அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

‘மாஸ் கிட்னாப்’ - ஆட்டம் போடும் ஆடு திருடர்கள்... தூக்கம் இழந்த திருச்சி விவசாயிகள்!

ஆடுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆடுகள்

கிராமப்புறப் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் இல்லாதது, திருடிய உடனேயே ஆடுகளைக் கறிக்காக விற்பனை செய்துவிடுவது ஆகியவை இந்த ஆடு திருடும் கும்பலுக்கு வசதியாகிவிடுகின்றன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருச்சி நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய பூமிநாதன், ஆடு திருடும் கும்பலால் வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னரும் திருச்சியில் ஆடு திருடும் கும்பலின் அட்ராசிட்டி குறைந்தபாடில்லை. ஒன்றிரண்டு ஆடுகள் திருட்டுப்போய் வந்த நிலையில், ‘மாஸ் கிட்னாப்பிங்’ வகையில் கூட்டம் கூட்டமாக ஆடுகள் கடத்திச் செல்லப்படுவதால், திருச்சி விவசாயிகள் தூக்கம் இழந்து தவிக்கின்றனர்.

2022, ஜூன் மாதம் 10-ம் தேதியன்று, திருச்சி மாவட்டம், அழுந்தலைப்பூரில் ரெங்கராஜ் என்பவர் தன்னுடைய விவசாய நிலத்திலிருந்த ஆட்டுப்பட்டியில் ஆடுகளை அடைத்துவிட்டு வீட்டுக்கு வந்திருக்கிறார். அன்றிரவு ரெங்கராஜுக்கு உடல்நிலை சரியில்லாததால் இரவு காவலுக்குப் போக முடியவில்லை. மறுநாள் காலை ஆட்டுப் பட்டிக்குச் சென்று பார்த்தபோது, மொத்தமுள்ள 210 ஆடுகளும் திருட்டுப்போயிருந்தது கண்டு அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார். சுமார் 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆடுகள் திருட்டுப்போன இந்தச் சம்பவத்தில் குற்றவாளிகள் யாரும் இதுவரை பிடிபடவில்லை. இதையடுத்து, கடந்த நவம்பர் 22-ம் தேதி, திருச்சி சிறுகனூரில் ஆட்டுப்பட்டியில் காவலுக்கு இருந்த ராமர் என்ற விவசாயியை, கட்டிலோடு சேர்த்துக் கட்டிப்போட்டுவிட்டு, அவரது பட்டியிலிருந்த 30 ஆடுகளைத் திருடிச் சென்றிருக்கிறது ஆடு திருடும் கும்பல். என்ன நடந்தது என்பது குறித்து விசாரணையில் இறங்கினோம்.

‘மாஸ் கிட்னாப்’ - ஆட்டம் போடும் ஆடு திருடர்கள்... தூக்கம் இழந்த திருச்சி விவசாயிகள்!

சிறுகனூர் விவசாயி ராமர் பேசும்போது, “22-ம் தேதி ராத்திரி 12:30 மணி இருக்கும். ஏழெட்டுப் பேர் திபுதிபுனு பட்டிக்குள்ள நுழைஞ்சாங்க. ‘சத்தம் போடாம இருந்தா விட்டுடுவோம். இல்லைன்னா அறுத்துப் போட்டுட்டு போய்க்கிட்டே இருப்போம்னு’ சொல்லி, நான் படுத்திருந்த கட்டிலோட சேர்த்து என்னைய கட்டிப்போட்டுட்டாங்க. ரெண்டு மணி நேரம் இருக்கும். என் பட்டியில இருந்த 30 ஆடுகளை அவங்க வண்டியில ஏத்திக்கிட்டு போயிட்டாங்க. என்கிட்ட இருந்த செல்போன், டார்ச்லைட், பாக்கெட்ல இருந்த 110 ரூபாய் பணத்தையும் எடுத்துட்டுப் போயிட்டாங்க. கொஞ்சம் முரண்டு புடிச்சிருந்தா என்னைக் கொன்னு போட்ருப்பாங்க” என்றார் அதிர்ச்சி விலகாமல்.

