தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

அன்பில் வாழ்ந்தேன் அர்த்தமுள்ள வாழ்க்கையை! - கீதா

கீதா
பிரீமியம் ஸ்டோரி
News
கீதா

உறுதிகொண்ட நெஞ்சினாய்

கணவரின் உயிரைக் காப்பாற்ற, தன் சிறுநீரகம் ஒன்றை தானம் கொடுத்தது, குழந்தைப்பேற்றைத் தவிர்த்தது, தனியாளாக உழைத்து கணவரைக் காப்பாற்றியது என கீதாவின் தியாகங்கள் நீள்கின்றன.

வாழ்வில் வீசிய பெரும் புயலையும், தன் மனத்திடத்தால் எதிர்கொண்டு, நம்பிக்கையுடன் 28 ஆண்டுகளாகப் பயணித்துக் கொண்டிருக்கிறார் இவர். கோயம்புத்தூரைச் சேர்ந்த கீதா பரமசிவத்தின் சிரிப்புக்குப் பின்னால் மறைந்திருக்கும் சோகங்கள் ஏராளம்.

``கோயம்புத்தூர் மாவட்டம் வடசித்தூர் கிராமம் என் பூர்வீகம். பத்தாவதுதான் படிச்சிருக்கேன். அப்பா பஞ்சாயத்துத் தலைவரா இருந்தார். நல்லா இருந்த குடும்பம் அப்பாவின் மறைவுக்குப் பிறகு ஏழ்மை நிலைக்குப் போயிடுச்சு. இதற்கிடையே, 1991-ம் ஆண்டு எனக்குக் கல்யாணமாச்சு. பொள்ளாச்சியைப் பூர்வீகமாகக்கொண்ட கணவர், பி.ஆர்.பி பிக்சர்ஸ் பெயர்ல கோயம்புத்தூர்ல இருந்தபடி சுற்றுவட்டார மூணு மாவட்ட தியேட்டர்களுக்குத் திரைப்படங்களை விநியோகம் செய்துட்டிருந்தார். அவருக்கு எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது. சினிமா விநியோகஸ்தரா, சின்ன வயசுல இருந்து நேரம் காலம் பார்க்காம, நல்ல உணவு, தூக்கம் இல்லாம குடும்பத்துக்காகக் கடுமையா உழைச்சிருக்கார்.

அதன் விளைவா, கல்யாணமான ஆறு மாதத்துலயே அவருக்கு உடல்நிலை சரியில்லாம போச்சு. நிறைய கனவுகளுடன் அடியெடுத்துவெச்ச என் கல்யாண வாழ்க்கையின் தொடக்கத்துலயே பெரிய சறுக்கல். 1994-ம் ஆண்டு அவருக்கு ரெண்டு கிட்னியும் செயலிழந்துடுச்சு. அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை நடந்துகிட்டிருந்துச்சு. சீக்கிரம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் கணவரின் உயிருக்கு ஆபத்தாகிடும்னு டாக்டர்கள் சொன்னாங்க. சொந்தங்கள் உட்பட யாருமே அவருக்கு கிட்னி தானம் செய்ய முன்வரலை” என்கிறவர், கணவரின் உயிரைக் காப்பாற்ற தானே சிறுநீரக தானம் செய்ய முன்வந்திருக்கிறார்.

கீதா
கீதா

``அந்தக் காலத்துல வாழ்க்கையே பெரிய போராட்டம்தான். இன்னொருத்தர் உதவியை எதிர்பார்த்தாலே அது யாசகம் கேட்கிற மாதிரிதான். அப்படித்தான் என் கணவருக்கு வைத்தியம் பார்த்து அவரை வாழ வெச்சேன். என்னைப்போல மடியேந்திய நிலை எந்தப் பெண்ணுக்கும் வரக் கூடாது. சொந்தங்கள், சினிமா விநியோகஸ்தர்கள்னு பலரின் உதவியால், சில ஆண்டுகள் வாழ்க்கையை நடத்தினோம். `கிட்னி தானம் செஞ்சா, சீக்கிரம் இறந்துடுவ. இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு நீயாச்சும் சந்தோஷமா இரு’ன்னுதான் பலரும் எனக்கு ஆலோசனை கொடுத்தாங்க. `என் கணவர்தான் முக்கியம்’னு அவருக்கு என் ஒரு கிட்னியை தானம் செஞ்சேன். அந்த நிலையில, குழந்தை இருந்தா அதுவும் நிறைய கஷ்டங்களை அனுபவிக்கணும். அதனால, பெரும் கலக்கத்துடன் குழந்தைப் பெத்துக்க வேண்டாம்னு முடிவு பண்ணினேன். 1999-ம் ஆண்டு அவருக்கு என் ஒரு கிட்னியை தானமா கொடுத்தேன்” என்று உருக்கமாகக் கூறுகிறார் கீதா. அறுவை சிகிச்சைக்குப் பிறகு இருவரும் மாதக்கணக்கில் ஓய்வில் இருந்துள்ளனர்.

