ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியொன்றில் காஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஜோத்பூர் மாவட்டம், புங்ரா கிராமத்தில் கடந்த வியாழக்கிழமையன்று நடந்த இந்தச் சம்பவத்தில், மணமகன் சுரேந்திர சிங், அவரின் பெற்றோர், அங்கு வந்திருந்த பிற குடும்பத்தினர் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இது குறித்துப் பேசிய எம்.ஜி கண்காணிப்பாளர் ராஜ் ஸ்ரீ பெஹ்ரா, ``காயமடைந்த 42 பேர் இன்னும் மருத்துவமனையின் தீக்காயப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர்.

ஒரு பொது அறுவை சிகிச்சை நிபுணர், ஒரு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர், ஒரு குழந்தை அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் ஒரு மயக்க மருத்துவர் உட்பட 24 மருத்துவர்கள் கொண்ட குழு காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர்" என்று தெரிவித்தார். இதற்கிடையில், 'ஜன் ஆக்ரோஷ் யாத்ரா'வில் பங்கேற்பதற்காக ஜோத்பூர் சென்ற பா.ஜ.க மாநில பொறுப்பாளர் அருண் சிங், மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை சந்தித்தார்.