
எங்கே நம்மள பத்தி பேச்சே காணோம்.
ரசிகர்கள் நெஞ்சில் கௌதம் மேனன் பாய்ச்சிய தோட்டாவால் காதில் ரத்தம் வழிகிறது. படமெங்கும் ஓவரோ ஓவர் வாய்ஸ் ஓவர்கள். அடுத்து அவர் ஜெயலலிதா வெப் சீரிஸுக்குத் தயாராகி வருகிறார். இதிலும் ‘ஓவர் வாய்ஸ்’ (இனி அப்படித்தான்) நிரம்பி வழியும் என எதிர் பார்க்கலாம். அடுத்து, வேறு அரசியல்வாதிகளின் வெப் சீரிஸையும் அவர் இயக்கினால் அந்த அரசியல்வாதிகளின் ஓவர் வாய்ஸ் எப்படியிருக்கும்?
செல்லூர் ராஜு
மாண்புமிகு அம்மா, தங்கத்தாரகை, புரட்சித்தலைவி, அண்ணன் எடப்பாடி, சின்ன அண்ணன் ஓ.பி.எஸ், தேனியின் தோனி ஓ.பி.ஆர் இவங்க எல்லோருடைய வழியிலயும் நடக்குறோம்... பறக்குறோம்; தட்றோம்... தூக்குறோம். பேட்டி கொடுக்கும்போது மண்டை சூடு ஆகுது. அதனால, அடுத்த பேட்டியிலிருந்து ஹெல்மெட் போட்டுக்கணும். செம்பரம்பாக்கம் ஏரி நிரம்புது. அதுக்கும் ஒரு ஜெர்கின் ரெடி பண்ணணும்!
ஹெச்.ராஜா
எங்கே நம்மள பத்தி பேச்சே காணோம். இந்த மீடியாவே இப்படித்தான். பொழுதன்னிக் கும் நித்தி... நித்தி... நித்தி! கரீபியன் பக்கம் சொந்தமா தீவு வாங்கி ஜாலி பண்றாப்ல. அதை எடுத்து வைரல் பண்றாங்க. எனக்கு போட்டி நித்தியா?! விடக்கூடாது. கரீபியன் கடல் கொள்ளையர்களை விட்டு அவரை ஹைஜாக் பண்ணணும்!
ஜெயக்குமார்
உள்ளாட்சித் தேர்தல் வேற வந்தாச்சு. எதிர்க்கட்சி, பக்கத்துக் கட்சி, தேசியக் கட்சி, பக்கத்து மாநிலக் கட்சின்னு குற்றம்சாட்டணும். கேப் விடவே கூடாது. சட்டென்று மாறுது வானிலை. ஆனா, கூட்டணி அப்படி மாறுவதில்லை. செம்பரபாக்கம் நிரம்புது. அடையாறு ஓடுது. மழை வேற வருது. பேட்டியை சீக்கிரம் முடிக்கணும். இல்லை சிங்கர் மோடுக்கு மாறி பாட்டு பாடணும்... நான் மைக் குமார் இல்ல, மைக் டைசன்.
சீமான்
வர வர என் மைண்ட் வாய்ஸ் என்னை அறியாமலேயே வாயில் வந்துடுது, வரட்டும். கதை சொல்லும்போது நாலு பேரு கைத்தட்டுறான். அதுல ஒருத்தன் வீடியோ எடுத்து நெட்ல போடுறான். 400 பேர் பார்த்து, கிண்டலா சிரிக்கிறான். நல்லா சிரிங்க... நான் சாப்பிடும்போது எனக்கு லிஸ்ட் எடுத்த மாதிரி, என்னைப் பார்த்துச் சிரிக்கிறவனையும் லிஸ்ட் எடுத்துவெச்சிருக்கேன். முதுகுல பனைமட்டையால அடிச்சு வெளுப்பேன்டா!