அலசல்
அரசியல்
Published:Updated:

சீன ஆக்கிரமிப்பில் இந்திய நிலம்! - உண்மையை மறைக்கிறாரா அமித் ஷா?

அமித் ஷா
பிரீமியம் ஸ்டோரி
News
அமித் ஷா

‘நேரு ஆட்சியின் கையாலாகாத்தனம்’ என்று அதைத் தொடர்ந்து விமர்சிக்கும் பா.ஜ.க அதை மீட்பதற்காக, துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை என்று விமர்சனமும் எழுந்தது.

அருணாசலப் பிரதேசத்தின் கிபிதூ கிராமத்துக்கு நேரில் சென்றதோடு, ‘இந்திய நிலத்தில் ஓர் அங்குலத்தைக்கூட யாரும் அபகரிக்க முடியாது’ என்று ஆவேசப்பட்டிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. ஆனால், `லடாக் உள்ளிட்ட பகுதிகளில் இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்திருப்பது பற்றி அவர் வாய் திறக்கவில்லையே?’ என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

அருணாசலப் பிரதேச பிரச்னை!

இந்திய மாநிலங்களில் ஒன்றான அருணாசலப் பிரதேசத்தை உரிமை கொண்டாடிவருகிறது சீனா. ‘ஜங்னான்’ என்ற சீனப் பெயரில்தான் அருணாசலப் பிரதேசத்தை சீனா அழைக்கிறது. சமீபத்தில், அருணாசலப் பிரதேசத்திலுள்ள எட்டு நகரங்கள், நான்கு மலைகள், இரண்டு ஆறுகள், ஒரு மலைப்பாதை ஆகியவற்றின் பெயர்களை சீனா மாற்றியிருக்கிறது. அதற்கு இந்தியா கடும் கண்டனத்தைத் தெரிவித்தது. அதைப் பொருட்படுத்தாத சீனாவோ, ‘ஜங்னான் பிராந்தியம், சீனாவின் பிரிக்க முடியாத பகுதி. நிர்வாக வசதிக்காக, அங்கிருக்கும் சில பகுதிகளுக்கு புதிய பெயர்களைச் சூட்டியிருக்கிறோம்” என்கிறது. இந்த விவகாரம், கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியா - சீனா இடையே நிலவிவரும் மோதல் போக்கை மேலும் அதிகரித்திருக்கிறது. இத்தகைய சூழலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஏப்ரல் 10-ம் தேதி அருணாசலப் பிரதேசத்துக்குச் சென்றார். சீனாவின் எதிர்ப்பை நிராகரித்துவிட்டு, அங்கு சென்ற அவர், “எங்கள் நிலத்தை யார் வேண்டுமானாலும் ஆக்கிரமிக்கலாம் என்ற காலம் மலையேறிவிட்டது. இனி, ஓர் அங்குல நிலத்தைக்கூட யாரும் அபகரிக்க முடியாது” என்றார். ஆனால் அவர், `சீனா’ என்ற பெயரை மறந்தும்கூட உச்சரிக்கவில்லை.

அமித் ஷா
அமித் ஷா

பா.ஜ.க ஆட்சியில் பறிபோன நிலம்!

ஏற்கெனவே சீனாவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் இந்திய நிலப்பரப்பை மீட்பது பற்றி அவர் பேசவில்லை. அதாவது, 1962-ம் ஆண்டு நிகழ்ந்த இந்திய - சீனப் போரின்போது, லடாக் பகுதியிலுள்ள சுமார் 38,000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்தது. ‘நேரு ஆட்சியின் கையாலாகாத்தனம்’ என்று அதைத் தொடர்ந்து விமர்சிக்கும் பா.ஜ.க அதை மீட்பதற்காக, துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை என்று விமர்சனமும் எழுந்தது.

மோடி பிரதமரான பிறகு மேலும் சில இந்தியப் பகுதிகளை சீனா ஆக்கிரமித்திருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன. 2020-ம் ஆண்டு, கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினர் அத்துமீறி இந்தியப் பகுதிக்குள் நுழைந்தனர். அப்போது நடந்த மோதலில், இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. அந்தச் சமயத்தில், “இந்திய நிலப்பரப்பில், டெல்லி யூனியன் பிரதேச அளவுக்கான நிலத்தை சீனா ஆக்கிரமித்திருக்கிறது” என்று குற்றம்சாட்டினார் ராகுல் காந்தி. அதற்கு உரிய பதிலைச் சொல்லாமல், “இந்திய ராணுவ வீரர்களை அவமதித்துவிட்டார் ராகுல்” என்று பிரச்னையை திசைதிருப்பியது பா.ஜ.க.

