சினிமா
Published:Updated:

“காதல் பறைந்தோம்!”

கோகுல் - ஜோனா கலா
பிரீமியம் ஸ்டோரி
News
கோகுல் - ஜோனா கலா

ஆரம்பத்துல நாங்க நாலஞ்சு பேரு இயக்க விழாக்களுக்கு வாசிக்கப் போவோம். ஒரு கட்டத்துல நிறைய அழைப்புகள் வரத்தொடங்குச்சு.

“முரண்கள்லதான் தோழர் எங்க நட்பு தொடங்குச்சு... அவர் சார்ந்திருந்த அரசியலும் என் அரசியலும் வேற வேற. ஆனா, இலக்கும் நோக்கமும் ஒண்ணுதானே. தர்க்கங்கள், விவாதங்களுக்கு மத்தியில ஒரு டீக்கடையில வச்சு கோகுல்கிட்ட ‘நாம திருமணம் செஞ்சுக்கலாமா’ன்னு கேட்டேன். நல்லா யோசிச்சுட்டு ஒரு மாதம் கழிச்சு, ‘செஞ்சுக்கலாம்’ன்னு சொன்னார். ரொம்பத் தோழமையா கரத்தைப் புடிச்சுக்கிட்டு பயணிச்சுக்கிட்டிருக்கோம்...” ஜோனா கலா உற்சாகமாகத் தொடங்குகிறார்.

கோகுல் வடசென்னைக்காரர். கலாவுக்கு நாகர்கோவில். இருவரையும் இணைத்தது பறை. இருவரும் பறைப் பயிற்சி முகாம் ஒன்றில்தான் சந்தித்தார்கள். ஐந்தாண்டுக் கால நட்பு காதலாய் முகிழ்ந்து திருமணத்தில் முடிந்தது. இருவரும் நண்பர்களை இணைத்துக்கொண்டு நடத்துகிற ‘மையம்’ கலைக்குழு, தமிழகம் கடந்தும் தமிழ்க்கலையைப் பரப்புகிறது. நிகழ்ச்சிகள் வழி கிடைக்கும் வருமானத்தில் எளிய குடும்பத்துப் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறது ‘மையம்’ கலைக்குழு. வியாசர்பாடியில் இவர்கள் நடத்துகிற மையம் நூலகம் பல அரிய நூல்களைக் கொண்டிருக்கிறது. அப்பகுதி பிள்ளைகளுக்காக இரவுப்பள்ளி ஒன்றையும் நடத்துகிறார்கள்.

“காதல் பறைந்தோம்!”

“வியாசர்பாடிதான் நம்ம ஏரியா. சின்ன வயசுலயே அரசியல், வாசிப்புன்னு தொடர்புகள் கிடைச்சுச்சு. பொறியியல் முடிச்சதும் ஒரு மென்பொருள் நிறுவனத்தில டீம் லீடரா வேலைக்குச் சேர்ந்தேன். அரசியல் செயல்பாடுகள்லயும் இணைஞ்சிருந்தேன். எனக்கு சின்ன வயசிலிருந்தே பறை மேல ஈர்ப்பு உண்டு. பறையிசை மனசுல இருக்கிற எல்லா தாங்கல்களையும் உடைச்சு நொறுக்கி புது சக்தியைக் கொடுக்கிற மாதிரியிருக்கும். சரியான நேரத்துல புத்தா கலைக்குழு, பறை இசைப் பயிற்சியைத் தொடங்கினாங்க. முதல் மூன்றுநாள் பயிற்சிமுகாம் வேடந்தாங்கல்ல நடந்துச்சு. அங்குதான் கலாவைப் பாத்தேன். ரொம்ப ஆத்மார்த்தமான தோழமையா இருந்தாங்க. நிறைய அரசியல் பேசினோம். ஆழமான அரசியல் தெளிவோட இருந்தாங்க. மரியாதையும் அன்புமா அவங்ககூட உரையாடினது வித்தியாசமான உணர்வா இருந்துச்சு...” என்கிறார் கோகுல்.

