Published:Updated:

`கோலம்’ காயத்ரிக்கு பாகிஸ்தானோடு தொடர்பு... காவல்துறை ஆணையர் சொல்வது உண்மையா?!

காயத்ரி கந்தாடை
News
காயத்ரி கந்தாடை ( நந்தகுமார் )

கடந்த 1-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மாநகர ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், "காயத்ரி கந்தாடை பாகிஸ்தானில் செயல்படும் `பைட்ஸ் பார் ஆல்' என்ற அமைப்புடன் தொடர்பில் இருக்கிறார். அவருடைய ஃபேஸ்புக்கில் அதுபற்றிய தகவலைக் கொடுத்துள்ளார்'' என்றார்

Published:Updated:

`கோலம்’ காயத்ரிக்கு பாகிஸ்தானோடு தொடர்பு... காவல்துறை ஆணையர் சொல்வது உண்மையா?!

கடந்த 1-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மாநகர ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், "காயத்ரி கந்தாடை பாகிஸ்தானில் செயல்படும் `பைட்ஸ் பார் ஆல்' என்ற அமைப்புடன் தொடர்பில் இருக்கிறார். அவருடைய ஃபேஸ்புக்கில் அதுபற்றிய தகவலைக் கொடுத்துள்ளார்'' என்றார்

காயத்ரி கந்தாடை
News
காயத்ரி கந்தாடை ( நந்தகுமார் )

"சென்னை மாநகர காவல்துறை ஆணையர், வழக்கறிஞர் காயத்ரி கந்தாடைப் பற்றி கூறியுள்ள அவதூறுகள் அடிப்படை ஜனநாயகத்துக்கு எதிரானது. அவர் கூறியதுபோல் பாகிஸ்தானில் இயங்கிவரும் ஒரு மனித உரிமை அமைப்புடன் இணைந்து பணியாற்றியதற்காக விசாரணை நடத்தப்படும் என்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது ஐ.நா-வின் மனித உரிமை காப்பாளர் பிரகடனத்துக்கு எதிரானது'' என்று மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பின் தேசியச் செயலாளர் ஹென்றி திபேன் தெரிவித்துள்ளார்.

காயத்ரி கந்தாடை
காயத்ரி கந்தாடை
ஈ.ஜெ.நந்தகுமார்

கடந்த 29-ம் தேதி சென்னை பெசன்ட் நகரில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் வகையில் கோலமிட்டதாக வழக்கறிஞர் காயத்ரி கந்தாடை உட்பட 8 பேரைக் காவல்துறையினர் கைது செய்து விடுவித்தனர். இச்சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. விடுவிக்கப்பட்டவர்களை தி.மு.க தலைவர் ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் பாரட்டினார்கள். இதைத்தொடர்ந்து தி.மு.க உட்பட பல்வேறு கட்சியினரும் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து கோலம் போட்டனர்.

இந்த நிலையில், கடந்த 1-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மாநகர ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், "காயத்ரி கந்தாடை பாகிஸ்தானில் செயல்படும் `பைட்ஸ் பார் ஆல்' என்ற அமைப்புடன் தொடர்பில் இருக்கிறார். அவருடைய முகநூலில் அதுபற்றிய தகவலைக் கொடுத்துள்ளார். அதனால் அவருடைய பின்புலம் பற்றி விசாரிக்கப்படும். அதுபோல அறப்போர் இயக்கத்துக்கும் தொடர்பு உள்ளது'' என்று கூறியிருந்தார்.

இது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மனித உரிமைக் காப்பாளர் கூட்டமைப்பின் தேசியச் செயலாளர் ஹென்றி திபேன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் மூத்த வழக்கறிஞர்கள் பிரபு ராஜதுரை, லஜபதிராய், அஜ்மல்கான் ஆகியோர் முன்னிலையில் மதுரையில் ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பில் காயத்ரி கந்தாடை கலந்துகொண்டார்.

