நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் அருகேயுள்ள கரப்பாளையத்தைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவர், கடந்த மார்ச் 11-ம் தேதி அருகிலுள்ள வயல்வெளியில் ஆடு மேய்க்கச் சென்றபோது, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலைசெய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கை விசாரித்த ஜேடர்பாளையம் காவல் நிலைய போலீஸார், 17 வயது சிறுவன் ஒருவனைக் கைதுசெய்தனர். இந்த நிலையில், "இந்தக் கொலையில், அருகிலுள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலையில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள் இருவருக்கு தொடர்புள்ளது" என்று கொலைசெய்யப்பட்ட பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில், இந்த விவகாரத்தை சிலர் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரப்ப, அதனைத் தொடர்ந்தே அடுத்தடுத்து வடமாநிலத் தொழிலாளர்கள் பணிபுரியும் வெல்லம் தயாரிக்கும் ஆலைகள், தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசைகளை மர்மநபர்கள் தீவைத்துக் கொளுத்திய சம்பவங்கள் அரங்கேறியதாகச் சொல்லப்பட்டது. முதல் சம்பவமாக, மர்மநபர்கள் சிலர், இதே சரளைமேடு பகுதியிலுள்ள சக்திவேல் என்பவருக்குச் சொந்தமான வெல்லம் தயாரிக்கும் ஆலையில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் குடிசைக்குத் தீவைத்தனர்.
அதேபோல், புதுப்பாளையத்தைச் சேர்ந்த சதாசிவம் என்பவருக்குச் சொந்தமான ஆலையில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசைக்குத் தீவைத்தனர். இதில் ஈடுபட்டதாக பிரகாஷ் உள்ளிட்ட 6 பேரைக் கைதுசெய்தனர். தொடர்ந்து, இதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் துரைசாமி என்பவரது வெல்ல ஆலை குடிசைக்கும் தீவைக்கப்பட்டது. இதில், குடிசையும், மூன்று டிராக்டர்களும் எரிந்து நாசமாகின. நல்லூர் சாலையில் குடியிருக்கும் பழனிசாமி என்பவரது கூரை வீடும், மர்மநபர்களால் தீக்கிரையானது. இதற்கிடையில், வடமாநிலத் தொழிலாளர்களை அதிக அளவில் வேலைக்கு வைத்திருப்பது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் ஒரு பிரிவினர்தான் என, அதே சமூகத்தைச் சேர்ந்த மற்றொரு பிரிவைச் சேர்ந்தவர்கள் கோபமாக இருப்பதை போலீஸார் கண்டறிந்தனர்.
அதனால்தான், வடமாநிலத் தொழிலாளர்களைப் பணிக்கு வைத்திருக்கும் அந்தச் சமூத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் ஆலைகளை மர்மநபர்கள் தீவைத்து கொளுத்துவதை, போலீஸார் தங்கள் விசாரணையில் உறுதி செய்தனர். இரு சமூகத்தினர், வடமாநிலத் தொழிலாளர்கள் என்று முக்கோண மோதலாக இந்த விவகாரம் மாறுவதை தடுக்க, இரு சமூக மக்களையும் அழைத்து, அப்போதைய நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங்கும், மாவட்ட எஸ்.பி கலைச்செல்வனும் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், தொடர் தீவைப்புச் சம்பவங்கள் குறையவில்லை. கடந்த வாரத்தில் ஜேடர்பாளையம் பகுதியிலுள்ள தனியார் பள்ளி வாகனத்துக்கு தீவைத்ததில், வாகனம் எரிந்து சேதமானது. தொடர்ந்து, பள்ளாபாளையத்தில் 88 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரியை ஏலம் எடுத்தவர், 3 லட்சம் மீன் குஞ்சுகளை வளர்த்து தற்போது மீன்பிடிக்க இருந்த நிலையில், ஏரியில் மர்மநபர்கள் விஷத்தை கலந்ததால், ஏரி தண்ணீரில் இருந்த மீன்கள் செத்து மிதந்தன.

இந்த நிலையில்தான், கொடுமையின் உச்சமாக ஜேடர்பாளையம் சரளைக்காடு பகுதியைச் சேர்ந்த முத்துசாமி என்பவரது எம்.ஜி.ஆர் வெல்ல ஆலைக் கொட்டகையில் வேலை செய்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் அங்கு அமைக்கப்பட்டிருக்கும் அறைகளில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்தப் பகுதிக்கு பின்புறமாக வந்த மர்மநபர்கள், அங்குள்ள ஓர் அறையின் ஓரத்தில் தடுக்கப்பட்டிருந்த அட்டையை உடைத்து, அந்த அறையில் தூங்கிக் கொண்டிருந்த நான்கு பேர்மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்தனர்.
அந்த தீயில் வட மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் என்கிற ரோகி, சுகிலாம் ஆகிய இண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையிலும், ஸ்வந்த், கோகுல் ஆகியோர் படுகாயத்துடனும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் ராகேஷ், சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில், ஜேடர்பாளையம் பகுதியிலும், சரளைமேடு பகுதியிலும் நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். அந்த இளம்பெண் கொலைசெய்யப்பட்ட வழக்கில், சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இருப்பினும், முருகேசன் என்பவருக்குச் சொந்தமான வாழை தோப்புக்குள் நள்ளிரவில் புகுந்த மர்மநபர்கள் சிலர், அங்கிருந்த 400-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை வெட்டிச் சாய்த்தனர்.

இவ்வளவு போலீஸார் பாதுகாப்புப்பணியில் இருந்தபோதும், இப்படி வாழை மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான், இந்தச் சம்பவத்தை சரியாக கையாளவில்லை என்று நாமக்கல் மாவட்டத்தில் பணியாற்றிவந்த நாமக்கல் டி.எஸ்.பி சுரேஷ், பரமத்தி வேலூர் டி.எஸ்.பி கலையரசன், திருச்செங்கோடு டி.எஸ்.பி மகாலட்சுமி ஆகியோர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதேபோல், ஏற்கெனவே நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங்கும், நாமக்கல் மாவட்ட எஸ்.பி கலைச்செல்வனும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணிமாற்ற உத்தரவு, நாமக்கல் மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.