என்னைப்போல மடியேந்திய நிலை எந்தப் பெண்ணுக்கும் வரக் கூடாது. `கிட்னி தானம் செஞ்சா, சீக்கிரம் இறந்துடுவ. இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு நீயாச்சும் சந்தோஷமா இரு’ன்னுதான் பலரும் எனக்கு ஆலோசனை கொடுத்தாங்க.

``உடல் சோர்வு தவிர, எனக்குப் பெரிசா எந்தப் பாதிப்பும் ஏற்படலை. ஆனா, என் கணவர் தொடர்ந்து மருத்து மாத்திரைகள் எடுத்துக்கிட்டார். அப்போ அவரோட மருத்துவச் செலவுக்கு மாதம் 25,000 ரூபாய் செலவாச்சு. ஒருகட்டத்துக்குமேல செலவுகளைச் சமாளிக்க முடியலை. அதனால, அரசு மருத்துவமனையில சிகிச்சை எடுத்துக்கிட்டார். அவரால வேலைக்குப் போகவும் முடியாத நிலை. வெளியுலகமே தெரியாம வளர்ந்த நான், குடும்பக் கஷ்டத்துக்கு பிரின்டிங் பிரஸ் வேலைக்குப் போனேன். கூடவே கரஸ்ல டிகிரி படிக்க ஆரம்பிச்சாலும், குடும்பச் சூழலால் படிப்பை முடிக்க முடியலை.

கீதா
கீதா

எங்க இருவருக்கும் குழந்தை உட்பட எல்லாமே நாங்களேதான். அவரை நல்லபடியா பார்த்துக்கிட்டேன். உப்பு, காரம், இனிப்பு, துவர்ப்பு உட்பட எந்தச் சுவையும் இல்லாத பத்திய உணவுதான் அவருக்கு. நீண்டகாலம் வாழணும்னு ஆசைப்பட்டார். அதனால, நான் சமையல் செய்தாலும்கூட, அடிக்கடி அவருக்கான பத்திய சாப்பாட்டை அவரே சமைச்சுப்பார். அதிகபட்சம் 10 வருஷம்தான் கணவர் உயிர்வாழ்வார்னு மருத்துவ வட்டாரத்துல சொன்னாங்க. ஆனா, அவரை 17 வருஷம் நல்லா பார்த்துக்கிட்டேன். குடும்பப் பெண்ணா, அந்த அன்பில் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்தேன். இந்த நிலையில உடல்நிலை சரியில்லாம, கடந்த 2016-ம் ஆண்டு அவர் உயிரிழந்துட்டார்” - அருகிலிருக்கும் கணவரின் புகைப்படத்தைப் பார்த்தபடியே சற்று இடைவெளி விடும் கீதாவின் கண்களில் நீர் பெருக்கெடுக் கிறது.

இடைப்பட்ட காலத்தில், சிறுநீரக தானம் செய்வது குறித்து பலருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்திய கீதா, ஏழு பேர் அவரவர் குடும்ப உறுப்பினருக்கு சிறுநீரக தானம் செய்யவும் காரணமாக இருந்திருக்கிறார். மூன்று ஆண்டுகளாகக் கணவரின் இறந்த தினம் மற்றும் திருமண நாளில், தன் வீட்டுக்கு அருகிலிருக்கும் காப்பகத்திலுள்ள நூற்றுக்கணக்கானோருக்கு ஒருவேளை உணவு கொடுத்து, அவர்களுடன் நேரம் செலவிடுகிறார்.

சற்றே ஆசுவாசமாகிறவர், ``ஒரு ரூபாய்னாலும், அதை நேர்மையான வழியிலதான் சம்பாதிப்பேன். இப்போ தனியார் நிறுவனத்துக்கு வேலைக்குப் போறேன். மாதம் 8,000 ரூபாய் சம்பளத்துலதான், தனியாளா நம்பிக்கையுடன் வாழ்க்கையை நடத்திட்டிருக்கேன். 20 வருஷமா ஒரு கிட்னியுடன்தான் வாழ்றேன்.

49 வயசாகிற நான், எந்த உடல்நலப் பிரச்னையும் இல்லாம ஆரோக்கியமாகத்தான் இருக்கேன். பத்தியச் சாப்பாடு இல்லாத, வழக்கமான உணவுகளையே சாப்பிடுறேன். கிட்னி தானம் செய்வதால் எந்தப் பிரச்னையும் வராது. அதுக்கு நானே உதாரணம். நம்ம குடும்பத்தில் யாருக்காச்சும் ரெண்டு கிட்னியும் செயலிழந்து விட்டால், நம் ஒரு கிட்னியை தானம் கொடுக்கலாம். அதன் மூலம், ஒருவரைக் கூடுதலா 10 - 15 வருஷங்கள் வாழ வைக்க முடியும். சமூக சேவை பணிகளுக்கு என்னைக் கூப்பிட்டா, கட்டாயம் என்னாலான சேவையைச் செய்வேன். இனி வாழும் காலத்துல இயன்ற உதவியைப் பிறருக்குச் செய்ய ஆவலுடன் காத்திருக்கேன்” - கீதாவின் உள்ளத்திலிருந்து வரும் வார்த்தைகள், அவர் முகத்தில் பிரகாசத்தை ஏற்படுத்துகிறது.