அலசல்
அரசியல்
Published:Updated:

அகோரிகளை அழைத்துவந்து பூஜை... ஓட்டமெடுத்த பெண் ஊழியர்கள்! - சர்ச்சையில் காங்கேயம் நகராட்சி ஆணையர்

காங்கேயம் நகராட்சி
பிரீமியம் ஸ்டோரி
News
காங்கேயம் நகராட்சி

ஏப்ரல் 13-ம் தேதியன்று நகராட்சி அலுவலகத்துக்கு இரண்டு அகோரிகள் வந்தனர். நிர்வாணமாக அவர்கள் வருவதைக் கண்ட பெண் ஊழியர்கள் கூச்சலிட்டனர்.

ஒட்டுத்துணி இல்லாமல் உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு, கழுத்தில் மண்டை ஓடு, ருத்ராட்ச மாலையுடன் காங்கேயம் நகராட்சி அலுவலகத்துக்குள் நுழைந்த அகோரிகளைக் கண்டு பெண் ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடிக்க... ஆண் ஊழியர்களும் அதிர்ந்து நிற்க... கடைசியில் நகராட்சி ஆணையர் வெங்கடேசன் அழைப்பின்பேரில்தான் அகோரிகள் அங்கு வந்ததாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

காங்கேயம் நகராட்சி அலுவலகத்தில் உண்மையில் என்ன நடந்தது என விசாரித்தோம். “காங்கேயம் நகராட்சியின் ஆணையராகப் பணியாற்றிவரும் வெங்கடேசன், தீவிர கடவுள் பக்தி கொண்டவர். வெங்கடேசனுக்கு காங்கேயம் 2-வது வார்டு பா.ஜ.க பொறுப்பாளர் அசோக் என்பவரும், அதே வார்டைச் சேர்ந்த தி.மு.க பொறுப்பாளர் சரவணனும் நெருங்கிய நண்பர்கள். இந்த நிலையில், காசியிலிருந்து ராமேஸ்வரத்துக்குச் செல்லும் இரு அகோரிகள் காங்கேயத்துக்கு வந்ததை அறிந்து, அசோக்கும் சரவணனும் அவர்களை காங்கேயம் நகராட்சி அலுவலகத்துக்கு கடந்த ஏப்ரல் 13-ம் தேதி அழைத்துவந்திருக்கின்றனர்.

அகோரிகளை அழைத்துவந்து பூஜை...
அகோரிகளை அழைத்துவந்து பூஜை...

அகோரிகள் வந்திருக்கும் தகவலை ஆணையர் வெங்கடேசனுக்குத் தெரிவித்ததையடுத்து, அவரும் அகோரிகளைத் தனது அலுவலக அறைக்கு அழைத்து வருமாறு கூறியிருக்கிறார். இதையடுத்து அகோரிகள் இருவரையும் அசோக்கும் சரவணனும் அழைத்துவந்து, ஆணையர் அலுவலக அறைக்குள் வைத்து, சிறிய அளவிலான பூஜையும் நடத்தியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, அகோரிகளிடம் ஆணையர் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் செல்வகுமார், அசோக், சரவணன், அவரின் தந்தை, ஆணையரின் ஓட்டுநர் ஆகியோர் ஆசி பெற்றிருக்கின்றனர்.

இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத நகராட்சி ஊழியர் ஒருவர் நம்மிடம் கூறுகையில், “ஏப்ரல் 13-ம் தேதியன்று நகராட்சி அலுவலகத்துக்கு இரண்டு அகோரிகள் வந்தனர். நிர்வாணமாக அவர்கள் வருவதைக் கண்ட பெண் ஊழியர்கள் கூச்சலிட்டனர். அப்போது, அகோரிகளுடன் வந்தவர்கள், ‘ஆணையர் அழைத்ததன்பேரில்தான் அகோரிகள் வந்திருக்கின்றனர். யாரும் பயப்பட வேண்டாம்’ என்றனர். இருப்பினும், பெண் ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்தின் முதல் தளத்துக்குச் சென்றுவிட்டனர். சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக ஆணையர் அறைக்குள் இருந்த அகோரிகள், பின்னர் காரில் ஏறிச் சென்றுவிட்டனர். அதன் பின்னரே பெண் ஊழியர்கள் மேல் தளத்திலிருந்து கீழே வந்தனர்” என்றார்.

