அரசியல்
அலசல்
Published:Updated:

ரஷ்யா, சீனாவுக்குக் கண்டனம்... உச்சி மாநாடுகள் ‘அப்டேட்’!

ஜி7 நாடுகளின் உச்சி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
News
ஜி7 நாடுகளின் உச்சி மாநாடு

ஜி7 மாநாட்டில் கலந்துகொண்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரதமர் மோடியைத் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தில் ஜி7 நாடுகளின் உச்சி மாநாடும், குவாட் கூட்டமைப்பின் சந்திப்பும் நடந்திருக்கின்றன.

கடந்த 2007-ம் ஆண்டு, ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் முயற்சியால் தொடங்கப்பட்ட குவாட் கூட்டமைப்பு. Quadrilateral Security Dialogue (நாற்கர பாதுகாப்பு உரையாடல்) என்பதன் சுருக்கமே `QUAD.’ இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளும் தங்கள் பாதுகாப்புக்காக ஏற்படுத்திய இந்தக் கூட்டமைப்பை, ‘ஆசியாவின் நேட்டோ’ என்று கடுமையாக விமர்சித்திருந்தது சீனா.

ஜப்பான் பிரதமர் பதவியிலிருந்து ஷின்சோ அபே விலகிய பிறகு, 2008-ம் ஆண்டில் இந்தக் கூட்டமைப்பு நீர்த்துப்போனது. நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், 2017-ம் ஆண்டு முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது குவாட் கூட்டமைப்பு. இதிலுள்ள நான்கு நாடுகளும் இணைந்து தங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நாடுகளுக்கு எதிராகத் திட்டங்களை வகுப்பது, கூட்டு ராணுவப் பயிற்சிகளில் ஈடுபடுவது உள்ளிட்டவற்றைச் செய்துவருகின்றன.

மே 24-ம் தேதி குவாட் மாநாடு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அமெரிக்காவின் கடன் உச்சவரம்பு பிரச்னையால் அதிபர் ஜோ பைடன் கலந்துகொள்ள மாட்டார் என்று அறிவிப்பு வெளியானதும், ஆஸ்திரேலியா இந்த மாநாட்டை ரத்துசெய்தது. ஆனால், மே 19 முதல் 21 வரையிலான தேதிகளில் ஜப்பானில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் ஜோ பைடன் கலந்துகொண்டதால், குவாட் உறுப்பு நாடுகளின் சந்திப்பு ஜப்பானில் ஏற்பாடானது. அதன்படி, மே 20-ம் தேதி ஹிரோஷிமாவில் குவாட் கூட்டமைப்பின் சந்திப்பு நடைபெற்றது.

ஜி7 நாடுகளின் உச்சி மாநாடு
ஜி7 நாடுகளின் உச்சி மாநாடு

இந்தச் சந்திப்பின் இறுதியில் வெளியான அறிக்கையில், பெயர் குறிப்பிடாமல் சீனாவுக்கு எதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம், சிறிய நாடுகளுக்குக் கடன் கொடுத்து வலையில் சிக்கவைக்கும் சீனாவின் தந்திரம் ஆகியவற்றைக் கண்டித்திருக்கிறது குவாட் கூட்டமைப்பு. அதேபோல ஜி7 உச்சி மாநாட்டில், `உக்ரைனில், ஏற்றுக்கொள்ள முடியாத சட்டவிரோதப் போரை நடத்திக் கொண்டிருக்கிறது ரஷ்யா’ எனக் கடும் கண்டனங்களை ஜி7 நாடுகளும் பதிவுசெய்திருக்கின்றன.

ஜி7 மாநாட்டில் கலந்துகொண்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரதமர் மோடியைத் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசியிருக்கிறார். ரஷ்யா - உக்ரைன் போருக்குப் பிறகு இருவருக்குமிடையே நடந்த இந்த முதல் சந்திப்பில், ‘உக்ரைனில் போர் நிறுத்தத்தைக் கொண்டுவர இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யும்’ என்று பிரதமர் மோடி உறுதியளித்ததாகச் சொல்லப்படுகிறது. அடுத்த ஆண்டு, குவாட் உச்சிமாநாடு இந்தியாவில் நடக்கும் என்று அறிவித்திருக்கிறார் மோடி.

குவாட், ஜி7 நாடுகள் வெளிப்படுத்தியிருக்கும் எதிர்ப்புக்கு சீனாவும் ரஷ்யாவும் எப்படி எதிர்வினையாற்றப்போகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!