புதிதாகக் கட்டிமுடிக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்றத்தை மே 28-ம் தேதியன்று பிரதமர் மோடி திறந்துவைப்பார் என்ற அறிவிப்பு வெளியான நாள் முதலே எதிர்க்கட்சிகள் அதை எதிர்த்துவருகின்றன. இதில் எதிர்க்கட்சிகள் கூறும் காரணங்களில் ஒன்று, புதிய நாடாளுமன்றம் சாவர்க்கர் பிறந்தநாளில் திறக்கப்படுவது, மற்றொன்று, குடியரசுத் தலைவரைத் திறக்கவைக்காமல் மோடியைத் திறக்கவைப்பது. இதனால் காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பதாக அறிவித்திருக்கின்றன.
இது ஒருபக்கம் இருந்தாலும், புதிய நாடாளுமன்றத்தில் மக்களவை சபாநாயகருக்கு அருகில் தமிழகத்தின் செங்கோல் வைக்கப்படும் என அமித் ஷா தெரிவித்தார். இந்த விஷயத்திலும் மத்திய அரசு வெளியிட்ட மாதிரி செங்கோல் படத்தில் நந்தி இருப்பது குறித்து, `மதச்சார்பற்ற இந்தியாவில் இந்து மதத்தை மட்டும் பா.ஜ.க முன்னிலைப்படுத்துகிறதா?' என எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்புகின்றன.
இந்த நிலையில் புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழாவை முன்னிட்டு 75 ரூபாய் நாணயம் வெளியிடப்படவிருப்பதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்திருக்கிறது. இது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, 75 ரூபாய் நாணயம், 44 மில்லிமீட்டர் விட்டம்கொண்ட வட்ட வடிவில், 50 சதவிகிதம் வெள்ளி, 40 சதவிகிதம் செம்பு, 5 சதவிகிதம் நிக்கல், 5 சதவிகிதம் துத்தநாகம் கலவையில் உருவாக்கப்படுகிறது. நாணயத்தின் எடை 35 கிராம்.

நாணயத்தின் முகப்பில் அசோகா சின்னமும், அதன் கீழ் `சத்யமேவ ஜெயதே' என்ற வாசகமும் இடம்பெறுகிறது. நாணய முகப்பின் வலது பக்கத்தில் `இந்தியா' என்ற வார்த்தை ஆங்கிலத்திலும், இடது பக்கத்தில் `பாரத்' என்ற வார்த்தை தேவநாகரி (Devnagri) எழுத்திலும் பொறிக்கப்படும். மேலும், நாணயத்தின் பின்புறத்தில் புதிய நாடாளுமன்றத்தின் படமும், அதன் கீழ்ச் சுற்றளவில் `Parliament Complex’ என்று ஆங்கிலத்திலும், மேல் சுற்றளவில் `சன்சாத் சங்குல்' என தேவநாகரி எழுத்திலும் பொறிக்கப்படும் எனக் கூறப்பட்டிருக்கிறது.