நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. இது, இந்திய குடிமகனின் பொதுவான அடையாளமாக இருக்கும் மற்றும் இதில் 12 இலக்க அடையாள எண், அட்டைதாரரின் கைரேகை, கருவிழி அடையாளங்கள் பதிவு செய்யப்படுவதால், ஒருவரின் அடையாளங்களை 100% எளிதில் கண்டுபிடித்துவிட முடியும்.

அரசு நலத்திட்டங்கள், வங்கிச் சேவைகள், அரசு சார்ந்த சேவைகள் மற்றும் பிற தனியார் சேவைகள், செல்போன் சிம் கார்டு வாங்குவது உட்பட அனைத்துக்கும், 12 இலக்கங்கள் கொண்ட ஆதார் அட்டையே முக்கிய அடையாளமாக பெறப்படுகிறது. இதனிடையே, 10 வருடங்களுக்கு ஒருமுறை ஆதார் அட்டையைக் கட்டாயமாக புதுப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி, ஆதார் அட்டையில் ஏதேனும் மாற்றங்கள் (முகவரி மாற்றம், பெயர் திருத்தம், புகைப்படம் மாற்றம் போன்றவை) இருந்தால், அரசு இ-சேவை மையம், தபால் நிலையங்கள், ஆதார் அப்டேஷன் மையம் ஆகியவற்றில் நேரடியாகச் சென்று சரி செய்துகொள்ளலாம்.
ஆனால், தற்போது இந்த மாற்றங்கள் அனைத்தையும் `myAadhaar’ இணையத்தளம் மூலம் புதுப்பித்துக்கொள்ளலாம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UDAI) அறிவித்துள்ளது. இந்த சேவை அடுத்த மூன்று மாதங்களுக்கு, அதாவது மார்ச் 15, 2023 முதல் ஜூன் 14, 2023 வரை இலவசமாக செய்துகொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து UDAI வெளியிட்டுள்ள அறிக்கையில், `இந்திய பொதுமக்கள் தங்கள் ஆதார் தகவல்களை, மை ஆதார் இணையதள பக்கத்தின் மூலம் அடுத்த மூன்று மாதங்களுக்கு இலவசமாக புதுப்பித்துக்கொள்ளலாம். ஆதார் சேவை மையங்களில் நேரில் சென்று மேற்கொள்ளப்படும் சேவைகளுக்கு வழக்கம் போல் ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. இவை தவிர, தபால் நிலையங்கள் குறிப்பிட்ட சில வங்கிகளிலும் ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் பிதுப்பிப்பது எப்படி?
ஆதார் அட்டை விவரங்களை டிஜிட்டல் முறையில் புதுப்பிக்க விரும்பும் பயனர்கள், https://myaadhaar.uidai.gov.in என்ற இணையத்தளத்துக்குச் சென்று தங்கள் ஆதார் எண்ணை அங்கு குறிப்பிட்டால், ஏற்கெனவே நீங்கள் ஆதாரில் பதிவு செய்திருக்கும் மொபைல் போன் எண்ணுக்கு OTP பகிரப்படும். அதன் மூலம் நீங்கள் மாற்ற வேண்டிய பிற விவரங்களை புதுப்பித்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட நாளில் நீங்கள் மாற்றிய விவரங்கள் அப்டேட் செய்யப்பட்டுவிடும். அதன் பின் புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டையானது 7 முதல் 10 நாள்களுக்குள் வீட்டு முகவரிக்கே வந்து சேரும்.

மேலும், அதே `மை ஆதார்’ இணையதளத்தின் கீழ் பகுதியில் Locate Enrolment Center என்ற பகுதியை க்ளிக் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பதிவு செய்தால், உங்கள் வீட்டு முகவரிக்கு அருகில் இருக்கும் ஆதார் புதுப்பிப்பு சேவை மையங்களை அறிந்துகொள்ளலாம். இதன் மூலம் பிற இடங்களில் வரிசையில் நிற்பதைத் தவிர்த்து எளிதில் தங்கள் புதுப்பிப்பு பணிகளை முடிக்கலாம்.