Published:Updated:

வடகிழக்கு மாநிலங்களில் சிறப்புச் சட்டம்... முழுமையாக எப்போது வாபஸ் பெறப்படும்?!

பாஜக - அமித் ஷா, மோடி

வடகிழக்கு மாநிலங்களில், பாதுகாப்புப் படையினருக்குக் கூடுதல் அதிகாரம் அளிக்கும் சிறப்புச் சட்டத்தை முழுமையாக வாபஸ் பெறுவது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியிருக்கிறார்.

வடகிழக்கு மாநிலங்களில் சிறப்புச் சட்டம்... முழுமையாக எப்போது வாபஸ் பெறப்படும்?!

வடகிழக்கு மாநிலங்களில், பாதுகாப்புப் படையினருக்குக் கூடுதல் அதிகாரம் அளிக்கும் சிறப்புச் சட்டத்தை முழுமையாக வாபஸ் பெறுவது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியிருக்கிறார்.

Published:Updated:
பாஜக - அமித் ஷா, மோடி

மத்தியிலுள்ள பா.ஜ.க ஆட்சியின் காரணமாக, கடந்த எட்டு ஆண்டுகளில், வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி அடைந்திருப்பதாக பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பெருமையுடன் கூறியிருக்கிறார்கள். மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில், பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் டிசம்பர் 18-ம் தேதி அங்கு பயணம் மேற்கொண்டனர்.

மோடி
மோடி

வடகிழக்கு மாநில கவுன்சிலின் பொன் விழாவையொட்டி மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது பேசிய மோடி, ‘ஊழல், பாகுபாடு, வன்முறை அரசியல், வாக்குவங்கி அரசியல் ஆகியவை இந்தப் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தன. அந்தத் தீமைகளை வேரடி மண்ணோடு வீழ்த்துவதுவதற்குப் பணியாற்றிவருகிறோம்” என்றார்.

வடகிழக்குப் பிராந்தியத்தில் பாதுகாப்புப் படையினருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் ‘அஃப்ஸ்பா’ எனப்படும் சிறப்புச் சட்டம் நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக இருந்துவருகிறது. இந்தச் சட்டத்தை முழுமையாக வாபஸ் பெறுவது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தப் பயணத்தின்போது பேசியிருக்கிறார். இதற்கு முன்பாக, சிறப்புச் சட்டம் படிப்படியாக வாபஸ் பெறப்படும் என்று கடந்த ஏப்ரல் மாதம் அஸ்ஸாமுக்குச் சென்றபோது பிரதமர் மோடி கூறினார்.

அமித் ஷா
அமித் ஷா

ஷில்லாங்கில் நடைபெற்ற வடகிழக்கு மாநில கவுன்சிலின் பொன் விழாக் கொண்டாட்டத்தில் பேசிய அமித் ஷா, ‘பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் கடந்த எட்டு ஆண்டுகளாக வடகிழக்கு மாநிலங்கள் அமைதியையும் வளர்ச்சியையும் அடைந்துவருகின்றன. இந்தப் பிராந்தியத்தில் அமைதியைக் கொண்டுவருவதற்கான முயற்சியாக, சிறப்புச் சட்டத்தை அரசு வாபஸ் பெற்றது. இந்தச் சட்டம் பெரும்பாலான பகுதிகளில் நீக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், சில பகுதிகளில் சிறப்புச் சட்டம் அமலில் இருக்கிறது’ என்றார்.

மேலும், ‘எட்டு ஆண்டுகளுக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது, வடகிழக்கு மாநிலங்கள் முதன்முறையாக அமைதி மற்றும் வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கின்றன. இதற்கு முன்பு, வடகிழக்கு மாநிலங்களுக்கு மிகக் குறைவான தொகையே பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மோடி பிரதமராக வந்த பிறகுதான், இன்றைக்கு கிராமங்களுக்குக்கூட பட்ஜெட் நிதி போய்ச் சேர்ந்திருக்கிறது. தற்போது, வடகிழக்கில் அமைதி தவழ்கிறது. முன்பு, சிறப்புச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டுமென்று ஏராளமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. தற்போது, யாரும் அந்தக் கோரிக்கையை எழுப்பத் தேவையில்லை. சிறப்புச் சட்டத்தை வாபஸ் பெறுவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டுவருகிறது.

