சென்னை திருமங்கலத்தில் டாஸ்மாக் கடை ஒன்றில் தானியங்கி மது விற்பனை இயந்திரம் வைக்கப்பட்டிருக்கிறது. இதை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 3-ம் தேதி ஆய்வுசெய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திமுக ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுக்காலம் ஆகிறது. இதுவரை 96 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கின்றன.
ஆனால், சில பத்திரிகைகள், தமிழக அரசு டாஸ்மாக் மூலம் வரும் வருமானத்தால் செயல்படுவதுபோல் செய்தி வெளியிடுவது வேதனை அளிக்கிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர், அன்புமணி உட்பட யாராவது பேசி, இந்தியா முழுவதும் பூரண மது விலக்குக் கொள்கையை கொண்டுவர வேண்டியதுதானே?

அதற்கு அவர்களுக்கு தைரியம் கிடையாது. இங்கு வந்து அரசியல் செய்கிறார்கள். சட்டப்பேரவையில் `சில்லறை விற்பனை நடைபெறும் 500 கடைகள் மூடப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. டாஸ்மாக் மூலம் கிடைக்கும் இந்த வருமானத்தைக்கொண்டு அரசு நடத்தவேண்டிய அவசியம் திமுக-வுக்கு இல்லை. கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த 1977 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
அவர்களுக்கு ஐந்தரைக் கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. டாஸ்மாக் நிறுவனம் மூலம் வரும் வருமானத்தை வைத்து அரசை நடத்துவது போன்று சித்திரித்து செய்தி வெளியிட்டால் யாராக இருந்தாலும் சட்டபடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.

இது குறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் துரை கருணா, "டாஸ்மாக் வருவாய் இல்லாமல் அரசை நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை. இவர்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது தமிழகத்தில் முழு மதுவிலக்கைக் கொண்டு வருவோம் என்று பிரசாரம் செய்தார்கள். திமுக ஆட்சிக்கு வந்ததும், மதுக்கடைகள் மூடப்படும், திமுக-வினர் நடத்திவரும் மது ஆலைகள் அனைத்தும் மூடப்படும் என்றும் தெரிவித்தார்கள்.
ஆனால் இன்று ரூ.35,000 கோடி, ரூ.40,000 கோடி என இலக்கு நிர்ணயம் செய்து மது விற்பனை செய்கிறார்கள். ஒட்டுமொத்த பட்ஜெட்டில் 4-ல் ஒரு பங்கு சாராய வருமானமாக இருக்கிறது. அதனால் இப்போதைக்கு அது சாத்தியம் இல்லை. எனவேதான் 500 கடைகளை மூடுவதற்குக்கூட யோசிக்கிறார்கள்.
வெறும் விளம்பரத்துக்காகவும், மக்களை ஏமாற்றுவதற்காகவும் பேசக்கூடிய பேச்சுகள்தான் இவை. அரசின் வருமானத்தைப் பெருக்குவதற்கு கிரானைட், கல்குவாரி போன்றவற்றிலிருந்து கிடைக்கும் வருமானத்தை அதிகரித்தால் டாஸ்மாக்கைப் படிப்படியாக மூடலாம். ஆனால் அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்த டாஸ்மாக்கிலிருந்து கிடைக்கும் தொகைதான் பெரும் உதவியாக இருக்கிறது.

ஒருவேளை திட்டங்களைச் செயல்படுத்தவில்லையென்றால் மக்களின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும். எனவே, அமைச்சர் சொல்வது இப்போதைக்குச் சாத்தியம் இல்லை. ஏற்கெனவே பொருளாதாரத்தை உயர்த்துவதற்குக் குழு அமைத்திருக்கிறார்கள். அவர்கள் வழங்கும் ஆலோசனையின் அடிப்படையில் செயல்படத் தொடங்கினால் இன்னும் ஒரு 5-10 ஆண்டுகளின் பூரண மதுவிலக்கைக் கொண்டுவர முடியும்" என்றார்.
இது குறித்து நம்மிடம் பேசிய பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானத்தைக்கொண்டு அரசை நடத்தவேண்டிய அவசியம் இல்லையென்றால் உடனே மூடிவிடுங்கள். ஆனால், அப்படி உடனே மூடினால் வருவாய்க்கு எங்கே செல்வீர்கள்... உங்களிடம் தொழில் வளர்ச்சி இல்லை. எந்த முதலீட்டையும் திமுக அரசு கொண்டுவரவில்லை.

வாய்ச்சொல்லில் வீரர்கள் என்பதுபோல்தான் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பேச்சு இருக்கிறது. திராணி இருந்தால், தெம்பு இருந்தால் டாஸ்மாக்கை மூடுங்கள். மது ஆலைகளின் மூலமாக அரசுக்கு வருவாய் என்பதைவிட நான்கு மடங்கு திமுக-வினருக்கு லாபம் கிடைத்துக்கொண்டிருக்கிறது. இவர்களுடைய வியாபாரம் கெட்டுப்போகும் என்பதால் டாஸ்மாக்கை மூடுவதற்குச் சாத்தியம் இல்லை" என்றார்.
இது குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், "அமைச்சர் இன்று மூடுகிறேன் என்று சொல்லவில்லை. மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு நமது பொருளாதாரத்தை வளப்படுத்த வேண்டும். அதன் பிறகு முழுவதுமாக மூடிவிடலாம். டாஸ்மாக் மூலம் ரூ.30 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது. பட்ஜெட் ரூ.3 லட்சம் கோடிக்குப் போட்டிருக்கிறோம்.

எனவே மது விற்பனை மூலம் கிடைப்பது 10%-தான். எனவே, ரூ.30,000 கோடியை வேறு முறையில் ஈட்டிக்கொண்டுவந்தால் ஓர் ஆண்டில் டாஸ்மாக்கை முழுவதுமாக மூட முடியும். ஆனால் உடனே இதைச் செய்ய முடியாது. மது விற்பனை செய்பவர்கள் அனைவரும் பாஜக-வைச் சேர்ந்தவர்கள் தான். அண்ணாமலைக்கும் பங்கு இருக்கிறது. கள்ளச்சாராய விற்பனை வழக்கு, பாலியல் வழக்கு, கொலை வழக்கு இருப்பவர்களையெல்லாம் பாஜக-வில் சேர்த்திருக்கிறார்கள்" என்றார் காட்டமாக.