தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் 1970-களில் தொடங்கப்பட்ட ஒரு பொதுத்துறை நிறுவனம். குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கில் குடியிருப்புகளைக் கட்டிக்கொடுப்பதே இதன் முதன்மை நோக்கம். சமீபகாலமாக, குடிசை மாற்று வாரியத்தின் தரம் குறைவாக இருக்கிறது, சுவர்கள் பெயர்ந்து விழுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துவந்த நிலையில், தற்போது மோசடிப் புகாரில் சிக்கியிருக்கிறது தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்.

காஞ்சிபுரம் நகரப் பகுதியில் வேகவதி ஆற்றுப் பகுதியின் கரையோரத்திலிருந்த வீடுகள் 2015-ம் ஆண்டு மழையில் சேதமடைந்தன. ஆகவே வீட்டை இழந்தவர்களுக்கு கீழ்கதிர்பூர் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகட்டிக் கொடுக்க தமிழ்நாடு அரசு முடிவுசெய்தது. இதற்காக 17 ஏக்கர் பரப்பிலான நிலம் அடையாளம் காணப்பட்டது.
கீழ்கதிர்பூர் பகுதியில் பல பிளாக்குகளாக 2,112 வீடுகள், 4 தளங்களுடன் கூடிய வீடுகள் அமைத்திட டெண்டர் கோரப்பட்டு பின் அண்ணா சாலையில் இயங்கிவரும் பி.என்.ஆர் நிறுவனத்துக்கு 179 கோடியே 69 லட்சம் மதிப்பில் டெண்டர் வழங்கப்பட்டது. இந்தக் கட்டடம் அமைக்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்குத் தொடர்ச்சியான புகார்கள் வந்திருக்கின்றன. அதைத் தொடர்ந்து விசாரணையைத் தொடங்கியது லஞ்ச ஒழிப்புத்துறை.

குடியிருப்பு கட்டிய பி.என்.ஆர் நிறுவனம், அரசின் விதிமுறைகளை மீறியதாகவும், கட்டட வடிவமைப்பில் பல்வேறு தவறுகள் செய்ததும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. குறிப்பாக, குடிசை மாற்று வாரியக் கட்டடங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் தரக்கட்டுப்பாடுகளை மீறியதும் அம்பலமாகியிருக்கிறது.
ஒப்பந்தத் திட்டத்தில் குறிப்பிட்டிருக்கும் அளவைக்காட்டிலும் குறைவான பரப்பளவில் அமைக்கப்பட்டதும், கட்டட வடிவமைப்புக்கு அண்ணா பல்கலைக்கழகம் அல்லது ஐஐடி கல்வி நிறுவனத்திடம் அனுமதி பெற்றிட வேண்டும் என விதி இருக்கையில், தனியாக ஆலோசகர் ஒருவரை நியமித்து அவரது மேற்பார்வையில் பணிகள் நடைபெற்றிருக்கின்றன என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. தரமற்ற நிலையில் கட்டடம் கட்டப்பட்டதும், டெண்டர் தொகை போதவில்லை எனக் கூறி ஏறத்தாழ 5 கோடி ரூபாய் அளவுக்குக் கூடுதல் செலவினங்கள் மேற்கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது. குறிப்பாக, அரசுக்கு கிட்டதட்ட 33 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தனை முறைகேடுகள் நடக்க, பொறுப்பு அதிகாரிகள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று விசாரித்தபோது அவர்களும் உடந்தையாக இருந்தது தெரியவந்திருக்கிறது. பி.என்.ஆர் கட்டுமன நிறுவனத்துக்கு உடந்தையாக இருந்த ஐந்து அதிகாரிகள்மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவுசெய்திருக்கிறது.
சம்பந்தப்பட்ட குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் ராஜூ, தேவதாஸ், மாலா, சுந்திரமூர்த்தி, திருப்பதி ஆகியோர் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் தெரியவந்தது. மேலும் பி.என்.ஆர் கட்டுமான உரிமையாளர் சரண் பிரசாத் மீதும் ஊழல் தடுப்புப் பிரிவுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

இது போன்ற முறைகேடுகள் நிகழ்வதால்தான் தரமற்ற கட்டடங்கள் கட்டப்படுகின்றன. அதிகாரிகளின் உடந்தையால் பணத்தைச் சுருட்டிவிட்டுக் குறைந்த தரம்கொண்ட பொருள்களைவைத்து, கட்டடத்தைக் கட்டி முடிப்பதால்தான் கட்டடம் இடிந்து விழுவது, சுவர்கள் பெயர்கள் விழுவது போன்ற சம்பவங்கள் அதிகரிக்கின்றன. ஏழை, எளிய மக்களின் இருப்பிடம் சார்ந்த விவகாரத்தில் எந்தவொரு முறைகேடும் நடைபெறாதவாறு தமிழ்நாடு அரசு பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கட்டடத்தின் தரமும், அங்கு வசிக்கும் மக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் என்கிறார்கள் சமூகச் செயற்பாட்டாளர்கள்.