தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

வெளிச்சம் தந்த வாழ்க்கை - சீரியல் பல்ப் முதலாளிகள்

சீரியல் பல்ப் முதலாளிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
சீரியல் பல்ப் முதலாளிகள்

உழைப்பின் உறுதி

`ராணுவம் முதல் ராக்கெட் தொழில் நுட்பம் வரை ஆண்கள் மட்டுமே செய்யும் வேலை என்று எதுவுமில்லை' என்று நிரூபித்துவருகிறார்கள் பெண்கள். அந்தப் பட்டியலில் தங்கள் பெயரையும் சேர்த்திருக் கிறார்கள் ‘காந்தி சுய உதவிக்குழு'வைச் சேர்ந்த தோழிகள்.

நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி அருகே உள்ள அரசனார்குளம். `காந்தி சுய உதவிக்குழு'வின் தலைவி தனலட்சுமி, ‘`ப்ளஸ் டூதான் படித்திருக்கிறேன். பருவ மழை பொய்த்துப்போகும் காலங்களில், விவசாயக் கூலி வேலை இல்லாமல் போகும். அப்படி ஒரு நேரத்தில்தான் மகளிர் சுய உதவிக்குழுவில் சேர்ந்தேன்’’ என்று தொடங்குகிறார்.

கிராமங்களைத் தத்தெடுத்து முன்னேற் றும் பணிகளில் ஈடுபட்டுவரும் டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தின் ‘ஸ்ரீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட்’ இந்தக் குழுவுக்கு உதவிகளைச் செய்திருக்கிறது. தனலட்சுமி, குழுவிலிருந்த 15 பெண்களும் ஆர்வத்துடன் பயிற்சிபெற்றதுடன், சீரியல் பல்புகளைத் தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். வங்கிக் கடனுதவி கிடைத்ததால் தொழிலை விரிவுபடுத்த நினைத்த தனலட்சுமியும் அவரின் குழுவினரும் சீரியல் பல்புகளைப் பயன்படுத்தி கட்-அவுட் செய்து விற்பனை செய்யத் தீர்மானித்திருக்கிறார்கள். அதில் கிடைத்த வெற்றியால் தங்களுடைய தொழிலை `சீரியல் பல்ப் ஃபேக்டரி’யாக மாற்றியிருக்கிறார்கள். மின்சாரத்தைப் பயன்படுத்திச்செய்யும் இந்த ரிஸ்க்கான தொழிலில் தங்கள் காந்தி சுய உதவிக்குழு சாதித்த கதையைச் சொன்னார் தனலட்சுமி.

``ஆரம்பத்தில் உள்ளூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் நடக்கும் கோயில் திருவிழாக்களுக்குத் தேவையான சீரியல் பல்புகளைக் கொடுத்தோம். பிறகு கோயில் விழாக்களுக்குத் தெய்வ உருவங்களின் கட்-அவுட் செய்து தருமாறு ஆர்டர் வந்தது. மயில் மீது முருகன் அமர்ந்திருப்பது போலவும், தாமரையில் லட்சுமி இருப்பது போலவும் தத்ரூபமாக சீரியல் மூலம் வடிவமைக்கக் கற்றுக்கொண்டு செய்துகொடுத்தோம். அருகில் உள்ள இடங்களில் இருப்பவர்கள், நாள் வாடகைக்கும் எடுத்துச்செல்வார்கள்.அடுத்ததாக அரசியல் நிகழ்ச்சிகளுக்கும் ஆர்டர் வந்தது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கலைஞர் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர் களின் கட்-அவுட்களை திறமையாகச் செய்து கொடுத்தோம்.

வெளிச்சம் தந்த வாழ்க்கை -  சீரியல் பல்ப் முதலாளிகள்

எங்கள் குழுவில் உள்ள பல பெண்கள் வெளியூர்களுக்குக்கூடச் சென்றதில்லை. ஆனால், எங்கள் சீரியல் பல்ப் திறமை பற்றி வெளிமாவட்டங்களிலிருந்து வெளிமாநிலங்கள்வரை பரவியது எங்களுக்கே ஆச்சர்யம்தான். எங்களிடம் பயிற்சி எடுக்க பல ஊர்களில் இருந்தும் பெண்கள் வர ஆரம்பித்தார்கள். இதுவரை 250-க்கும் அதிகமானோர் எங்களிடம் பயிற்சி பெற்று பல இடங்களில் இந்தத் தொழிலை வெற்றிகரமாகச் செய்கிறார்கள்’’ என்றவர், தங்களின் ஆர்டர்கள் குறித்துப் பேசினார்.

