
திருட்டுப்போனது 206 கிராம் தங்கம்... திரும்ப வந்தது 5 கிராம் மட்டுமே!
பெங்களூரில் வசிக்கும் ரஜினியின் அக்காள் மகன் வீட்டில் புகுந்த திருடர்கள், பீரோவை உடைத்து 206 கிராம் தங்க நகைகள் மற்றும் 12 லட்சத்து 50 ரூபாய் ரொக்கத்தைக் கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள். சுமார் மூன்று மாதங்கள் கழித்து திருடர்கள் கைது
செய்யப்பட்டாலும், சொற்ப நகை மற்றும் பணத்தை மட்டுமே மீட்டுக் கொடுத்திருக்கிறது பெங்களூரு போலீஸ். இதையடுத்து, காவல் நிலையத்துக்கும் வீட்டுக்கும் நடையாக நடந்து கொண்டிருக்கிறார் ரஜினியின் அக்காள் மகன்!
கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே சோமனஹள்ளி பகுதியில் வசிப்பவர், நாகராஜ் ராவ். மோட்டார் மெக்கானிக் கடை நடத்திவரும் இவர், நடிகர் ரஜினிகாந்தின் உறவினர். கடந்த 2021, நவம்பர் 7-ம் தேதி இவரது வீட்டில் புகுந்த திருடர்கள் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றார்கள். இது குறித்து நம்மிடம் பேசிய நாகராஜ் ராவ், “நடிகர் ரஜினிகாந்த், என் அம்மா கமலாபாயின் உடன்பிறந்த தம்பி. அதாவது, எனக்குத் தாய் மாமன் உறவுமுறை. கிருஷ்ணகிரி அருகே ரஜினிகாந்த்தின் சொந்த கிராமத்திலுள்ள, அவரது அறக்கட்டளைப் பணிகளையும் நான்தான் கவனித்துவருகிறேன். ரஜினிகாந்த் பெங்களூரு வரும்போது அவரைச் சந்தித்துப் பேசுவேன். மற்ற நேரங்களில் அவரை நாங்கள் தொந்தரவு செய்வதில்லை.
கடந்த 2021, நவம்பர் 7-ம் தேதி நள்ளிரவு 12:30 மணிக்கு எனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. பதறிப்போன என் மனைவியும் மகனும் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிகிச்சை முடிந்து அதிகாலை 4:30 மணிக்கு வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தோம். உள்ளே சென்று பார்த்தால், பீரோவும் உடைக்கப்பட்டு, அதிலிருந்த 206 கிராம் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இரண்டு நெக்லெஸ், இரண்டு செயின், சாமி படம் போட்ட ஒரு டாலர், ஒரு பிரேஸ்லெட், மூன்று மோதிரங்கள் எனச் சுமார் ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் அவை. தவிர, 12 லட்சத்து 50 ரூபாய் பணத்தையும், வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த பைக்கையும் கொள்ளையடித்துச் சென்றுவிட்டார்கள்.
இது குறித்து பெங்களூரு கக்கப்புரா காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். கடந்த மார்ச் மாத இறுதியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, எனது பைக்கை ஓட்டி வந்த இருவர் பிடிபட்டிருக்கிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்த அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், என் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இதையடுத்து, அவர்களிடமிருந்து எனது நகை மற்றும் பணத்தை போலீஸார் மீட்டுக்கொடுத்துவிடுவார்கள் என்று நம்பிக்கையோடு காத்திருந்தேன். ஆனால், போலீஸார் எனக்கு ஐந்து கிராம் சாமி டாலரை மட்டுமே திருப்பிக் கொடுத்தார்கள். பணம் 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் திருடப்பட்ட நிலையில், ஒரு லட்சத்து இரண்டாயிரம் ரூபாயை மட்டுமே திருப்பிக் கொடுத்தார்கள். பைக்கையும் கொடுத்துவிட்டார்கள். ஆனால், இவற்றை நான் பெறுவதற்கே 43 ஆயிரம் ரூபாய் செலவாகிவிட்டது. மீதி நகைகளையும் பணத்தையும் கேட்டால், ‘தமிழக போலீஸார் இதை மட்டுமே ரெகவரி செய்து கொடுத்தார்கள்’ என்று கர்நாடக போலீஸார் சொல்கிறார்கள்.

எனது நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டது கர்நாடகா போலீஸா... இல்லை தமிழக போலீஸா என்று எனக்குத் தெரியவில்லை. எனது வீட்டில் திருடியதாகக் கைதுசெய்யப்பட்ட கிருஷ்ணகிரியைச் சேர்ந்த லஷ்மணன், நாகேஷ் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். மொத்தத்தில் திருடர்களே என் நகையையும் பணத்தையும் செலவழித்துவிட்டார்களா, போலீஸ் எடுத்துக்கொண்டதா என்று தெரியவில்லை. இன்னமும் காவல் நிலையத்துக்கும் வீட்டுக்கும் நடையாக நடந்துகொண்டிருக்கிறேன்” என்றார் வருத்தத்துடன்.
இது பற்றி கக்கப்புரா காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு பேசியபோது, “லஷ்மணன், நாகேஷ் இருவரிடமிருந்த நகை, பணம், பைக் ஆகியவற்றைக் கைப்பற்றி, உரியவரிடம் ஒப்படைத்துவிட்டோம். மீதமுள்ள நகை, பணத்தைக் கைப்பற்றவும் நடவடிக்கை எடுத்துவருகிறோம்” என்றார்கள் சுருக்கமாக. கிருஷ்ணகிரி போலீஸ் வட்டாரத்தில் பேசியபோது, “தமிழக போலீஸாருக்கும், இந்த விவகாரத்துக்கும் சம்பந்தம் கிடையாது. கர்நாடக போலீஸார், திருடர்கள் இருவரையும் கிருஷ்ணகிரிக்கு அழைத்துவந்து சில நகைக் கடைகளுக்குச் சென்று விசாரித்தார்கள். அங்கிருந்து நகைகள் எவ்வளவு மீட்கப்பட்டன என்று தெரியவில்லை. அதேசமயம், திருட்டு நடந்த நான்கு மாதங்கள் கழித்தே கொள்ளையர்கள் பிடிபட்டிருப்பதால் 12.5 லட்சம் ரூபாயை அவர்கள் செலவழித்திருக்க வாய்ப்பு இருக்கிறது” என்றார்கள்.
முதலை வாய்க்குள் சென்றது முழுமையாக வெளியே வராது என்பார்கள்... வந்தால் லாபம்!