210 ஆடுகளைப் பறிகொடுத்த அழுந்தலைப்பூரைச் சேர்ந்த ரெங்கராஜை சந்தித்தோம். “மெயின் ரோட்டுல இருந்து என்னோட ஆட்டுப் பட்டி 2 கி.மீ தூரத்துல இருக்கு. நடுவுல நாலு சக்கர வண்டி போக ரோடு வசதியில்லை. அப்படியிருந்தும் ராத்திரியோட ராத்திரியா 210 ஆடுகளையும் வயல் வழியா ஓட்டிட்டுப் போயி வண்டிவெச்சு திருடியிருக்காங்க. விசாரிச்சுப் பார்த்ததுல ராமநாதபுரம் பக்கத்துல ஆய்க்குடியில் எங்க ஆடு இருக்குறது தெரியவந்துச்சு. போலீஸ் மூலமா போராடி எட்டு ஆடுகளை மட்டும் மீட்டோம். ஆனா, ஆறு மாசமாகியும் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் இல்லை. முதலமைச்சர் வரைக்கும் மனு அனுப்பியும் வேலைக் காகலை. ‘புருஷனை வீட்ல தூங்க வெச்சுட்டு ஆட்டைக் காணாம்னு சொன்னா என்ன அர்த்தம்’னு என் மனைவிகிட்டே போலீஸ்காரம்மா கேக்குறாங்க. 20 லட்ச ரூபாய் ஆடு திருட்டு போனதுல எங்க வாழ்கையே போச்சு” என்றார் வேதனையுடன்.

ராமர், ரெங்கராஜ்
ராமர், ரெங்கராஜ்

விஷயமறிந்த போலீஸார் சிலரிடம் பேசினோம். “கிராமப்புறப் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் இல்லாதது, திருடிய உடனேயே ஆடுகளைக் கறிக்காக விற்பனை செய்துவிடுவது ஆகியவை இந்த ஆடு திருடும் கும்பலுக்கு வசதியாகிவிடுகின்றன. மேலும், ஆடுகள் காணாமல்போவது தொடர்பான எல்லாச் சம்பவங்களும் புகாராகப் பதிவாவதில்லை. அப்படியே புகார் தெரிவித்தாலும் காவல் நிலையங்களில் பெரும்பாலும் வழக்கு பதிவு செய்யப்படுவதில்லை. எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் கொலைக்குப் பிறகு, ஆடு திருடர்களைப் பிடிப்பதற்கு மத்திய மண்டல ஐஜி தனிப்படை ஒன்றை அமைத்தார். ஆனாலும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. முன்பு, பைக்கில் ஆடுகளைத் திருடிச் சென்றவர்கள் தற்போது கார், வேன் வைத்து தைரியமாக ஆடு கடத்தலில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி நெய்குளம் அருகே சோளமுத்து என்கிற விவசாயி ஆடு திருடும் கும்பலால் கொல்லப்பட்டார். எனினும், காவல்துறை இந்த விஷயத்தில் கால்நடை விவசாயிகளுக்குப் பெருமளவு ஒத்துழைப்பு அளிப்பதில்லை” என்றனர்.

தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சத்தியம் சரவணன், “ராமநாதபுரத்தில் ஆய்க்குடி கிராமத்தில் எட்டு ஆடுகளை நாங்களே கண்டுபிடித்ததோடு, காளிதாஸ் என்பவர்மீது புகாரளித்தோம். ஆனால், போலீஸார் அவர்மீது சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. திருச்சி மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் 500 ஆடுகள் திருட்டுப் போயிருக்கின்றன.” என்றார்.

சுஜித்குமார், சத்தியம் சரவணன்
சுஜித்குமார், சத்தியம் சரவணன்

சிறுகனூர் காவல் நிலைய ஆய்வாளர் சுமதியிடம் பேசினோம். “210 ஆடுகள் திருட்டுப்போனதாகச் சொல்லப்படும் விவகாரத்தில் சம்பந்தப்பட குடும்பத்தினர் பொய்யான கணக்கைச் சொல்கிறார்கள். இருந்தும் மூன்று பேரை இதுவரை கைது செய்திருக் கிறோம். நீதிமன்றத்தில் அவர்கள் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டியிருக்கிறார்கள். மற்ற புகார்களில் குற்றவாளிகளைத் தேடிக்கொண்டிருக் கிறோம். மேலும், விவசாயிகளுக் கிடையே நிலவும் பிரச்னைகள் காரணமாக, அவர்களுக் குள்ளேயே ஒருசிலர் ஆடு கடத்தல் கும்பலுக்குத் தகவலாளிகளாகச் செயல்படுகிறார்கள் எனச் சந்தேகிக்கிறோம்” என்றார்.

திருச்சி எஸ்.பி சுஜித்குமாரிடம் பேசும்போது, “ஒரு ஆடு திருட்டுப் போனால்கூட, வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கச் சொல்லியிருக்கிறேன். இதுவரை 100 முதல் 150 கால்நடைகளை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்திருக்கிறோம். இதற்காகவே இரவு ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்திவருகிறோம்” என்றார்.

எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் கொலைக்குப் பிறகாவது போலீஸார் அலர்ட்டாக இருக்க வேண்டாமா!