அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

பிறழ் சாட்சியான சுவாதி... உஷ்ணமான உயர் நீதிமன்றம்... மீண்டும் பரபரக்கும் கோகுல்ராஜ் கொலை வழக்கு!

யுவராஜ்
பிரீமியம் ஸ்டோரி
News
யுவராஜ்

நீதிமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்துவிட்டு உண்மையைக் கூறாமல், தவறான தகவல்களைக் கொடுத்திருக்கிறார் சுவாதி.

தமிழகத்தையே பதைபதைக்கவைத்த கோகுல்ராஜ் கொலை வழக்கு, மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது!

சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பட்டியல் சமூக இளைஞரான கோகுல்ராஜும், நாமக்கல்லைச் சேர்ந்த சுவாதியும் கடந்த23-06-2015 அன்று திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு கும்பல் இருவரின் சாதி மற்றும் முகவரியை விசாரித்துவிட்டு, சுவாதியை மட்டும் வீட்டுக்கு அனுப்பிவைத்திருக்கிறது. மறுநாள் கோகுல்ராஜ் கொலைசெய்யப்பட்ட நிலையில், அவரது உடல் தொட்டிப்பாளையம் தண்டவாளத்தில் தலை வேறு, உடல் வேறாகக் கிடந்தது.

பிறழ் சாட்சியான சுவாதி... உஷ்ணமான உயர் நீதிமன்றம்... மீண்டும் பரபரக்கும் கோகுல்ராஜ் கொலை வழக்கு!

தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த வழக்கு மதுரையிலுள்ள தீண்டாமை வன்கொடுமைத் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. குற்றவாளிகளான ‘தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர்’ யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு சாகும்வரை சிறைத் தண்டனையுடன்கூடிய ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த நிலையில், தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்றுவரும் வழக்கு விசாரணையில் முக்கிய சாட்சியான சுவாதி பிறழ் சாட்சியாகி, ‘‘கோகுல்ராஜை யாரென்றே தெரியாது. கோயிலில் எடுக்கப்பட்டிருக்கும் வீடியோவில் இருப்பது நானல்ல’’ என்று கூறியிருப்பது நீதிமன்றத் தரப்பை உஷ்ணமாக்கியுள்ளது.

கடந்த 30-11-2022 அன்று நடைபெற்ற விசாரணையின்போதும், ‘‘ஏற்கெனவே நான் கூறியுள்ள வாக்குமூலத்தில் உறுதியாக இருக்கிறேன்’’ என சுவாதி கூறவும் கோபமடைந்த நீதிபதிகள், ‘‘நீதிமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்துவிட்டு உண்மையைக் கூறாமல், தவறான தகவல்களைக் கொடுத்திருக்கிறார் சுவாதி. முக்கிய வழக்குகளில் இது போன்ற பிறழ் சாட்சிகளால் குற்றவாளிகள் விடுதலையாகிவிடுகின்றனர். சுவாதி ஒன்றும் கல்வியறிவற்றவர் இல்லை, பி.இ படித்தவர். போதிய வாய்ப்பளித்தும் அவரது நடவடிக்கை நீதிமன்றத்தைக் கேலிக்கூத்தாக்கும் வகையில் அமைந்திருக்கிறது. இந்த வழக்கைப் பொறுத்தவரை நீதிமன்றத்தில் தவறான தகவலை அளித்ததற்கான முகாந்திரம் இருப்பதால், சுவாதி மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படுகிறது’’ என்று கூறி சுவாதி விளக்கமளிக்க இரண்டு வாரத்துக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

பிறழ் சாட்சியான சுவாதி... உஷ்ணமான உயர் நீதிமன்றம்... மீண்டும் பரபரக்கும் கோகுல்ராஜ் கொலை வழக்கு!

இந்த நிலையில், கோகுல்ராஜ் தரப்பு மூத்த வழக்கறிஞரான ப.பா.மோகனிடம் பேசியபோது, ‘‘கோகுல்ராஜ் கொல்லப்பட்ட சம்பவத்தில், முக்கிய சாட்சியான சுவாதி, பிறழ் சாட்சியானதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளவே நீதிபதிகள் இந்த விசாரணையை நடத்தியிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. சமகாலத்தில் பிறழ் சாட்சியிடம் இப்படியொரு விசாரணை நடப்பது அரிதானது. இது பிறழ் சாட்சியாக மாறுகிறவர்களுக்கு ஒரு பாடமாகும். பிறழ் சாட்சிகளுக்கு சட்டப்படி தண்டனை உண்டு. பொறுத்திருந்து பார்ப்போம்’’ என்றார்.