அரசியல்
அலசல்
Published:Updated:

பா.ஜ.க-வை மிரட்டும் ‘புல்வாமா பூகம்பம்’ - பழிவாங்கப்படுகிறாரா சத்யபால் மாலிக்?

 சத்யபால் மாலிக்
பிரீமியம் ஸ்டோரி
News
சத்யபால் மாலிக்

ஆர்.டி.எக்ஸ் உள்ளிட்ட சுமார் 300 கிலோ எடைகொண்ட வெடிமருந்துகளை நிரப்பிய கார், 10-12 நாள்களாக அந்தப் பகுதியில் உலாவிக்கொண்டிருந்திருக்கிறது. அது யாருக்கும் தெரியவில்லை.

“சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கு விமானங்கள் வழங்க மோடி அரசு மறுத்ததால்தான் புல்வாமா தாக்குதல் நிகழ்ந்து, 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்” என்ற தகவலை வெளிப்படுத்தி, தேசத்தையே அதிரவைத்திருப்பவர் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக். இந்த விவகாரம், மத்திய அரசுக்குப் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பழைய வழக்கு ஒன்றில் சத்யபால் மாலிக்கை விசாரிக்க சி.பி.ஐ சம்மன் அனுப்பியிருக்கிறது. இதை, ‘மோடி அரசின் பழிவாங்கும் செயல்’ என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன!

சத்யபால் மாலிக்கும் புல்வாமா தாக்குதலும்!

பா.ஜ.க-வைச் சேர்ந்த சத்யபால் மாலிக், 2018 ஆகஸ்ட் முதல் 2019 அக்டோபர் வரை ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்தார். அப்போதுதான் தேசத்தையே உலுக்கிய புல்வாமா தாக்குதல் சம்பவம் நிகழ்ந்தது. 2019-ம் ஆண்டு, பிப்ரவரி 14-ம் தேதி, சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 2,500 பேருடன் 78 ராணுவ வாகனங்கள் ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பிற்பகல் 3:15 மணியளவில் அணிவகுத்துச் சென்றன. அப்போது, புல்வாமா பகுதியில் ஆர்.டி.எக்ஸ் உள்ளிட்ட வெடி பொருள்களால் நிரப்பப்பட்டிருந்த கார் ஒன்று ராணுவ வாகனங்கள்மீது மோதி வெடிப்பை ஏற்படுத்தியது. இந்த பயங்கரவாதத் தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டது ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. புல்வாமா தாக்குதல் நடைபெற்ற நேரத்தில், உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள கார்பெட் தேசியப் பூங்காவின் வனப்பகுதியில், தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தார் பிரதமர் மோடி. அங்கு படப்பிடிப்புகளை முடித்துக்கொண்டு, மாலை 7 மணியளவில் அவர் வெளியே வந்தபோதுதான், தாக்குதல் குறித்து பிரதமருக்குத் தெரிவிக்கப்பட்டது.

 சத்யபால் மாலிக்
சத்யபால் மாலிக்

2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரபரப்புத் தொடங்கியிருந்த நேரத்தில்தான், புல்வாமா தாக்குதல் சம்பவமும் நிகழ்ந்தது. இதனால், பா.ஜ.க-வின் தேர்தல் பிரசார போக்கையே புல்வாமா சம்பவம் மாற்றியது. புல்வாமா தாக்குதலை, `தேசப் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்’ என்று பா.ஜ.க-வினர் பிரசாரம் செய்தனர். 2014-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது, ‘ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை’ போன்ற வசீகர வாக்குறுதிகளை வழங்கிய பா.ஜ.க., 2019 தேர்தலில் ‘தேசபக்தி’, ‘தேசப் பாதுகாப்பு’ ஆகிய பிரசாரங்களை முன்னிறுத்தியது. இதனால், “புல்வாமா தாக்குதலைத் தனது அரசியல் லாபத்துக்கு பா.ஜ.க பயன்படுத்துகிறது” என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. அந்தத் தேர்தலில் 303 இடங்களைப் பிடித்து, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது பா.ஜ.க. இரண்டாவது முறையாகப் பிரதமர் நாற்காலியில் அமர்ந்தார் நரேந்திர மோடி.

சிக்கலை ஏற்படுத்திய சர்ச்சை!

