மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கென தனியாக ஓர் ஐஏஎஸ் அதிகாரியை ஆணையராக நியமித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, அமைச்சர் உதயநிதி நன்றி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், தமிழக அரசு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாற்றி உத்தரவிட்டது. அதன்படி, 16 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 48 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அத்துடன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு தனியாக ஓர் ஐஏஎஸ் அதிகாரி, ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையராக, வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை ஆணையராக இருந்து வந்த ஜெசிந்தா லாசரஸ் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில், தமிழக அரசின் இந்த புதிய உத்தரவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், ``மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தின்படி மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்துக்கு தனிப்பொறுப்புடன் கூடிய ஆணையர் வேண்டுமென சட்டமன்ற கன்னிப்பேச்சில் வலியுறுத்தினோம்.
அந்த வகையில், தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக ஐ.ஏ.எஸ். நிலையில் அதிகாரியை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையராக நியமித்து வரலாறு படைத்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி. மாற்றுத்திறனுடையோர் உரிமைகள் வெல்லட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.