Published:Updated:

'மின்வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழப்பு' - தொடரும் சோகம்; என்னதான் தீர்வு?!

பலியான யானைகள்.

தர்மபுரி மாவட்டத்தில் விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி மூன்று யானைகள் உரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வாறு யானை உள்ளிட்ட விலங்குகள் உயிரிழப்பது தொடர்கதையாக இருக்கும் நிலையில் இதற்கு என்னதான் தீர்வு?

Published:Updated:

'மின்வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழப்பு' - தொடரும் சோகம்; என்னதான் தீர்வு?!

தர்மபுரி மாவட்டத்தில் விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி மூன்று யானைகள் உரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வாறு யானை உள்ளிட்ட விலங்குகள் உயிரிழப்பது தொடர்கதையாக இருக்கும் நிலையில் இதற்கு என்னதான் தீர்வு?

பலியான யானைகள்.

கோவை, தர்மபுரி உள்ளிட்ட இடங்களில் வனப்பகுதிகளையொட்டி ஏராளமான விவசாய நிலங்கள் அமைத்திருக்கின்றன. இங்கு அவ்வப்போது யானைகள் வருவதும், அதை விவசாயிகள் விரட்டுவதும் தொடர்கதையாக இருக்கிறது. சில நேரங்களில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் மின்கம்பிகளில் சிக்கி அவை உயிரிழந்தும் வருகின்றன.

யானை
யானை

அந்தவகையில், தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகில் சமீபகாலமாக விவசாயப் பகுதிகளுக்கு யானைகள் வருவது அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாரண்டஹள்ளி அருகிலிருக்கும் காளிகவுண்டன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் (50) சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருக்கிறார்.

இவர் தனது இரண்டு ஏக்கர் நிலத்தில் சோளம், ராகி, தென்னை உள்ளிட்ட பயிர்களைச் சாகுபடி செய்திருக்கிறார். எனவே, வன விலங்குகள் தனது பயிரைச் சேதப்படுத்தாமல் இருப்பதற்காக அவர் இதைச் செய்திருக்கிறார். அதற்கு அந்தப் பகுதியில் இருக்கும் மின் கம்பத்திலிருந்து அனுமதியின்றி மின்சாரம் எடுத்திருக்கிறார்.

சட்ட விரோத மின்வேலி
சட்ட விரோத மின்வேலி

இந்த நிலையில், கடந்த 7-ம் தேதி அதிகாலை உணவு தேடி முருகேசன் தோட்டத்துக்குள் இரண்டு குட்டியானைகள் உட்பட, ஐந்து யானைகள் வந்திருக்கின்றன. அப்போது அங்கிருக்கும் மின்வேலிக்கு அருகே சென்ற ஓர் ஆண் யானையும், இரண்டு பெண் யானைகளும் மின்கம்பியில் உரசியதில், மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தன.

இருப்பினும் இரண்டு குட்டிகளும் உயிர் தப்பிவிட்டன. ஆனால், அவை அந்த இடத்திலிருந்து செல்ல மறுத்து இறந்த யானைகளை எழுப்ப முயன்று பாசப் போராட்டம் நடத்தின. பின்னர் வந்த வனத்துறையினர் அவற்றை விரட்டினர். மேலும், விவசாயி முருகேசன் கைதுசெய்யப்பட்டார்.

யானை
யானை

தற்போது யானைகள் உயிரிழந்து கிடக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது. இது அனைத்து தரப்பு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதற்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் யானை ஒன்று உயிரிழந்தது.

அந்த யானை கிருஷ்ணகிரி அருகே வெலகலஹள்ளி வெங்கடப்பன் கொட்டாய் பகுதியில் இருக்கும் தென்னந்தோப்பிலுள்ள கிணற்றில் மின் மோட்டாருக்குச் செல்லும் ஒயர் யானையின் காலில் சிக்கியபோது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, இவ்வாறு யானைகள் அதிக அளவில் உயிரிழப்பதற்கு என்ன காரணம் என்ற கேள்வி எழுகிறது?

ஓசை காளிதாசன்
ஓசை காளிதாசன்

இது குறித்து நம்மிடம் பேசிய ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் ஓசை காளிதாசன், "இவ்வாறு யானை உயிரிழப்பது இது முதல் முறை அல்ல. இதுபோல் ஏராளமான யானைகள் உயிரிழந்திருக்கின்றன. பெரும்பாலும் தங்களது பயிர்களைப் பாதுகாப்பதற்காக விவசாயிகள் அமைக்கிறார்கள். விதிமுறைகளின்படி நேரடியாக மின் இணைப்பு கொடுக்கக் கூடாது.

மின்சாரத்தை விட்டு, விட்டு வரவைக்கும் கருவி பொருத்தியிருக்க வேண்டும். அதாவது வேலியில் யானை மோதினால் ஷாக் அடிக்கும். ஆனால், மின்சாரம் நின்றுவிடும். இவ்வாறான மின்வேலி அமைப்பதற்குதான் அனுமதி இருக்கிறது. மற்ற மின்வேலிகளுக்கு அனுமதி கிடையாது. தர்மபுரி சம்பவத்தில் நேரடியாக மின்சாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவேதான் யானை உயிரிழந்திருக்கிறது.

மின்வாரியம்
மின்வாரியம்

இது போன்ற பிரச்னைகளைத் தடுக்க மின்வாரியம், வனத்துறை இணைந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும், இது போன்ற குற்றங்களில் ஈடுபடும் விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் கொடுப்பதை ரத்து செய்ய வேண்டும். யானை உயிரிழந்ததால் இந்தச் சம்பவம் வெளியில் வந்திருக்கிறது. இதுவே மான் போன்ற சிறிய விலங்குகள் இறந்திருந்தால் வெளியில் தெரிவதற்கு கூட வாய்ப்பில்லை.

சில நேரங்களில் மனிதர்கள் கூட இறந்திருக்கிறார்கள். இதற்கு இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் மின்சாரத்தை ரத்து செய்வதன் மூலம் மட்டுமே தடுக்க முடியும். விவசாயிகளை தங்களுடைய வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்காகதான் இதைச் செய்கிறார்கள். இந்திய வன உயிரின சட்டத்தின்படி யானை பட்டியல் -1ல் வரும் விலங்கு.

எனவே, அதைக் கொலைசெய்தால் குற்றம் பெரியதாகக் கணக்கிடப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை வழங்கப்படும். இந்த வேலி காட்டுப்பன்றிகளுக்காக வைக்கப்பட்டது. காட்டுப்பன்றி விஷயத்தை பல ஆண்டுகளாகப் பேசிவருகிறார்கள்.

குற்றம்
குற்றம்

அதுவும் பாதுகாக்கப்பட வேண்டும். அவை காட்டுக்குள்ளிருந்து பல தூரம் வெளியில் வந்து விவசாயப் பகுதிகளில் தங்கிவிட்டது. எனவே. அது எங்கு தங்குகிறது என்பதைக் கண்டறிந்து அதை மீண்டும் காட்டுக்குள் அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு முறையான மின்வேலி அமைக்க மானியம் வழங்க வேண்டும். இழப்பு ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்கு விரைந்து இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும்" என்றார்.