தற்போது, கண்ணுக்கெட்டிய தூரத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவருகிறது. இந்த நிலையில், புல்வாமா தாக்குதல் பற்றிய அதிர்ச்சித் தகவல்களை முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் வெளியிட்டிருப்பது பா.ஜ.க-வுக்குச் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. ‘தி வயர்’ இணையதளத்தின் யூடியூப் சேனலுக்காக மூத்த பத்திரிகையாளர் கரண் தாப்பருக்கு, சத்யபால் மாலிக் அளித்த நேர்காணல் ஏப்ரல் 14-ம் தேதி வெளியானது. அதில், புல்வாமா தாக்குதல், பிரிவு 370 நீக்கம் உட்பட பல விவகாரங்கள் குறித்த அதிர்ச்சித் தகவல்களை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். “நம்முடைய கையாலாகாத்தனத்தால்தான் 40 வீரர்களைப் பலிகொடுத்தோம். அவ்வளவு அதிக எண்ணிக்கையிலான வீரர்கள் சாலை வழியாக ஒருபோதும் சென்றதில்லை. எனவே, வீரர்கள் செல்ல ஐந்து விமானங்கள் வேண்டும் என்று அன்றைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் சி.ஆர்.பி.எஃப் கேட்டது. ஆனால், விமானங்களை வழங்க மறுத்துவிட்டார்கள். அந்த ஐந்து விமானங்களை என்னிடம் கேட்டிருந்தால்கூட நானே கொடுத்திருப்பேன்” என்று நேர்காணலில் கூறியிருக்கிறார் சத்யபால் மாலிக்.

மேலும் அவர், “ஆர்.டி.எக்ஸ் உள்ளிட்ட சுமார் 300 கிலோ எடைகொண்ட வெடிமருந்துகளை நிரப்பிய கார், 10-12 நாள்களாக அந்தப் பகுதியில் உலாவிக்கொண்டிருந்திருக்கிறது. அது யாருக்கும் தெரியவில்லை. அந்த காரை யாரும் இடைமறிக்கவில்லை. இது, 100 சதவிகிதம் உளவுத்துறையின் தோல்வி. புல்வாமா தாக்குதல் நடைபெற்ற நேரத்தில், உத்தரகாண்டில் ஒரு படப்பிடிப்பில் பிரதமர் இருந்தார். மாலையில் என்னைத் தொடர்புகொண்ட அவர், என்ன நடந்தது என்று கேட்டார். அப்போது, ‘நம்முடைய தவறின் காரணமாகவே இந்தத் தாக்குதல் நடந்தது. நாம் விமானங்களைக் கொடுத்திருந்தால் இந்தத் துயரம் நிகழ்ந்திருக்காது’ என்று சொன்னேன். உடனே அவர், ‘இது பற்றிப் பேசாதீர்கள். அமைதியாக இருங்கள்’ என்று சொன்னார். நம்முடைய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் பேசியபோதும், ‘அமைதியாக இருங்கள்’ என்றே அவரும் சொன்னார். ஆகவே, இந்த விவகாரத்தை ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் தலையில்தான் கட்டப்போகிறார்கள் என்பதை உணர்ந்த நான், பேசாமல் இருப்பதே நல்லது என்று நினைத்தேன்” என்று சத்யபால் மாலிக் கூறியிருக்கிறார்.

பா.ஜ.க-வை மிரட்டும் ‘புல்வாமா பூகம்பம்’ - பழிவாங்கப்படுகிறாரா சத்யபால் மாலிக்?

பா.ஜ.க-வினரின் மௌனம்!

இந்த விவகாரம் பா.ஜ.க-வுக்கும், மத்திய அரசுக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. வழக்கமாக, ராணுவத்தைப் பற்றி யார் என்ன சொன்னாலும், ‘தேசத்தைக் காக்கும் ராணுவ வீரர்களை அவமதிக்கலாமா?’, ‘தேசத்துக்கு எதிராகப் பேசலாமா?’ என்று கொந்தளிக்கும் மத்திய அமைச்சர்களும், பா.ஜ.க தலைவர்களும் தற்போது கனத்த மௌனம் காத்துவருகிறார்கள். சத்யபால் மாலிக் நேர்காணல் வெளியாகி பத்து நாள்களைக் கடந்த பிறகு, இது குறித்து வாய் திறந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, “சத்யபால் மாலிக் இது பற்றி அப்போதே ஏன் பேசவில்லை?” என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், இன்ஷூரன்ஸ் தொடர்பான பழைய வழக்கு ஒன்றில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சத்யபால் மாலிக்குக்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பியிருக்கிறது. “இது பழிவாங்கும் செயல்” என்று காங்கிரஸ், சி.பி.எம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் விமர்சித்திருக்கின்றன.

பா.ஜ.க-வுக்கு எதிராக யார் பேசினாலும் வழக்கு, விசாரணை... அப்படித்தானே!