நம்மிடம் தொடர்ந்து பேசிய ஹென்றி திபேன், "காயத்ரி கந்தாடை சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர். மனித உரிமை செயற்பாட்டாளர். எங்களுடன் பணியாற்றியவர். ஜெனிவாவிலுள்ள `ஃபோரம் ஏசியா' என்ற சர்வதேச மனித உரிமை அமைப்பில் பணியாற்றியவர். தற்போது ஏ.பி.சி-இல் (Association for progressive communication) பணியாற்றி வருகிறார். அதுபோல் காவல் ஆணையர் குற்றச்சாட்டாக கூறியுள்ள காயத்ரி தொடர்பில் உள்ளதாக சொல்லப்படும் `bytes for all' என்பது பாகிஸ்தானில் இயங்கிவரும் மனித உரிமை அமைப்பு. இது தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மனித உரிமை, ஜனநாயகம், சமூக நீதிக்காகவும், இணையத்தில் நடைபெற்று வரும் பாலின ரீதியான வன்முறைக்கு எதிராகவும், கருத்துச் சுதந்திரம் போன்றவற்றுக்காகவும் சர்வதேச அளவில் செயல்பட்டு வருகிறது. மனித உரிமைப்பணியில் நாங்கள் ஒரு வகையாக செயல்பட்டு வருகிறோம் என்றால், காயத்ரி இன்னொரு வகையில் நிபுணத்துவத்துடன் செயல்பட்டு வருகிறார்.

மனித உரிமைக் காப்பாளர் கூட்டமைப்பு
மனித உரிமைக் காப்பாளர் கூட்டமைப்பு
ஈ.ஜெ.நந்தகுமார்

இந்த `bytes for all' -ல் இணைந்து ஆசிய நாடுகளில் மத உரிமை, கருத்து சுதந்திரம் ஆகியவற்றை ஆய்வு செய்து அறிக்கைகள் வெளியிட்டிருந்தார். இதை முழுதாகப் படித்தால் பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தோனேசியா, மாலத்தீவு, மலேசியா போன்ற நாடுகளில் இஸ்லாம் அல்லாத சிறுபான்மை இன மக்கள் எந்தளவுக்கு துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்பதையும் குறிப்பிட்டிருப்பது தெரியவரும்.

இதைப்பற்றி முழுமையாக ஆராயாமல் பாகிஸ்தான் அமைப்போடு தொடர்பு உள்ளதுபோல் காவல்துறை ஆணையர் கூறியுள்ளது காயத்ரியை அச்சுறுத்தும் தொனியில் அமைந்துள்ளது. இது தொடர்பாக காயத்ரி மீது காவல்துறை நடவடிக்கை எடுத்தால், அது அரசியலைமைப்புச் சட்டப் பிரிவு 19-ல் உறுதியளிக்கப்பட்டுள்ள கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும். அது மட்டுமல்ல, காயத்ரியின் ஃபேஸ்புக் விவரங்களைச் செய்தியாளர் சந்திப்பில் அவர் காட்டியுள்ளது காயத்ரியின் அந்தரங்க உரிமையை அப்பட்டமாக மீறிய செயலாகும். இதுபோல் அரசின் பல்வேறு ஊழல்களை அம்பலப்படுத்திவரும் அறப்போர் இயக்கத்தின் மீதும் அவதூறான தகவலைக் கூறியுள்ளார்.

ஒரு மனித காப்பாளர் தேச எல்லைகள் கடந்து மற்ற மனித உரிமை அமைப்புகளோடு தொடர்புகொண்டு சட்டத்துக்கு உட்பட்டுச் செயல்படலாம். இந்தியா மற்றும் பாகிஸ்தான் பல்வேறு மனித உரிமை அமைப்புகளோடு இணைந்து செயல்பட்டு வருகின்றன. இது இரு நாடுகளுக்கு இடையே உறவை மேம்படுத்த உதவும். முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் இதுபோன்ற முயற்சியில் ஈடுபட்டார். வழக்கறிஞர்களுக்கே இந்த நிலையா என்று அதிர்ச்சியாக உள்ளது. இதை பார் கவுன்சில் விசாரிக்க வேண்டும். காவல்துறை ஆணையரின் இச்செயலை எங்கள் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. மனித உரிமைக் காப்பாளர் மீது களங்கம் கற்பிக்கப்படுகிறது என்றால் அதைப் பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம். ஐ.நா வரைக்கும் கொண்டு செல்வோம்'' என்றார்.

