சினிமா
தொடர்கள்
Published:Updated:

“பேய் வீட்டுக்கு கமிஷன் கிடையாது!”

ஜெய்முருகேஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெய்முருகேஷ்

எங்க தொழிலில் பல சிக்கல்களும் இருக்கு. குறிப்பா புருஷன் பொண்டாட்டின்னு வாடகை வீடு கேட்டு வருவாங்க.

அதிரடி போஸ்டர்களுக்குப் பெயர்போன மதுரைக்காரர்களையே ஓவர்டேக் செய்து அரட்டியுள்ளார் தேனிக்காரர் ஒருவர். ‘என்னாது பேய் வீடுகளுக்கு கமிஷன் முற்றிலும் இலவசமா?’ என மக்களைத் தெறிக்கவிடும் அளவுக்கு அச்சடிக்கப்பட்ட போஸ்டர்தான் சோஷியல் மீடியாவில் கடந்த வார வைரல் மேட்டர்.

அதென்ன வாடகைக்குப் பேய் வீடு என்பதை அறிய, தேனி பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த வீட்டு புரோக்கர் ஜெய்முருகேஷை சந்தித்துப் பேசினேன்.


“கவர்மென்ட் ஆபீஸருங்க முதல் சாதாரண தொழிலாளர்கள் வரை அவரவருக்கு ஏத்த வீடுகளைக் காட்டி கமிஷன் வாங்குறதுதான் என் தொழில். அப்பறம் வீட்டடி மனை, கட்டுன வீடுகளையும் வித்துக் கொடுத்துக்கிட்ருக்கேன். வீடு வாடகைக்குப் பிடிச்சுக் கொடுத்தவங்க வாழ்க்கையில நல்ல இடத்துக்கு வந்து சொந்த வீடு வாங்கவும் என்னிடமே வராங்க. அதுக்கு அவங்கட்ட எப்பவும் டச்ல இருக்குறதுதான் காரணம்.

ஜெய்முருகேஷ்
ஜெய்முருகேஷ்

எங்க தொழிலில் பல சிக்கல்களும் இருக்கு. குறிப்பா புருஷன் பொண்டாட்டின்னு வாடகை வீடு கேட்டு வருவாங்க. அவங்களுக்கு வீடு புடிச்சுக் கொடுத்தா கொஞ்ச நாளுல அவங்க புருஷன் பொண்டாட்டி இல்லைன்னு தெரியவந்து பிரச்னையாகி, போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போயிடும். வடநாட்டுக்காரங்களுக்கு வீடு புடிக்க போலீஸ்கிட்ட தகவல் சொல்லணும். ஒத்திக்கு வாங்கிட்டு உள்வாடகைக்கு விடும் குரூப்பெல்லாம் இருக்கு. கவனமா இல்லைன்னா சிக்கல்தான்.

நான் இந்தத் தொழிலுக்கு வந்து பெரிய சிக்கலாப் பாக்குறது ஒண்ணு தான். வீடு வாடகைக்கு எடுத்தவங்கள்ல ஒண்ணு ரெண்டு பேரு வாடகை வீடுன்னு பாக்காம அங்கயே உசுர மாச்சுக்குற சம்பவம் தொடருது. இப்படியாகும் வீடுகள பேய் வீடுன்னு ஊர்ல இருக்கிற நாலு பேரு போறபோக்குல கிளப்பிவிட்டுட்டுப் போயிடுவாங்க. அப்பறம் ஒரு வருஷம், ரெண்டு வருஷத்துக்கு அந்த வீட்டை வாடகைக்கு விடமுடியாத நெலம வந்துரும். வீட்டு ஓனருங்க நம்மகிட்ட புலம்புவாங்க.

“பேய் வீட்டுக்கு கமிஷன் கிடையாது!”

இப்படி தேனி டவுன்ல மட்டும் 12 வீடுங்க காலியா இருக்கு. அந்த வீடுகளை வாடகைக்கு விடறதுக்குத்தான் போஸ்டரு அடிக்கிற யோசனை வந்துச்சு. தற்கொலை நடந்த வீடு என்றாலும் சிலபேர் பயப்படாமக் குடியேறுவாங்க. அவங்களுக்காகத்தான் ‘பேய் வீடுகளுக்கு கமிஷன் கிடையாது’ன்னு போஸ்டரு அடிச்சேன். அது இப்படி வைரல் ஆகுமுன்னு நெனச்சுக்கூட பாக்கல.

ஊர்ல நாலு பேரு இந்தப் போஸ்டரு மேட்டர ஏதோ பெரிய குத்தம் மாதிரிப் பேசுறாங்க. அதனால இனிமே இப்படிச் செய்றதா இல்ல. ஆனா, இந்த போஸ்டரால நடந்த நல்ல விஷயம் என்னன்னா, பல வருஷமா சும்மா கிடந்த வீடுங்க 12 நாள்ல புக்காகிப் போச்சு.

சென்னைல, கோயம்புத்தூர்ல, மதுரைல புரோக்கர்கள்தான் வீட்டு வாடகை ஏறுறதுக்குக் காரணம்னு சொல்றாங்க. ஆனா தேனில அப்படியெல்லாம் இல்ல. அதேமாதிரி கவுச்சி சாப்புடுற வீடு, சாதி, மதம் பாக்குற ஆளுக தேனில இல்ல. என் தொழிலை விரும்பிச் செய்றேன். அதனால் நல்லா இருக்கேன்” என்கிறார்.