காங்கேயம் நகராட்சி
காங்கேயம் நகராட்சி

இது குறித்து நம்மிடம் பேசிய அசோக், “நான் பா.ஜ.க-வில் பொறுப்பில் இருக்கிறேன். அகோரிகளை நான் அழைத்து வரவில்லை. சாலையில் நடந்து சென்றவர்களை யாரோ நகராட்சி ஆணையர் அறைக்குள் அழைத்து வந்தனர். அகோரிகள் வந்திருப்பதை அறிந்து, அங்கு சென்று அவர்களிடம் ஆசி பெற்றேன். அவ்வளவுதான்” என்று நழுவினார்.

இதற்கிடையே, “அரசு அலுவலகங்களில் மதம் சார்ந்த நிகழ்வுகள் நடக்கக் கூடாது என்ற அரசாணைக்கு எதிராக காங்கேயம் நகராட்சி அலுவலகத்துக்குள் அகோரிகளை அழைத்து வந்த ஆணையர் வெங்கடேசனையும், அதற்கு உதவியவர்களையும் கைதுசெய்ய வேண்டுமென திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் திராவிடர் விடுதலைக் கழகம் மனு அளித்திருக்கிறது. இது குறித்து நம்மிடம் பேசிய தி.வி.க மாவட்டத் தலைவர் முகில் ராசு, “இந்திய அரசியல் சட்ட முகப்புரையில் கூறப்பட்டிருக்கும் மதச்சார்பின்மைக்கு எதிராகவும், தமிழ்நாடு அரசு ஆணைக்கு எதிராகவும், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும்விதமாகவும் அரசு அலுவலகத்துக்குள் நிர்வாண சாமியாரை அழைத்துவந்தது அதிர்ச்சியளிக்கிறது. இந்த நிகழ்வு தந்தை பெரியாரின் கொள்கைகளை முன்னெடுத்து ஆட்சிசெய்யும் தி.மு.க அரசுக்குக் களங்கம் ஏற்படுத்தும் உள்நோக்கத்தோடு நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் இருக்கிறது. உடனே வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், இதுதான் சமயம் எனச் சிலர் அனைத்து நகராட்சி, கலெக்டர் அலுவலகங்கள் தொடங்கி தலைமைச் செயலகம் வரை இதே போன்ற கூத்துகளை நடத்திவிடுவார்கள்” என்றார் எச்சரிக்கும்விதமாக.

வெங்கடேசன்
வெங்கடேசன்

இது தொடர்பாக விளக்கம் பெற ஆணையர் வெங்கடேசனை அவரது செல்போன் எண்ணுக்குப் பலமுறை தொடர்புகொண்டும் நமது அழைப்பை அவர் எடுக்கவில்லை. வாட்ஸ்அப் மூலம் நாம் அனுப்பிய செய்தியைப் பார்த்த பிறகு செல்போனை அணைத்துவிட்டார். வருவாய் ஆய்வாளர் செல்வகுமாரும் நமது அழைப்பை எடுக்கவில்லை.

இது குறித்து காங்கேயம் நகராட்சித் தலைவர் சூர்யபிரகாஷ் கூறுகையில், “ஆணையர் வெங்கடேசன் சொந்தக் காரணங்களுக்காக விடுமுறையில் இருக்கிறார். அவர் நகராட்சி அலுவலகத்துக்குள் அகோரிகளைக் கூட்டிவந்ததாகத் தவறான தகவல் பரப்பப்படுகிறது. அவர் சாமியார்களைத்தான் கூட்டி வந்து ஆசி பெற்றார். அவர்கள் நிர்வாணமாக வந்தார்கள் என்று நீங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும். இது குறித்து மன்ற உறுப்பினர்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மதச்சார்பின்மை பேசும் தி.மு.க அரசு, என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?!