“நான் அப்போ ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில மருத்துவ உளவியல் படிச்சுக்கிட்டிருந்தேன். பெசன்ட் நகர் பயிற்சிக்குப்போக என்கிட்ட வாகனம் கிடையாது. வியாசர்பாடியில இருந்து கோகுல் போறப்போ அவரோட பைக்ல போவேன். அப்போ நான் ஒரு தீவிர இடதுசாரி அமைப்புல இருந்தேன். கோகுல் மே 17 இயக்கத்துல இருந்தார். ரெண்டு பேருக்கும் கருத்து முரண் இருக்கும். ஆனா, நெருக்கமா இருக்கவங்ககிட்டதானே முரண்கள் வரும். அன்னியோன்யமா, அக்கறையா, பொறுப்பா, மரியாதையா நடந்துக்கிற கோகுலையும் அவரோட பைக்கையும் கெட்டியாப் பிடிச்சுக்கிட்டேன்.

“காதல் பறைந்தோம்!”

வழக்கமா ஒரு கடையில டீ சாப்பிடுவோம். டீ குடிச்சுக்கிட்டே நேரடியா ‘நாம திருமணம் பண்ணிக்கலாமா’ன்னு கேட்டேன். ‘நிறைய விஷயங்கள் இருக்கு. யோசிக்க அவகாசம் வேணும். நிதானமா இது பத்திப் பேசுவோம்’ன்னு சொன்னார். அதோட இந்த விஷயத்தை விட்டுட்டு வேற பேச ஆரம்பிச்சுட்டோம். நிதானமா வீட்டுல பேசினோம். ரெண்டு குடும்பமும் எங்களை முழுமையா ஏத்துக்குச்சு...” என்கிறார் கலா.

“ஆரம்பத்துல நாங்க நாலஞ்சு பேரு இயக்க விழாக்களுக்கு வாசிக்கப் போவோம். ஒரு கட்டத்துல நிறைய அழைப்புகள் வரத்தொடங்குச்சு. கூட இருந்த நண்பர்களையெல்லாம் ஒருங்கிணைச்சு முழுமையான ஒரு கலைக்குழுவை உருவாக்கினோம். ஆனாலும் யாருக்கும் இது முழுநேரப் பணி இல்லை. வேற வேற துறைகள்ல வேலை செஞ்சுக்கிட்டே ஆத்மார்த்தமா பறையிசைக்கிறோம். 25க்கும் மேற்பட்டவர்கள் இப்போ குழுவுல இருக்காங்க. அரசியல், சமூக விழாக்களுக்குப் பணம் வாங்கமாட்டோம். திருவிழாக்கள், கார்ப்பரேட் விழாக்களுக்கு கணிசமா பணம் வாங்குவோம். இதன்மூலம் கிடைக்கிற பணத்தை வச்சு ஏதாவது நல்ல விஷயம் செய்யனும்னு ஆசைப்பட்டோம். பல தலைமுறைகளாக கீழ்ப்படியிலயே இருக்கிற பிள்ளைகளோட வாழ்க்கை கல்வியாலதான் மாறும். அதுசார்ந்து ஏதாவது செய்யலாம்னு முடிவெடுத்தோம். அப்படியே அந்தத் தொகையை வங்கியில சேமிச்சு, கல்வி உதவித்தொகையா வழங்குறோம். அதுதவிர, பள்ளிப் பிள்ளைகளுக்கு வீதி நாடகம், பறையிசைப் பயிற்சி கொடுக்கிறோம். நூலகத்துக்கும் நாங்க நடத்துற இரவுப்பள்ளிக்கும் நிறைய குழந்தைகள் வராங்க...”

ஒரே குரலில் சொல்கிறார்கள் கலாவும் கோகுலும்!