‘`கேரளம், மேற்குவங்கம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலிருந்தும் எங்களுக்கு ஆர்டர்கள் வருகின்றன. தேர்தல் காலங்களில் நாடு முழுவதிலுமிருந்து ஆர்டர்கள் வரும். மும்பையின் பிரபல விநாயகர் சதுர்த்தி விழாவின்போது, விநாயகர் கட்-அவுட் செய்து கொடுக்குமாறு அங்கிருந்து ஆர்டர் கொடுக்கிறார்கள். கொல்கத்தாவில் காளி உருவங்களுக்கான ஆர்டர்கள் கிடைக்கும். இவற்றையெல்லாம் செய்து லாரிகள் மூலம் அனுப்பி வைத்துவிடுவோம்.

25 அடி அகலமும் 10 அடி உயரமும் கொண்ட சீரியல் கட்-அவுட் படங்களைச் செய்ய 30,000 ரூபாய் செலவாகும். அதைச் சிறிது லாபத்துடன் விற்பனை செய்வோம். அதுவே, 30 அடி அகலமும் 27 அடி உயரமும் கொண்ட பிக்ஸல் பல்ப் கட்-அவுட் மூன்று லட்சம் வரை விற்பனை ஆகும். அதில் டபுள் இமேஜ் தேவை என்றால் கூடுதல் செலவாகும். முன்பெல்லாம், சாதாரண பலகையில் படம் வரைந்து அதைச் சுற்றிலும் சீரியல் பல்ப் போடுவோம். பிறகு மூங்கில் மூலம் படம் செய்து அதில் சீரியல் பல்ப் போட்டு கட்-அவுட் செய்தோம். பின்னர் எல்.இ.டி பல்புகள் வந்தன. இப்போது பிக்ஸல் பல்ப்கள்தான் லேட்டஸ்ட்’’ - அசரவைக்கிறார் தனலட்சுமி.

வளரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப பயிற்சிகள் மூலம் தங்களை அப்டேட் செய்துகொண்ட இந்தப் பெண்கள், இப்போது வந்திருக்கும் பிக்ஸல் பல்ப் மூலமாக யாருடைய உருவத்தையும் உடனடியாகவும் சுலபமாகவும் வரைந்துவிட முடியும் என்கிறார்கள்.

‘`இந்தத் தொழில் மூலமாகக் கிடைத்த வருமானத்தில் என் இரு பெண் குழந்தைகளையும் நன்றாகப் படிக்க வைத்துவிட்டேன். மூத்த மகள் மகேஸ்வரிக்குத் திருமணமாகி விட்டது. இளையமகள் துர்காஸ்ரீ பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். கட்-அவுட் செய்வதற்கு கம்ப்யூட்டர் மூலமாகப் படங்களை வரைந்துகொடுத்து எங்களுடைய தொழிலுக்கு அவரும் உதவியாக இருக்கிறார். இந்தத் தொழிலின் மூலமாக எங்கள் கிராமத்தில் உள்ள பெண்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது’’ என்கிறார் தனலட்சுமி உற்சாகமாக.

வெளிச்சம் தந்த வாழ்க்கை -  சீரியல் பல்ப் முதலாளிகள்

இந்தத் தொழிலில் ஈடுபட் டுள்ள சங்கரகோமதி கூறுகை யில், ‘`இந்தத் தொழில் செய்யத் தொடங்கிய பிறகு எங்கள் வாழ்க்கையே மாறிவிட்டது. பிள்ளைகளை நன்றாகப் படிக்கவைக்கிறோம். காலையில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு வந்து மாலை வரை சீரியல் பல்புகளை மின்சார வயருடன் இணைக்கும் வேலையைச் செய்தால் 300 முதல் 400 ரூபாய் வரை சம்பாதிக்க முடிகிறது. குடும்பத்தில் எங்களுக்கு மரியாதை கிடைக்கிறது’’ என்கிறார் பெருமையுடன்.

அசத்துங்கள் தோழிகளே!

லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்துள்ளனர்!

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியில் செயல்பட்டு வரும் ஸ்ரீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட் தரப்பினருடன் பேசினோம். ``நெல்லை மாவட்டத்தில் 580 கிராமங்களில் பணி செய்து வருகிறோம். கிராமத்தினருக்கு ஆயத்த ஆடைகள் செய்வதற்கான பயிற்சி, ஸ்கூல் பேக் செய்யும் பயிற்சி, சீரியல் பல்ப் செய்யும் பயிற்சி, கைவினைப் பொருள்களுக்கான பயிற்சி, இயற்கை விவசாயப் பயிற்சி என பல்வேறு தொழிற்பயிற்சிகளைக் கொடுத்து கடனுதவிக்கும் வழிசெய்கிறோம். 11,500 சுய உதவிக்குழுக்கள் மூலமாக 1,68,000 பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். தவிர, பிளாஸ்டிக் விழிப்புணர்வு, பள்ளிகளுக்குக் கழிவறை கட்டிக்கொடுப்பது என, நாங்கள் பணியாற்றும் கிராமங்கள் ஒவ்வொன்றையும் மாதிரி கிராமமாக மாற்றி வருகிறோம்’’ என்றனர் பெருமையுடன்.