
நாம காஸ் சிலிண்டருக்கு புக் பண்ணி, அது என்னைக்கு வருதுன்னு காத்துக் கெடக்கணும். இப்போ அந்தப் பிரச்னை இல்லை
சமைத்துக்கொண்டிருக்கும்போதே காஸ் தீர்ந்துவிடுமோ என்ற கவலையில்லை; சிலிண்டர் புக் செய்து நாள்கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை; குழாயைத் திறந்தால் தண்ணீர் வருவது போல, இன்னொரு குழாயைத் திறந்தால் எரிவாயு வரும். 24 மணி நேரமும் காஸ் விநியோகம்! எங்கே என்கிறீர்களா?
தமிழகத்திலேயே முதல்முறையாக நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அடுத்த சீயாத்தமங்கை கிராமத்தில் வீடுதோறும் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்யப்படுகிறது. முதல்கட்டமாக 14 வீடுகளுக்குக் குழாய் வழி எரிவாயு இணைப்புத் திட்டத்தை, நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்துள்ளார். ‘டோரன்ட் காஸ்' என்ற தனியார் நிறுவனம் சார்பாகத் தொடங்கப்பட்டுள்ள குழாய் வழி எரிவாயு இணைப்புத் திட்டத்தில், இதுவரை 65 குடும்பங்கள் பதிவு செய்துள்ளனர்.

சீயாத்தமங்கை கிராமத்தில் மிகுந்த பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ள எரிவாயு சேமிப்பு நிலையத்திலிருந்து, 17 கி.மீ. தூரம் தரைக்குக் கீழே ஒன்று முதல் ஒன்றரை அடிவரை ஆழத்தில் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் சமையல் எரிவாயு வழங்கப்படுகிறது. வீட்டுக்கு வீடு மின்சாரம் மற்றும் குடிநீர்க் குழாய்கள் அமைப்பதுபோல எரிவாயுக் குழாய்கள் அமைக்கப்பட்டு, சமையலறைக்கு நேரடியாக எரிவாயு கொடுக்கப்பட்டுள்ளது. எரிவாயுப் பயன்பாட்டின் கொள்ளளவை அளவிடும் மீட்டர் இத்துடன் அமைக்கப்பட்டிருப்பதால், நுகர்வோரின் பயன்பாடு எளிமையாகக் கணக்கிடப்படுகிறது.
‘‘ஏற்கெனவே பயன்படுத்தி வந்த எல்.பி.ஜி சிலிண்டருக்கு மத்திய அரசு கடுமையாக விலையை ஏற்றியதால் 1,062 ரூபாய்க்கு விற்பனையாகி வரும் நிலையில், குழாய் மூலம் வழங்கப்படும் அதே அளவு எரிவாயுவுக்கு 805 ரூபாய் மட்டுமே செலவாகும்’’ என்றும் கூறுகின்றனர். ‘மின்சாரக் கட்டணம் போல, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இணையவழியில் எரிவாயுக் கட்டணம் செலுத்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், நுகர்வோர் அலைய வேண்டிய அவசியமில்லை’ என்றார் டோரன்ட் நிறுவனத்தின் நிர்வாகி.
கெயில் நிறுவனத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயுவானது, குழாய்கள் மூலம் பாதுகாப்பான முறையில் வீட்டுக்கு வீடு கொண்டுவருவதைக் கண்காணிக்க 24 மணிநேரமும் தொழில்நுட்பக் கண்காணிப்புக் குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர். நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் 1,60,000 இணைப்புகள் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. ‘‘மாவட்டம் முழுவதும் வீடுகளுக்குக் குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கும் பணிகள் விரைந்து தொடங்கப்படும்’’ என்றார், மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ்,.

குழாய் மூலம் இணைப்பு பெற்ற சீயாத்தமங்கை கிராமத்தைச் சேர்ந்த வசந்தாவிடம் பேசியபோது, ‘‘நாம காஸ் சிலிண்டருக்கு புக் பண்ணி, அது என்னைக்கு வருதுன்னு காத்துக் கெடக்கணும். இப்போ அந்தப் பிரச்னை இல்லை’’ என்றார். அதே பகுதியைச் சேர்ந்த கலா என்பவர், ‘‘நாங்க சிலிண்டருக்குப் பதிவு செய்து, அந்த வண்டி வரும்போது காத்திருக்கணும். அது முடியாம பலமுறை நானே பாதிக்கப்பட்டுள்ளேன். தற்போது காஸ் தீர்ந்திடுமோ என்ற பயமில்லாம நிம்மதியா இருக்கேன்’’ என்றார்.

சீயாத்தமங்கை ஊராட்சி மன்றத் தலைவர் சிவகாமி அன்பழகன், ‘‘டோரன்ட் நிறுவனம் எரிவாயு சேமிப்பு நிலையம் அமைக்க எங்கள் ஊரில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தோம். அதன்மூலம் எங்கள் ஊரில் 14 வீடுகளுக்கு தற்போது குழாய் மூலம் காஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 65 பேர் முன்பதிவு செய்துள்ளனர். ஒரு இணைப்புக்கு முன்பதிவுக் கட்டணமாக 7,100 ரூபாய் என அறிவித்தனர். ஏழைகள் வசிக்கும் இந்த ஊரில் அவ்வளவு தொகையை உடனடியாகச் செலுத்த இயலாது என்று கோரிக்கை வைத்தோம். அதனால், 1,100 ரூபாய் மட்டும் முன்பதிவாகச் செலுத்தி, அதன்பின் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கட்டணம் செலுத்தும்போது 500 ரூபாய் சேர்த்துச் செலுத்துகிறோம் என்பதை ஏற்றுக்கொண்டார்கள். இந்தக் குழாய் வழி மூலம் காஸ் என்ற திட்டத்தைத் தமிழ்நாட்டில் முதல்முறையாக எங்கள் கிராமத்தில் செயல்படுத்தியுள்ளனர். இந்த விஷயத்தில் தமிழ்நாட்டுக்கே நாங்கள் முன்னோடி என்பதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்கிறார்.