Published:Updated:

புதிய நாடாளுமன்றம்: மே 28-ல் திறப்பு; ரூ.971 கோடி செலவு, 1,272 இருக்கைகள்... சிறப்புகள் தெரியுமா?

சென்ட்ரல் விஸ்டா - புதிய நாடாளுமன்றக் கட்டடம்

மோடியின் கனவுத்திட்டமாக இருக்கும் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் திறப்பு விழாவை மிகவும் பிரமாண்டமாக நடத்த தீவிரமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.

Published:Updated:

புதிய நாடாளுமன்றம்: மே 28-ல் திறப்பு; ரூ.971 கோடி செலவு, 1,272 இருக்கைகள்... சிறப்புகள் தெரியுமா?

மோடியின் கனவுத்திட்டமாக இருக்கும் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் திறப்பு விழாவை மிகவும் பிரமாண்டமாக நடத்த தீவிரமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.

சென்ட்ரல் விஸ்டா - புதிய நாடாளுமன்றக் கட்டடம்

புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் `சென்ட்ரல் விஸ்டா' புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி வரும் மே 28-ம் தேதி திறந்துவைக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மோடியின் கனவுத்திட்டமாக இருக்கும் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் திறப்பு விழாவை மிகவும் பிரமாண்டமாக நடத்த தீவிரமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.

சென்ட்ரல் விஸ்டா
சென்ட்ரல் விஸ்டா

இந்த நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் முக்கிய சிறப்பம்சங்களை `ஹைலைட்ஸ்' ஆக பார்ப்போம்.

*பிரதமர் மோடி கடந்த 2020 டிசம்பர் 10-ம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினார். இந்த அடிக்கல் நாட்டுவிழாவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், பல்வேறு நாடுகளின் தூதர்கள் கலந்துகொண்டனர்.

*நாடாளுமன்றக் கட்டடம் கட்டுவதற்கு மட்டுமே சுமார் ரூ.971 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டு, அதன் கட்டுமானப் பொறுப்பை டாடா நிறுவன குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

*புதிய நாடாளுமன்றக் கட்டடம் சுமார் 64,500 சதுர மீட்டர் பரப்பளவுக்கு முக்கோண வடிவில் கட்டப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டடத்துக்கு `சென்ட்ரல் விஸ்டா' எனச் சிறப்பு பெயரும் இடப்பட்டிருக்கிறது.

சென்ட்ரல் விஸ்டா கட்டடத்தின் உள் பகுதி
சென்ட்ரல் விஸ்டா கட்டடத்தின் உள் பகுதி

*இந்தப் புதிய கட்டடத்தினுள் அதிநவீன அரசியலமைப்பு மண்டபம் (State-of-the-art Constitutional Hall), நவீன ஆடியோ-விஷுவல் வசதிகளுடன் கூடிய ஆலோசனைக் கூட்ட அரங்குகள், எம்.பி-க்கள் ஓய்வுவெடுக்கும் அறைகள், நிலைக்குழுக்களுக்கான அறைகள், உணவகம், நூலகமும் இடம்பெற்றிருக்கின்றன.

*மிக முக்கியமாக மக்களவை, மாநிலங்களவைக் கூட்டங்களுக்காக தற்போது இருப்பதைவிட அதிகமான உறுப்பினர்களுக்கு இடமளிக்கும் வகையில் அதிக இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

சென்ட்ரல் விஸ்டா கட்டடத்தின் உள் பகுதி
சென்ட்ரல் விஸ்டா கட்டடத்தின் உள் பகுதி

*உதாரணமாக, தற்போது மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 543, மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 245. அதற்கேற்ற வகையில்தான் தற்போதைய நாடாளுமன்றக் கட்டடத்தின் இரு அவைகளின் இருக்கைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் மக்களவையில் 888 இருக்கைகள், மாநிலங்களவையில் 384 இருக்கைகள் என மொத்தம் 1,272 இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனால், இரு அவைகள் இணைந்த கூட்டத்தைக்கூட எளிதில் நடத்திவிட முடியும்.

*இந்தப் பிரமாண்ட மக்களவைக் கட்டடம் தேசியப் பறவையான மயிலை கருப்பொருளாகக் கொண்டும், மாநிலங்களவைக் கட்டடம் தேசிய மலரான தாமரையைக் கருப்பொருளாகக் கொண்டும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

*பாதுகாப்புத் தொழில்நுட்ப அம்சங்களைப் பொறுத்தவரையில், புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக நவீன ஸ்மார்ட் கார்டு, உறுப்பினர்களின் முக அடையாளத்தைக்கொண்டு உள்ளே அனுமதிக்கும் தொழில்நுட்பம், 300 அதிநவீன சிசிடிவி கேமராக்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

*அதேபோல, மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைவரின் பயன்பாட்டுக்காக சுமார் 64 கழிவறைகள் தரைதளத்துக்குக் கீழே அமைக்கப்பட்டிருக்கின்றன.

 ஹால்
ஹால்

*இது தவிர வெளிப்புறத்தைப் பொறுத்தவரையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தும் அளவுக்கு விசாலமான பார்க்கிங் பகுதி, சுற்றிலும் பசுமையான புல்வெளிகள், புதிய சிவப்பு கிரானைட் நடைபாதைகள், 900-க்கும் மேற்பட்ட மின் விளக்குக் கம்பங்கள், பாரம்பர்யத்தை வெளிப்படுத்தும் வகையில் வெள்ளை மணற்கல் தூண்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

*பிரதான ராஜபாதையின் குறுக்கே மூன்று சுரங்கப் பாதைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பாதையின் இருபுறங்களிலுமுள்ள கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு, அதில் 16 பாலங்கள் கட்டப்பட்டிருக்கின்றன.

சென்ட்ரல் விஸ்டா
சென்ட்ரல் விஸ்டா

*பிரதமர், குடியரசுத் தலைவருக்கான சிறப்பு நுழைவாயில், மக்களவை சபாநாயகர், மாநிலங்களவைத் தலைவருக்கான நுழைவாயில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இரண்டு நுழைவாயில்கள், இரண்டு பொது நுழைவாயில்கள் என மொத்தம் ஆறு நுழைவாயில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

*இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் ஆயுட்காலம் 150 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் எனவும், பூகம்பத்தைத் தாங்கும் வகையில் வலுவாக வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

*2022 அக்டோபர் மாதம் முழுக் கட்டுமானப் பணிகளும் நிறைவடையும் என மத்திய அரசு கூறிய நிலையில், இறுதிக்கட்டப் பணிகளுக்காகக் கூடுதலாக ஆறு மாதங்கள் பிடித்தன.

சென்ட்ரல் விஸ்டா
சென்ட்ரல் விஸ்டா

*இந்த நிலையில், மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமைந்து வரும் மே 26-ம் தேதியுடன் 9 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு மே 28-ம் தேதி புதிய பாராளுமன்ற கட்டடத் திறப்பு விழாவை மிகப் பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.