வடகிழக்கு மாநிலங்களில் சிறப்புச் சட்டம்... முழுமையாக எப்போது வாபஸ் பெறப்படும்?!

இன்றைக்கு, அஸ்ஸாம் மாநிலத்தில் 60 சதவிகித பகுதிகளில் சிறப்புச் சட்டம் அமலில் இல்லை. மணிப்பூரில் ஆறு மாவட்டங்களில் 15 காவல் நிலைய எல்லைப் பகுதிகளில் சிறப்புச் சட்டம் அமலில் இல்லை. அருணாச்சலப் பிரதேசத்தில் ஒரு மாவட்டத்தில் மட்டுமே சிறப்புச் சட்டம் இருக்கிறது. நாகாலாந்தில் ஏழு மாவட்டங்களில் சிறப்புச் சட்டம் நீக்கப்பட்டிருக்கிறது. திரிபுராவிலும் மேகாலயாவிலும் முற்றிலுமாக சிறப்புச் சட்டம் நீக்கப்பட்டிருக்கிறது” என்றார் அமித் ஷா

மேலும் அமித் ஷா பேசுகையில், “முன்பெல்லாம், வடகிழக்கு மாநிலங்கள் என்றால் கடையடைப்பு, வேலைநிறுத்தம், குண்டுவீச்சு, துப்பாக்கிச்சூடு போன்ற சம்பவங்கள் அதிகம் நிகழும். பல்வேறு தீவிரவாத அமைப்புகளால் வடகிழக்கு மக்கள் பாதிக்கப்பட்டிருந்தார்கள். கடந்த எட்டு ஆண்டுகளில் தீவிரவாத நடவடிக்கைகள் 74 சதவிகிதம் குறைந்துவிட்டன. பாதுகாப்புப்படையினர் மீதான தாக்குதல்கள் 60 சதவிகிதம் குறைந்துவிட்டன. சுமார் 8,000 இளைஞர்கள் சரணடைந்து, தேசிய நீரோட்டத்தில் இணைந்துவிட்டனர்” என்றார்.

வடகிழக்கு மாநிலங்களில் சிறப்புச் சட்டம்... முழுமையாக எப்போது வாபஸ் பெறப்படும்?!

நாடு சுதந்திரம் பெற்றத்திலிருந்தே மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளாக வடகிழக்கு மாநிலங்கள் இருந்துவருகின்றன. அதனால்தான், மிகவும் பின்தங்கிய பகுதியாகவே இன்றுவரை அது இருந்துவருகிறது. வேலைவாய்ப்பின்மை காரணமாக, வடகிழக்கு இளைஞர்கள் தீவிரவாதத்துக்கு ஆட்பட்டிருந்தனர். இந்த நிலையில், தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி பாதுகாப்புப் படையினர் கடுமையாக அத்துமீறியதாக ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதற்கு எதிராக மக்கள் பெரும் போராட்டங்களை நடத்திவந்தனர். இந்தச் சிறப்புச் சட்டத்தை வாபஸ் பெறுவதாக மோடி அரசு கூறினாலும், அது முழுமையாக வாபஸ் பெறப்படவில்லை. சிறப்புச் சட்டம் சில கட்டங்களாக வாபஸ் பெறப்படும் என்ற தொனியில் அமித் ஷா பேசியிருக்கிறார். ஆனால், எப்போது வாபஸ் பெறப்படும் என்றோ, அதற்கான திட்டங்கள் என்னவென்றோ விரிவாக எதையும் அவர் தெரிவிக்கவில்லை. எனவே, இந்த விவகாரத்தில், மோடி அரசு மீது வடகிழக்கு மக்கள் முழுமையான நம்பிக்கையை வைக்காமல் இருக்கிறார்கள் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.