திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் தங்கக் கடத்தல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகமாகிவருகின்றன. குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளிலிருந்து திருச்சி விமான நிலையம் வழியாக எக்கச்சக்கமாகக் கடத்தல் தங்கம் இறங்குகிறது எனக் கூறப்படுகிறது. தங்கக் கடத்தல் தொடர்பாக கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், அவ்வப்போது வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்வதும், அவர்களிடம் தங்கக் கடத்தல் நபர்கள் சிக்குவதும் வாடிக்கையாகிவிட்டது. எப்படி தங்கம் கடத்திவரப்பட்டாலும், அவை அதிகாரிகளிடம் பிடிபட்டு விடுகின்றன.
அந்தவகையில், துபாயிலிருந்து ஏர் இந்தியா விமானம் நேற்று திருச்சிக்கு வந்தது. வழக்கம்போல விமான நிலையத்தில் வந்திறங்கிய பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்திருக்கின்றனர். அப்போது சந்தேகத்துக்கிடமான ஆண் பயணி ஒருவரை விமான நிலைய அதிகாரிகள் தனியே அழைத்துச் சென்று சோதனை செய்திருக்கின்றனர். அப்போது, அவர் கொண்டுவந்திருந்த லக்கேஜில் மூன்று சாக்லேட் பவுடர் டப்பாக்கள் சந்தேகப்படும்படியாக இருந்திருக்கிறது. அதைத் திறந்து அதிகாரிகள் ஆய்வுசெய்ய, சாக்லேட் பவுடருடன் 211 கிராம் தங்கத்தையும் பவுடராக்கி கலந்துவைத்து கடத்திவந்தது தெரியவந்திருக்கிறது. மேலும், அவரிடமிருந்து 175 கிராம் எடையுள்ள தங்கச் செயினும் பிடிபட்டிருக்கிறது. அதையடுத்து, ரூ.21,55,038 மதிப்பிலான 386 கிராம் தங்கத்தை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல்செய்தனர். மேலும், இந்தத் தங்கக் கடத்தல் விவகாரம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதற்கிடையே, திருச்சியிலிருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தின் மூலமாக சிங்கப்பூருக்குச் செல்லும் பயணிகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்திருக்கின்றனர். அப்போது, ஆண் பயணி ஒருவர் சந்தேகப்படும்படியாக இருந்திருக்கிறார். அவரை அதிகாரிகள் தனியே அழைத்துச் சென்று சோதனை செய்திருக்கின்றனர். அப்போது அவரிடமிருந்த லேப்டாக் பேக்கில் 80,000 அமெரிக்க டாலர்களும், 10,000 யூரோக்களும் கத்தை கத்தையாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதையடுத்து, கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் 74 லட்ச ரூபாய் மதிப்பிலான அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்த விமான நிலைய அதிகாரிகள், அந்தப் பணம் எதற்காக, யாருக்காக, எடுத்துச் செல்லப்பட இருந்தது என்பது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.