குழந்தைத் திருமணத்துக்கு எதிரான நடவடிக்கையில், அஸ்ஸாம் மாநில அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. அதன்படி, அஸ்ஸாமில் குழந்தைத் திருமண வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களைக் கைது செய்யும் முயற்சியில், காவல்துறை அதிகாரிகள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

இத்தகைய கைது நடவடிக்கையால் ஆவேசம் கொண்ட பெண்கள், துப்ரி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்கள் பலவற்றில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். காவல் நிலையத்தில் குவிந்த பெண்கள் கைக்குழந்தைகளுடனும், உறவினர் பெண்களுடனும் உள்ளே நுழைந்து, கைது செய்யப்பட்ட தங்களின் கணவன் மற்றும் மகன்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு போராட்டம் நடத்தினர்.
காவல்துறையினர், அவர்களைக் கட்டுப்படுத்திய நிலையில், தெருவில் இறங்கிப் போராடத் தொடங்கினர். இதுபோன்ற போராட்ட சம்பவங்கள், பல காவல் நிலையங்களில் நடைபெற்றுள்ளன. இதனால் அஸ்ஸாமில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
இது குறித்து அஸ்ஸாம் மாநிலத்தின் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில், ``ஓர் ஆண், பெண் குழந்தையை திருமணம் செய்தால், அது பாலியல் வன்கொடுமைக்குச் சமம். குழந்தை அனுபவிக்கும் வலியை நாம் உணர முயல்கிறோமா? என் மகளுக்கு 12 அல்லது 13 வயதில் திருமணம் செய்து வைப்பேனா?
வருங்காலத்தில் லட்சக்கணக்கான பெண் குழந்தைகளைக் குழந்தைத் திருமணங்களில் இருந்து காப்பாற்ற, ஒரு தலைமுறையே கஷ்டப்பட வேண்டியிருக்கும். இந்த அடக்குமுறை தொடரும், அஸ்ஸாமில் குழந்தைத் திருமணங்கள் நிறுத்தப்பட வேண்டும்.
குழந்தைத் திருமணங்களுக்கு எதிராகப் பதியப்பட்ட வழக்குகள் மட்டுமே மொத்தம் 4,074. இதில் மணமகன்கள், பெற்றோர்கள், பூசாரிகள், காஜிகள் உட்பட 8,134 பேர் குற்றம் சாட்டப் பட்டுள்ளனர். காவல்துறை அதிகாரிகள் 3,500 நபர்களைக் கைது செய்து நீதிமன்றங்களுக்கு அனுப்பியுள்ளனர். 2,258 நபர்களைத் தேடிப் பிடித்துக் கைது செய்துள்ளனர்.
14 வயதுக்கு மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்த ஆண்கள், ஜாமீனில் வெளிவரக்கூடிய பிரிவுகளின் கீழ் கைது செய்யப் பட்டுள்ளனர்; ஆனால் 14 வயதுக்குட்பட்ட பெண்களைத் திருமணம் செய்தவர்களுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 48 மணி நேரத்தில், மேற்கொள்ளப்பட்ட அதிக எண்ணிக்கையிலான கைது நடவடிக்கைகள், குழந்தைத் திருமணம் சட்டவிரோதமானது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கையைப் பல்வேறு அமைப்புகளும் வரவேற்றுள்ளன" என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், அஸ்ஸாம் அரசின் கைது நடவடிக்கைக்கு வருத்தம் தெரிவித்து பேசிய ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறுகையில், ``கடந்த 6 வருடங்களாக அங்கு பா.ஜ.க ஆட்சி நடக்கிறது. இதற்காக அவர்கள் என்ன செய்தார்கள்? அது அவர்களின் தோல்வி. எத்தனை பள்ளிகளைத் திறந்தார்கள்... இந்தக் கைது நடவடிக்கைகளுக்குப் பின், திருமணமான சிறுமிகளை இனி யார் பாதுகாப்பார்கள்? அஸ்ஸாம் அரசு இஸ்லாமியர்களுக்கு எதிரானது. பாரபட்சமானது’’ எனத் தெரிவித்துள்ளார்.
குழந்தைத் திருமணங்களை முடிவுக்குக் கொண்டு வர, முதல்வர் சர்மா தலைமையில் ஜனவரி 23-ம் தேதி கூடிய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அதிரடியான கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.