சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிக வரித்துறை அலுவலகத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் துணை பதிவுத்துறை தலைவர்களின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர், வரும் நாள்களில் பத்திரப் பதிவுக்கு ஆவணங்கள் மிக அதிகமாக எதிர்பார்க்கப் படுவதால் டோக்கன்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என உத்தரவிட்டுளார். மேலும் வரும் 25ம் தேதி சனிக்கிழமையும் தமிழகம் முழுவதும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் செயல்படவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சார்ப்பதிவு அலுவலகம் வேலை நாள் நீட்டிப்புக்கு மூன்று காரணங்கள் இருப்பதாக நம்மிடம் பகிர்ந்துள்ளார் முன்னாள் கூடுதல் பதிவுத்துறை தலைவர் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆ.ஆறுமுக நயினார். அவர் கூறுகையில், ``வருகிற மார்ச் மாதத்துடன் 2022-2023-ம் நிதி ஆண்டு முடிவடைகிறது. வழக்கமாக ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 01-ம் தேதி தொடங்கும் புதிய நிதி ஆண்டில், நில மதிப்புகள் 5% வரை கணிசமாக உயரும். எனவே இந்த விலையேற்றத் துக்குள் தங்கள் பத்திரங்களை பதிவு செய்வதற்காக ஒரு கூட்டம் காத்திருக்கும்.
தமிழகத்தில் 2012 -ல் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு (GuideLine Value) ஒட்டுமொத்தமாக சீரமைக்கப் பட்டது. இதில் கட்டணக் குறைபாடுகளை சரி செய்ய 2017-ம் ஆண்டில் வழிகாட்டி மதிப்பு 33% வரை குறைக்கப் பட்டது. இந்த குறைப்பு நடந்து ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில் மீண்டும் வழிக்காட்டி மதிப்புகளை ஒட்டு மொத்தமாக சீரமைக்கும் பணிகளை பதிவுத்துறை தொடங்கியுள்ளது.

இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், அறிவிப்புக்குப் பிறகு நில வழிகாட்டி மதிப்பு அதிகமாக உயர வாய்ப்புள்ளதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு அதிக முத்திரைத்தாள் கட்டணமும் பதிவுக் கட்டணமும் செலுத்த வேண்டி வரும். எனவே, நில வழிகாட்டி அறிவிப்புக்குப் முன்னரே பத்திரங்களைப் பதிவு செய்யவும் பலர் கூடுவார்கள்.
ஒரு ஃபைனான்ஷியல் பரிவர்த்தனையை நிதி ஆண்டுக்குள் முடித்தால் மட்டுமே அதற்கான வருமான வரிக்கணக்கை காண்பிக்க முடியும். இதில் ஒருநாள் தள்ளி சென்றாலும் அது அடுத்த நிதி ஆண்டுக்கான கணக்காக மாறிவிடும். எனவே அதற்குள் தங்கள் பரிவர்த்தனை மற்றும் பதிவுகளை முடிக்க வேண்டும் என ஒரு கூட்டம் அவசரம் காட்டும்.

தமிழகத்தில் எப்போதுமே அதிக கூட்டம் வரும் சில சார் பதிவு அலுவலகங்கள் அனைத்து சனிக்கிழமை களிலும் இயங்கும். ஆனால், இந்த மூன்று காரணங்களால் அனைத்து சார் பதிவு அலுவலகத்துக்கும் அளவிடமுடியாத கூட்டம் வரும் என்பதை கருத்தில் கொண்டு, மக்களின் பணிகளை எளிதாக்கவும் கூட்ட நெரிசலை தவிர்க்கவுமே வரும் சனிக்கிழமை வேலை நாளாகச் செயல்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பெரியஅலுவலங்களில் 200 டோக்கன்களும் சிறிய அலுவலங்களில் 100 டோக்கன்களும் இவை இல்லாமல் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தட்கல் டோக்கன்களும் வழங்கப்பட்டு வந்தன. அதிகக் கூட்டத்தால் இனி 200 டோக்கன்கள் 300-ஆகவும், 100 டோக்கன்கள் 200- ஆகவும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. அதேபோல் வரும் சனிக்கிழமை பத்திரப்பதிவு இல்லாமல் சார் பதிவு சார்ந்த அனைத்து வேலைகளும் செய்யப்படும்” என்றார்.