துருது.

ஏற்கெனவே கோவா, பாகிஸ்தான்னு முந்தின படங்கள்ல போனதால, இந்தப் படத்துல ஏ.வி.எம் ஸ்டூடியோலேருந்து ஒரு ரபேல் விமானத்தப் புடிச்சு, மலேசியா போய் கபாலிங்குற பெரிய கோலமாவு வியாபாரிகிட்ட அந்த 50 டன்ன 48 மணி நேரத்துல வித்து முடிச்சுடுறார்.

யூ டூ யுனிவர்ஸ்?

சிறுத்தை சிவா

நம்ம ஹீரோ பதிமூணு பங்காளிக, பத்தொன்பது அங்காளிகளோடு தேனி மாவட்டம் பாம்புராயன்பட்டில வாழறார். காரைக்குடி வீட்ட செட்டு போட ஆரம்பிச்சு மொத்தக் காரைக்குடியவே செட்டு போட்டும், ரெண்டு பங்காளிக தூங்க எடம் இல்லாம ஹால்ல படுத்திருக்காங்க.

மில் வச்சிருக்கும் ஹீரோவுக்கும் அதே ஊர்ல கார் ஃபேக்டரி கட்ட வரும் கார்ப்பரேட் வில்லன் ஜெகபதி பாபுக்கும் முட்டிக்குது. ஹீரோவோட மகளை வில்லன் கல்கத்தாவுக்குக் கடத்திட்டுப் போய்டுறார். மகளத் தேடி கல்கத்தா பறக்குறார் ஹீரோ. அங்க, ஹௌரா பிரிட்ஜ்ல நின்னுக்கிட்டு, கல்கத்தாவுக்கே காப்புக் கட்டிக்கிட்டிருக்க காளையன்கிட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டு, கார்ப்பரேட் வில்லன் ஜெகபதி பாபுவ தேடிப் போறார். ஒட்டன்சத்திரம் மார்க்கெட்ல கடை வச்சிருக்கும் தன்னோட பங்காளி விநாயகத்துக்கு போன் பண்ணி, கல்கத்தாவுல நம்மாளுக யாராவது இருக்காங்களான்னு கேக்க, ‘‘நம்ம சின்னம்மா மகென் தூக்கு துரையும், என் சகலபாடி வேதாளம் கணேசனும் அங்கதானப்பா குடும்பத்தோட இருக்காய்ங்கெ”ன்னு சொல்றார்.

கொட்ற மழைல சளிப்புடிச்சாலும் பரவாயில்லன்னு பைக் ரேஸுக்கு ஸ்பேரிங் போட்டிருந்த தூக்கு துரையையும், பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலத்துல பீடா போட்டு டான்ஸ் ஆடுறேன்கிற பேர்ல டார்ச்சர் பண்ணிக்கிட்டிருந்த கணேசனையும் கூட்டிக்கிட்டு, வில்லன் இருக்கும் எடத்துக்கே போறார் ஹீரோ. அங்க போய்ப் பார்த்த அப்புறம்தான் தெரியுது, காளையன் தங்கச்சி பச்சக்கிளிய கடத்துனதும், கணேசன் தங்கச்சி தமிழைக் கடத்துனதும், தூக்கு துரை மற்றும் ஹீரோவோட மகளக் கடத்துனதும் ஒரே ஆளான ஜெகபதி பாபுன்னு. நாலு பேரும் சேந்து சண்ட போட்டு எப்டி வில்லனக் கொன்னு, ஹீரோவோட மகளக் காப்பாத்துறாங்கன்றதுதான் க்ளைமாக்ஸ்.

ஏ.ஆர்.முருகதாஸ்

பேராசிரியர் ரமணா நடத்துற ‘போதிதர்மர் சித்த வைத்தியசாலை’ல படிச்சு டாக்டர் ஆகுற ஹீரோ, சீனாவுக்குக் குதிரை ஏறாமலே எப்டி கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிச்சாருங்குறதுதான் படத்தோட ஒன்லைன்.

ரமணாட்ட படிச்சதாலயோ என்னமோ, நாள்பட்ட வயித்து வலி, மூலம் மட்டுமல்லாம லஞ்சம், ஊழலுக்கும் மருத்துவம் பாக்குறார் ஹீரோ. பல் வலின்னு வந்தவுங்களிடம், ‘மனுஷ ஒடம்புல மொத்தம் பல்லுகளோட எண்ணிக்கை மட்டும் 32, இதுல கடவாப் பல்லுக எண்ணிக்கை 6, முன்னாடி இருக்க மேல் பல்லுகளோட எண்ணிக்கை நாலு, கீழ்ப் பல்லுகளோட எண்ணிக்கை 5, கோழிக் கறிய கடிக்க நாம பயன்படுத்துற பல்லுகளோட எண்ணிக்கை 4, இதுவே நல்லி எலும்பக் கடிக்க நாம பயன்படுத்துற பல்லுகளோட எண்ணிக்கை 6’ன்னு பேசியே குணமாக்கிடுறார். சரி மாரடைப்போட பேஷன்ட் வந்தா என்ன பண்ணுவார்னு கேக்குறீங்களா? ‘மாரடைப்பு - தமிழ்ல எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை’ன்னு பக்கத்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்ருவார்.

ஆதரவற்றோர் இல்லத்துல வளர்ந்து பிரபல திருடனா இருந்து, இப்ப திருந்தி விவசாயிகள் உரிமைகளுக்காகப் போராடி வரும் தன்னோட நண்பர் கத்தி என்கிற கதிரேசன் மூலமா, ஆதரவற்றோர் இல்லத்துல ‘மொட்ட மாடி கல்பனா’ன்ற பேரோட வளர்ந்த பொண்ணப் பத்தி ஹீரோவுக்குத் தெரிய வருது. அந்த ஆசிரமத்துல போய் விசாரிக்கும்போதுதான் கல்பனாதான் தன்னோட பொண்ணுன்னு ஹீரோவுக்குத் தெரியுது.

கல்பனாவைக் காதலிச்சு தன்னை மறந்த சஞ்சய் ராமசாமி, இப்போ எல்லாத்தையும் மறந்ததைப் பார்த்த ஹீரோ, சஞ்சய் டி.என்.ஏவையும் போதி தர்மர் டி.என்.ஏவையும் மிக்ஸிங் பண்ணி கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கிறார்.

அட்லி

ஸாரி பாஸ். மத்தவங்கல்லாம் ஒரு கதையை வெச்சுப் படமெடுத்தா அட்லி, ரஜினி படத்தில இருந்து நாலு சீன், கமல் படத்தில் மூணு சீன், எம்.ஜி.ஆர் படத்தில் ஒண்ணேமுக்கா சீன் சுட்டுப் படமெடுக்கிறதால யுனிவர்ஸே இடியாப்பம் மாதிரி கொசகொசன்னு குழம்பிப்போயிருக்கு.