மறுப்பு தெரிவிக்காத மத்திய அரசு!

இந்த நிலையில், கடந்த ஜனவரி 20, 21, 22 ஆகிய தேதிகளில், அனைத்து மாநில டி.ஜி.பி-க்களின் வருடாந்திர மாநாடு டெல்லியில் நடைபெற்றது. அதில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்றனர். அந்த மாநாட்டில் தாக்கல்செய்யப்பட்ட அறிக்கையில், “கிழக்கு லடாக் பகுதியில் இந்திய ராணுவத்தினர் ரோந்து செல்லும் 65 பாயின்ட்டுகளில், 26 ரோந்து பாயின்ட்டுகள் சீனாவின் வசம் போய்விட்டன” என்ற அதிர்ச்சித் தகவல் இடம்பெற்றிருந்தது. அந்த அறிக்கை மாநாட்டில் விவாதிக்கப்படவில்லை என்றாலும், அதில் இருந்த முக்கியத் தகவல்கள் ஊடகங்களுக்குக் கசிந்தன.

அந்தச் செய்திக்கு மத்திய அரசு மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. அப்படியென்றால், பா.ஜ.க ஆட்சியில் சீனாவிடம் பறிபோன நிலங்களின் கதி என்ன என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

குமரகுரு, வெ.பொன்ராஜ்
குமரகுரு, வெ.பொன்ராஜ்

காங்கிரஸின் பொய் மூட்டை!

இந்த விவகாரம் குறித்து பா.ஜ.க-வின் மாநில செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞருமான குமரகுருபரனிடம் பேசினோம். “காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இந்தியாவுக்கு எதிராகப் படையெடுத்த சீனா, நம்முடைய நிலத்தை அபகரித்தது. ஆனால், அந்த நிலை இன்றைக்கு மாறிவிட்டது. பா.ஜ.க.-வின் ஆட்சியில் இந்தியாவைக் கண்டு சீனா அஞ்சுகிறது. பா.ஜ.க ஆட்சியில் ஓர் அங்குல நிலத்தைக்கூட சீனாவிடம் நாம் விட்டுக்கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. ஆனால், சீனா தொடர்பான விவகாரங்களில் காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் பல பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடுகிறார்கள். அதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை” என்கிறார் குமரகுருபரன்.

வெறும் வாய்ஜாலம்!

இது குறித்து முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்த வெ.பொன்ராஜிடம் பேசினோம்.

“2020-ம் ஆண்டு, கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் நிகழ்ந்தபோது, சுமார் 1,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்தது. அது பற்றிய செய்திகள் எல்லா தேசிய ஊடகங்களிலும், நாளேடுகளிலும் வெளியாகின. சாட்டிலைட் புகைப்பட ஆதாரங்களும் வந்தன. ஆனால், அது பற்றி இந்திய அரசு இதுவரை வாய் திறக்கவில்லை.

ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்பதற்கு எந்த முயற்சியையும் எடுக்காமல், ‘ஓர் அங்குலம் நிலத்தைக்கூட யாரும் ஆக்கிரமிக்க முடியாது’ என்று வாய்ஜாலம் காட்டுகிறார்கள். அதனால் எந்தப் பயனும் இல்லை. ஒன்று, சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நம்முடைய நிலத்தை மீட்க வேண்டும்.

பேச்சுவார்த்தை பலனளிக்காவிட்டால், சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்ற நடவடிக்கையில் இறங்க வேண்டும். மாறாக, சீனாவின் ஆக்கிரமிப்பைக் கண்டும் காணாததுபோல இருப்பது புத்திசாலித்தனமல்ல. அது கண்டனத்துக்குரியது” என்கிறார் வெ.பொன்ராஜ்.

‘நம்முடைய நிலம் பறிபோகிறதே’ என்று பதறும் குரல்களும் தேசபக்தியில்தான் சேரும் என்பதை உணருமா பா.ஜ.க?