Published:Updated:

'ஆவினில் 236 பேர் பணிநீக்கம்' - அதிமுக நியமனங்களில் திமுக அரசின் களையெடுப்பு தொடருமா?!

ஆவின்

ஆவினில் விதிமுறைகளை மீறிப் பணியில் சேர்ந்ததாக 236 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதையடுத்து அதிமுக ஆட்சிக்கால நியமனங்களில் திமுக அரசின் களையெடுப்பு தொடருமா என்ற கேள்வி எழுகிறது.

'ஆவினில் 236 பேர் பணிநீக்கம்' - அதிமுக நியமனங்களில் திமுக அரசின் களையெடுப்பு தொடருமா?!

ஆவினில் விதிமுறைகளை மீறிப் பணியில் சேர்ந்ததாக 236 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதையடுத்து அதிமுக ஆட்சிக்கால நியமனங்களில் திமுக அரசின் களையெடுப்பு தொடருமா என்ற கேள்வி எழுகிறது.

Published:Updated:
ஆவின்

சென்னையில் ஆவின் தலைமை அலுவலகம் இருக்கிறது. இதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, நாமக்கல், விருதுநகர், தேனி ஆகிய இடங்களில் பால் உற்பத்தியாளர் ஒன்றியங்கள் அமைந்திருக்கின்றன. இங்கு கடந்த 2020-2021-ம் காலகட்டத்தில் மேலாளர்கள் (கணக்கு, விவசாயம், பொறியியல், தீவனம், பால்பண்ணை மற்றும் தரக்கட்டுப்பாடு), துணை மேலாளர்கள் (கணினி, பால்வளம் மற்றும் சிவில்), தொழில்நுட்பவியலாளர்கள் (குளிர்பதனம் மற்றும் கொதிகலன்), நிர்வாக, இளநிலைப் பொறியாளர், தொழிற்சாலை உதவியாளர்கள், ஓட்டுநர்கள் பணியிடங்களுக்கு 236 பேர் நேரடியாகப் பணியில் அமர்த்தப்பட்டனர்.

ஆவின் பால்
ஆவின் பால்

இந்த நிலையில், இந்தப் பணியிடங்களில் தகுதியில்லாத பலரும் நியமனம் செய்யப்பட்டு, விதிகளை மீறி வேலை வழங்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து 2021 ஜூலையில், அப்போதைய ஆவின் நிர்வாக இயக்குநர் கே.எஸ்.கந்தசாமி தலைமையிலான குழுவினர், பணி நியமன முறைகேடு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். இதில், விதிகளை மீறி ஆள்சேர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதும், மேலாளர், துணை மேலாளர் பணியிடங்கள் சட்டத் தகுதியின்றி, மாவட்ட தொழிற்சங்கங்கள் மூலம் நேரடியாக நிரப்பப்பட்டதும் தெரியவந்தது.

மேலும் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகத்தின் மூலமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது முறைகேடாக பணியில் சேர்ந்த அனைவரும் ரூ.10 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து இவ்வாறு விதிமுறைகளை மீறிப் பணியில் சேர்ந்ததாக, மேலாளர்கள், துணை மேலாளர்கள் உள்ளிட்ட 236 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இவர்களில் 43 பேர் மேலாளர்கள் மற்றும் துணை மேலாளர்கள். மேலும் விருதுநகர், தேனி, திருப்பூர் மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களின் நிர்வாகக்குழுக்களைக் கலைத்தும், கல்விச் சான்றிதழ் சமர்ப்பிக்காத திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் சங்க செயல் அலுவலர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் ஆவின் நிர்வாகம் பரிந்துரை செய்திருக்கிறது.

அதிமுக சின்னம்
அதிமுக சின்னம்

மேலும் விருதுநகர், திருச்சி, நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் பணிபுரியும் ஆறு அதிகாரிகளிடமிருந்து ரூ.2.47 லட்சம் தண்ட வசூல் செய்யவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதற்கான உத்தரவை ஆவின் நிர்வாக இயக்குநர் ந.சுப்பையன் பிறப்பித்திருக்கிறார். இதேபோல் பல்வேறு அரசு அலுவலகங்களில் முறைகேடாகப் பணியில் பலர் சேர்த்திருப்பதாகக் குற்றச்சாட்டு தொடர்ந்து நிலவிவருகிறது. எனவே, ஆவினில் நடந்ததுபோல் அதிமுக ஆட்சிக்கால நியமனங்களில் திமுக அரசின் களையெடுப்பு தொடருமா என்ற கேள்வி எழுகிறது.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், "எங்களது களையெடுப்பு அனைத்துத் துறைகளிலும் தொடரும். அதிமுக ஆட்சிக்காலத்தில் கடைசி ஆறு மாத காலத்தில் ஆவின், சுகாதாரத்துறை, கல்வி, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட ஆறு துறைகளில் முறைகேடு நடந்திருப்பதாக எங்களுக்குப் புகார் வந்திருக்கிறது. இதையடுத்து சம்பந்தப்பட்ட துறைகளில் பணியில் சேர்ந்தவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு, உண்மைத்தன்மை கண்டறியும் பணி நடந்துவருகிறது. இதில் யாரெல்லாம் புறவாசல் வழியாகவும், முறைகேடாகவும் வந்திருக்கிறார்களோ அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.