காயத்ரி கந்தாடை நம்மிடம், "சென்னையைச் சேர்ந்த நான் மனித உரிமை தளத்தில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். மக்கள் பிரச்னைக்காகப் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளிப்பதில்லை. இந்த நிலையில்தான் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மார்கழி மாதத்தில் கோலமிட முடிவு செய்தோம். கோலமிடுவது நம் கலாசார உரிமை. இதை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தினோம். பலரும் ஆதரவு தெரிவித்தார்கள். அப்போதிருந்து காவல்துறையினர் எங்களை பின் தொடரத் தொடங்கினார்கள். நாங்கள் அங்கு செல்வதற்கு முன்பே காவல்துறையினர் அங்கு குவியத் தொடங்கிவிட்டார்கள். பெசன்ட் நகர் பஸ் டெப்போ அருகில் கோலம் போட முயன்றபோது எங்களை அங்கிருந்து விரட்டினார்கள்.

மனித உரிமைக் காப்பாளர் கூட்டமைப்பு
மனித உரிமைக் காப்பாளர் கூட்டமைப்பு
ஈ.ஜெ.நந்தகுமார்

வீட்டில் உள்ளவர்கள் சம்மதத்துடன்தான் கோலமிட்டோம். யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. அதன் பிறகு எங்கள் ஒவ்வொருவரையும் கைது செய்து கொண்டு போனார்கள். எங்களுக்குச் சட்ட உதவி செய்ய வந்த வழக்கறிஞர்கள் மோகன், யோகேஸ்வரன், பவித்ரா ஆகியோரையும் கைது செய்தனர். சட்ட விரோதமாகக் காவலில் வைத்தார்கள். இப்போது என்னை பாகிஸ்தானோடு தொடர்புள்ளவர் என்று சித்திரிக்க, தவறான தகவலை காவல்துறை ஆணையர் பரப்புகிறார்.

கோலம் போட்டதற்காக புகார் தந்தவர் யார் என்று அப்போது கேட்டபோது அது அவர்களின் பிரைவசியைப் பாதிக்கும் என்று கூறியவர்கள், இப்போது என் ஃபேஸ்புக் தகவல்களை எடுத்து வெளியிட்டுள்ளார்கள். இது என்னுடைய பிரைவசியை பாதிக்காதா? நான் ஒரு வழக்கறிஞர். மனித உரிமைக் காப்பாளர். அதனால் என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பாகிஸ்தான், பர்மா, மலேசியா, பங்களாதேஷ் உட்பட ஆசிய நாடுகளில் மதரீதியாக கருத்துரிமை பற்றி எப்படியெல்லாம் சிதைக்கிறார்கள் என்று ஆய்வறிக்கை வெளியிட்டிருந்தேன். மத சிறுபான்மையினர், நாத்திகர்கள், மாற்று பாலினத்தவர் எப்படியெல்லாம் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்று 2015-ல் வெளியிட்டிருந்தேன். அனைத்தையும் படித்துப் பார்க்காமல் பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்ளதாக சொல்கிறார்கள்.

காயத்ரி கந்தாடை
காயத்ரி கந்தாடை
ஈ.ஜெ.நந்தகுமார்

பாகிஸ்தானில் இந்துக்கள் பாதிக்கப்படுவதைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதைப் படிக்காமல் என் மீது அவதூறு பரப்புகிறார். அதுபோல் கட்டாயப்படுத்தி கோலம் போட்டதாக 90 வயது பெரியவர் புகார் கொடுத்துள்ளதாக இப்போது கூறுகிறார்கள். எங்களால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லை. எங்களைப்போல் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கோலங்கள் போட்டுள்ளனர். அதையெல்லாம் காவல்துறை கண்டுகொள்ளவில்லை. எங்களை மட்டும் குறி வைத்திருக்கிறார்கள். அனைத்தையும் சட்டப்படி எதிர் கொள்வோம்" என்றார்.