கட்டுரைகள்
Published:Updated:

செல்லூர் ராஜுவுக்கும் மனோபாலாவுக்கும் இருக்கும் ஒற்றுமை என்ன?

ரித்விகா
பிரீமியம் ஸ்டோரி
News
ரித்விகா

திருச்சிக்கு எக்ஸாம் எழுத வந்தாங்க, கரெக்டா?

“டிரைவிங்ல இருக்கேன்... எனக்குக் கேள்விகளை வாட்ஸப் பண்ணிடுங்க. பதில் அனுப்பிடுறேன்” என்ற ரித்விகாவிடம், “அதெல்லாம் போங்கு... உடனே பதில் சொல்லணும்” என்று கொஸ்டீன் கொக்கி போட்டோம்.

“பாலிட்டிக்ஸ்ல இருந்து கேட்டீங்கன்னா சரியா சொல்லிடுவேன். மத்த கேள்விகளுக்கு முடிஞ்சவரை ட்ரை பண்ணுறேன். நாம என்ன சொன்னாலும் ட்ரோல் பண்ணுற மக்கள்தான் ஜாஸ்தியா இருக்காங்க. பரவால்ல, அவங்க என்டர்டெய்ன்மென்ட் அது. பண்ணிட்டுப்போகட்டும்” என பதில்சொல்லத் தயாரானார் மதுவந்தி.

“அமைச்சர் அறிவாளியான்னு டெஸ்ட் பண்ணப்போறீங்க.. கேளுங்க தம்பி, இதுவரை தெரியலைன்னாலும் நீங்க கேக்கற கேள்விக்கான பதில்களை இனிமே தெரிஞ்சுக்குவேன்’’ என்றபடி கேள்விகளை எதிர்கொண்டார் அமைச்சர் செல்லூர் ராஜு.

“ஷூட்டிங் ஸ்பாட்ல இருக்கேன்... ஷாட்டுக்குக் கூப்பிடுறதுக்குள்ள கேள்வியைக் கேளுங்க... தெரிஞ்ச பதிலைச் சொல்றேன்” என்று முன்வந்தார் மனோபாலா.

மனோபாலா
மனோபாலா

இந்திய அணுசக்தித்துறை அமைச்சர் யார்?

சரியான பதில்: நரேந்திர மோடி

ரித்விகா: “ஐயோ... நிஜமா தெரியலைங்க... முதல் கேள்வியிலேயே அவுட்.”

மதுவந்தி: “அணுசக்தின்னா ‘அடாமிக்’ தானே? பிரதமர் கையிலதான் இருக்கும். முக்கியமான டிபார்ட்மென்ட் இல்லையா, அவர்கிட்டதான் இருக்கணும்.”

செல்லூர் ராஜு: “டெல்லியில கேக்கறீங்களா... அங்க அணுசக்திக்கு யாரு மந்திரின்னு எனக்கெப்படிய்யா தெரியும்? எங்க துறையுடன் சம்பந்தப்பட்டவர்ங்கிற முறையில மத்திய சர்க்கார்ல எனக்கு வேளாண் அமைச்சரை மட்டும்தான் தெரியும்யா.”

மனோபாலா: “என்னோட துறை சார்ந்த கேள்வியா இருந்தா நல்லாருக்கும். இதைப்பற்றி அணுசக்தித்துறையில இருக்குறவங்ககிட்டதான் கேட்கணும்.”

திருக்குறளில் முதல் குறள் தெரியும். 1330-வது குறள் என்ன?

சரியான பதில்: ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்.

ரித்விகா: “அகர முதல எழுத்தெல்லாம்...” என்று உற்சாகமாக ஆரம்பித்தவரை இடைமறித்து, “இது முதல் குறள்... கடைசிக் குறளைச் சொல்லுங்க” என்றோம். “சத்தியமா தெரியாது” என்று ஜகா வாங்கினார்.

மதுவந்தி: “ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கு இன்பம்

கூடி முயங்கப் பெறின்.

என்ன கரெக்டா? இப்பல்லாம் இன்டர்வியூஸ் கொடுக்கிறோம்... பேசிட்டிருக்கோம். அதனால முதல் குறள், கடைசிக் குறள்னு ‘லேண்ட் மார்க்’ குறள்களையெல்லாம் படிச்சு வெச்சிருக்கேன். இதோ இப்ப பயன்படுது பாருங்க‌...”

செல்லூர் ராஜு: “திடீர்னு வந்து கடைசிக்குறள் என்னன்னு கேக்கறீங்க. தெரியாததைத் தெரியாதுன்னு சொல்லிடறது நல்லதுன்னு நினைக்கிறேன். தெரியும்னு தப்புத் தப்பாச் சொல்றப்பதானே மீம்ஸ் போடுறாய்ங்க!”

மனோபாலா: “இதைப் பற்றி பாலசந்தர் சார் அல்லது சாலமன் பாப்பையா சார்கிட்டதான் கேட்கணும். ஏன்னா, அவங்களுக்குத்தான் திருக்குறள் பற்றி நல்லாத் தெரியும்.”

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு

சமீபத்தில் தேசியத் தேர்வாணயத்தின் தேர்வை எழுத வந்த நடிகை யார்?

சரியான பதில்: சாய் பல்லவி

ரித்விகா: “சாய் பல்லவி. திருச்சிக்கு எக்ஸாம் எழுத வந்தாங்க, கரெக்டா?”

மதுவந்தி: “சாய்பல்லவியா? அப்படித்தான் நினைக்கிறேன்.’’

செல்லூர் ராஜு: “நடிகை கவர்ன்மென்ட் வேலைக்குப் பரீட்சை எழுதறாங்களா... ஆச்சர்யமா இருக்கே!”

மனோபாலா: “பதில் தெரியும். ஆனா யார்னு ஞாபகம் வரலயே...”

மதுவந்தி
மதுவந்தி

இப்போது இந்தியாவின் ஜிடிபி சரிவு எவ்வளவு?

சரியான பதில்: -23.9

ரித்விகா: “ஜிடிபினா என்னன்னு முதல்ல சொல்லுங்க. இது உங்களுக்கே சரின்னு தோணுதா? என்னோட துறை சம்பந்தமா எதுவும் கேட்காம மத்ததெல்லாம் கேட்டு என்னை ஏன் இப்படி மாட்டிவிடுறீங்க?”

மதுவந்தி: “இப்ப இருக்கிற ஆவரேஜ்னு பார்த்தீங்கன்னா 23.3... இந்த நியூஸ்தானே இப்போ பெரிசா ஓடிட்டிருக்கு.

செல்லூர் ராஜு: “கொரோனாகூட மல்லுக்கட்டிட்டிருக்கோம் தம்பி. அடுத்த வாரம் அசம்பிளி வேற கூடப்போகுது. பல வேலைகளில் நியூஸ் பார்க்க நேரம் கிடைக்கறதில்லை. அதனால இந்தக் கேள்விக்கும் ‘தெரியாது’ங்கிறதுதான் என்னுடைய பதில், ஸாரி தம்பி!”

மனோபாலா: “தெரியலப்பா... மொத்தத்துல நான் வாங்கின மதிப்பெண் ஜீரோ.”

ரித்விகா
ரித்விகா

உலகளவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய டெஸ்ட் வேகப்பந்து வீச்சாளர் யார்?

சரியான பதில் : ஜேம்ஸ் ஆண்டர்சன்

ரித்விகா : “முத்தையா முரளிதரன்னு நினைக்கிறேன். இல்லேன்னா நம்ம வீரேந்திர சிங் சேவாக்...”

மதுவந்தி: “மேக்சிமம் விக்கெட் முத்தையா முரளிதரன் எடுத்திருப்பார்னு நினைக்கிறேன். என் பையனுக்குக் கம்பெனி தர்றதுக்காக கிரிக்கெட் பாப்பேன். அவ்ளோதான்...”

செல்லூர் ராஜு: “பேரு சட்டுனு ஞாபகம் வரமாட்டேங்குது. ஃபாஸ்ட் பௌலர். 600 விக்கெட் எடுத்தார்னு பேப்பர்ல படிச்சேன்யா...”

மனோபாலா: “பாத்தீங்களா... மறுபடியும் வேறு துறை சார்ந்த கேள்வி கேட்குறீங்க!”

என்ன மக்களே, மனோபாலாவுக்கும் செல்லூர் ராஜூவுக்கும் என்ன ஒற்றுமைன்னு கண்டு பிடிச்சீங்களா,ஆமாங்க, ரெண்டுபேருமே எந்தக் கேள்விக்கும் சரியான பதில் சொல்லலை.